உய்யக்கொண்டான் ஆற்றை பாதுகாக்க கோரிக்கை

உய்யக்கொண்டான் ஆற்றை  பாதுகாக்க கோரிக்கை
நுரையாக காட்சியளிக்கும் உய்யக்கொண்டான் ஆறு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் வெட்டடப்பட்ட உய்யக்கொண்டான் ஆற்றை, மாசில்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் செயல்பட்டு வரும் ‘தண்ணீர்’ அமைப்பின் சார்பில், அதன் செயல் தலைவர் கே.சி.நீலமேகம் மற்றும் அதன் செயலாளர் கி.சதீஷ்குமார் ஆகியோர் இதுகுறித்து விடுத்துள்ள கோரிக்கை பின்வருமாறு.

“திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் காவிரி ஆற்றிலிருந்து பிரியும் உய்யக்கொண்டான் ஆறு , திருச்சி மாநகர் வழியாகக் கடந்து திருவெறும்பூர் வாழவந்தான்கோட்டை ஏரியில் இணைகிறது. இந்த ஆற்றை 1000 ஆண்டுக்கு முன் ராஜராஜசோழன் வெட்டினார்.

அதன்பின் வாழவந்தான் கோட்டை ஏரியிலிருந்து உய்யக்கொண்டான் விரிவாக்க வாய்க்கால் வெட்டப்பட்டு, அந்த வாய்க்கால் தஞ்சை மாவட்டம் சேராண்டி ஏரியில் நிறைவு பெறுகிறது. இந்த ஆற்றைப் பராமரிக்க அந்தக் காலத்திலேயே, ‘உய்யக்கொண்டான் ஆற்றுப் பாதுகாப்பு வாரியம்’ கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு 120 கிளை வாய்க்கால்கள் உள்ளன. இதன்மூலம் 32 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகிறது. 33 ஏரி, குளங்களை நிரப்புகிறது.

இப்படி வரலாற்றுப் பெருமை கொண்ட உய்யக்கொண்டான் ஆற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனக் கோரி, 2013-லிருந்து தண்ணீர் அமைப்பு உட்பட மாவட்டத்தில் பல அமைப்புகள் ஒருங்கிணைந்து, ‘உய்யக்கொண்டான் பாதுகாப்புக் குழு’ என மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக அன்றைய தமிழக முதல்வர் உய்யக்கொண்டான் ஆற்றை சீரமைக்க, 2014-ல் 14 கோடி திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியிலிருந்து பாலக்கரை பகுதியில் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆற்றில் தண்ணீர் வந்து, பாசனத் தேவை இருந்தால் அப்போது பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன.

அதன்பின் வந்த மாவட்ட ஆட்சியர்கள், உய்யக்கொண்டான் பாதுகாப்புக் குழு கூட்டத்தை நடத்தவில்லை. உய்யக்கொண்டான் ஆற்றில் தண்ணீர் குறையும்போது நுரை, துர்நாற்றம் வருவதுடன், மீன்களும் செத்து மிதக்கும். இது வருடா வருடம் நடக்கிறது.

உய்யக்கொண்டான் ஆற்றை சீரமைப்பதில் தொடக்கத்திலிருந்தே மாநகராட்சி தரப்பில் முழுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. மாநகராட்சி பகுதியிலிருந்து வரும் கழிவுநீர் உய்யக்கொண்டான் ஆற்றில் விடுவதால் திருச்சியின் கூவமாக மாறிவிடும்.

எனவே, கிராமப்புறங்களில் முன்பு இயங்கிய ‘உய்யக்கொண்டான் ஆற்றுப் பாதுகாப்பு வாரியத்தை’ மீண்டும் அமைக்க வேண்டும். நகர்ப்புறங்களில் தன்னார்வ ஆற்றுப் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். ஆற்றில் கழிவுநீர் கலப்பதை நிறுத்த வேண்டும்.

தொடர்ந்து நுரை, துர்நாற்றம் வீசும் தண்ணீரை ஆய்வு செய்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.