உள்ளூர் மக்களுக்கு பணிவாய்ப்பு மறுப்பு; கூடங்குளம் மின்நிலைய வாயிலில் 1000-க்கும் மேற்பட்டோர் முற்றுகை

உள்ளூர் மக்களுக்கு பணிவாய்ப்பு மறுப்பு; கூடங்குளம் மின்நிலைய வாயிலில் 1000-க்கும் மேற்பட்டோர் முற்றுகை

வட்டாட்சியர், காவல் துறை பேச்சுவார்த்தை

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நடைபெறும் பணிகளில் கடைநிலை ஊழியர்களாக உள்ளூர் மக்களே தேர்வு செய்யப்படுவார்கள் என்று அணுஉலை நிர்வாகம் சொல்லியிருந்த நிலையில், அதை முழுமையாகக் கடைபிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வந்தது. நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நீடிக்கிறது.

இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 34 பொறியாளர் பணி வாய்ப்புகளுக்காக கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்தே விண்ணப்பங்கள் பெறப்படுவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது. அதனால் பலர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த ஆள் சேர்ப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதியாக இந்தியக் குடிமக்கள் என்று நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த கூடங்குளம் அணுமின் நிலையம் ஆள்சேர்ப்பு 2021 தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பிரிவின்கீழ் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் பணி வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 139 பேரில் ஒருவர்கூட உள்ளூரைச் சேர்ந்தவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இன்று காலை திடீரென கூடங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் வின்ஸ்லி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அணுமின் நிலைய வாயிலில் கூடி, உள்ளூர் மக்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக முற்றுகைப் போராட்டத்தை ஆரம்பித்தனர். நேரம் போகப்போக அங்கு கூட்டமும் கூடிக் கொண்டிருக்கிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராதாபுரம் வட்டாட்சியரும், மாவட்டக் காவல் துறையினரும் உடனே அங்கு வந்து போராடும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் அணு உலை நிர்வாகத்திடமிருந்து உரிய பதில் எதுவும் இதுவரை வரவில்லை என்றே தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in