“கரோனா சுனாமி ஏற்படும்!” - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

தடுப்பூசிகளின் அவசியம் குறித்தும் வலியுறுத்தல்
டெட்ராஸ் அதானம்
டெட்ராஸ் அதானம்

டெல்டா, ஒமைக்ரான் என கரோனா வைரஸின் இரண்டு திரிபுகள் பல்வேறு நாடுகளில் பரவிவரும் நிலையில், கரோனா தொற்றுக்களின் சுனாமி ஏற்படும் என எச்சரித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இதுதொடர்பாக நேற்று (டிச.29) செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம், “டெல்டா, ஒமைக்ரான் திரிபுகள் இரட்டை அச்சுறுத்தல்கள். அவற்றால் கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. இதனால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது” எனக் கூறினார்.

அத்துடன் ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள் கரோனா தொற்றுக்குள்ளாவதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் 40 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் 194 நாடுகளில், 92 நாடுகள் அதைச் செய்யத் தவறிவிட்டன எனச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், நாடுகள் தங்களுக்கு இடையில் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பணக்கார நாடுகள் பூஸ்டர் டோஸ்களில் அதிகம் கவனம் செலுத்துவது ஏழை நாடுகளில் பூஸ்டர் டோஸ் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

“ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா திரிபுகளுடன் தற்போது ஒமைக்ரான் திரிபும் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளிலிருந்து பணக்கார நாடுகளும், தடுப்பூசி தயாரிப்பாளர்களும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அரசுகள், தடுப்பூசி உற்பத்தித் துறையினர், பொதுச் சமூகத்தினர் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, வரும் ஜூலை தொடக்கத்தில் ஒவ்வொரு நாட்டிலும் 70 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்ய பணியாற்ற வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

டாக்டர் சவுமியா சுவாமிநாதன்
டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

இதற்கிடையே, ஒமைக்ரானுக்கு எதிராகத் தடுப்பூசிகள் வெற்றிகரமாகச் செயல்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.

“தடுப்பூசிகளால், கரோனா வைரஸுக்கு எதிராக ‘டி செல்’ நோயெதிர்ப்பு சக்தி சிறப்பாக வேலைசெய்யும். இது தீவிரமான நோய்த்தாக்குதலிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதைச் செய்துவிடுங்கள்” என அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in