உலகை ரசித்து வாழ்ந்த தேநீர் கடைக்காரர் காலமானார்

உலகை ரசித்து வாழ்ந்த தேநீர் கடைக்காரர் காலமானார்
விஜயன்

உலகை மிகவும் ரசித்தும், நேசித்தும் வாழ்ந்தவர் விஜயன். தேநீர் கடை வைத்திருந்த இவர் அடிக்கடி தன் கடையை அடைத்துவிட்டு, வெளிநாடுகளுக்குத் தன் மனைவியோடு சுற்றுலா நிமித்தமாக பறப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இவர், இன்று(நவ.19) மாரடைப்பால் உயிரிழந்தார்.

பல நாடுகளின் நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள்
பல நாடுகளின் நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள்

கேரளத்தைச் சேர்ந்த விஜயன் தேநீர் கடை நடத்தி வந்தவர். இதுவரை, 24 நாடுகளுக்கு இந்தத் தேநீர் கடைக்காரர் தன்மனைவி மோகனாவோடு சுற்றுலா சென்றுவந்திருக்கிறார். கரோனாவால், கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலா செல்லமுடியாமல் தவித்துவந்த விஜயன் தம்பதி, கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்று திரும்பினர்.

இவரது தேநீர் கடை இருப்பது எர்ணாகுளத்தில்தான் என்றாலும், கடைக்குள் பலநாடுகளின் நேரத்தை காட்டும்வகையில் வரிசைகட்டி நிற்கும் கடிகாரங்கள் இவரது குணத்தைச் சொல்லும். எர்ணாகுளம், காந்திநகரில் பாலாஜி காபி ஹவுஸை நடத்திய விஜயனுக்கு ஆலப்புழா மாவட்டத்தின் சேர்த்தலா பூர்வீகம். எர்ணாகுளத்துக்கு தொழில்நிமித்தமாக விஜயன் இடம்பெயர்ந்து 46 ஆண்டுகள் ஆகின்றன. சைக்கிளில் கேன் வைத்து டீ விற்பதில் வாழ்க்கையைத் தொடங்கிய விஜயனின் அத்தனை சுக துக்கங்களிலும் உடன்பயணிக்கும் அவர் மனைவி மோகனாவும், இவரோடு சேர்ந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை விமானம் ஏறிவிடுகிறார். தங்கள் அன்றாட உழைப்புக்கு மத்தியில் இது இளைப்பாறுதலாக இருப்பதாகச் சொல்லும் இந்தத் தம்பதியர், வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றே பிரபலம் ஆனவர்கள்.

விஜயன், மோகனா
விஜயன், மோகனா

முன்பொருமுறை காமதேனு இதழுக்காக விஜயனை சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது அவர்,"எர்ணாகுளத்துக்கு டீக்கடை நடத்த வந்ததற்கே ஒரு காரணம் இருக்கிறது. வெளியூரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையின் வெளிப்பாடுதான் அது. கொச்சினில் ரயில், விமானம், கப்பல் என அனைத்தையும் பார்க்கலாம் என்றுதான் இங்கு வந்தேன். எனக்கு பயணம் செய்வது ரொம்பப் பிடிக்கும். முதலில் சின்ன, சின்ன பயணங்கள் போக ஆரம்பித்தேன். டீக்கடையில் நானும், என்னோட மனைவியும்தான் இருப்போம். வேலைக்கு ஆள் யாரும் வைத்துக்கொள்வதில்லை. இதனால், இரண்டுபேரும் மனதுக்கு தோன்றும்போது கடையை அடைத்துவிட்டுப் பயணம் போய்விடுவோம்.

வாழ்க்கையில் நாம் சம்பாதிப்பது மட்டும் வரவு கணக்கில் சேர்ந்துவிடாது. அதை அனுபவிக்கவும் வேண்டும். அப்போதுதான் கையில் இருக்கும் பணத்துக்கே மரியாதை. ஐந்து, ஆறு மாதங்கள் டீ ஆத்துவேன். கூடவே, என் கடையில் காலை டிபனும் உண்டு. இதில் எல்லாம் ஓரளவு வருமானம் வந்ததும் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவோம். ஒருவாரத்தில் இருந்து 15 நாள்கள் வரை தங்கி சுற்றிப்பார்த்துவிட்டு திரும்ப வருவோம். எகிப்து, இஸ்ரேல், பாலஸ்தீனம், இங்கிலாந்து, சீனா, தாய்லாந்து, அர்ஜெண்டினா என இதுவரை 24 நாடுகளைப் பார்த்துவிட்டோம்’’ என வாழ்வின் ரசனைப் பக்கங்களைப் பேசினார்.

அண்மையில் ரஷ்யா போய்த் திரும்பிய விஜயனுக்கு, இன்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கொச்சினில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் உயிரிழந்தார். இந்தத் தகவலை அவரது பேரன் மஞ்சுநாத் உறுதிசெய்தார். உலகை ரசித்து வாழ்ந்த மனிதரின் உயிரிழப்பு, மலையாளிகள் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in