50 ஆண்டுகளாக தாகம் தீர்த்து வந்தார்: கால்நடைகளின் தோழன் பெரியவர் சித்தவன் மரணம்

50 ஆண்டுகளாக தாகம் தீர்த்து வந்தார்: கால்நடைகளின் தோழன் பெரியவர் சித்தவன் மரணம்
சித்தவன்

கடந்த அரைநூற்றாண்டாக கால்நடைகளின் தாகம் தீர்க்க இலவசமாக தண்ணீர் வழங்கிவந்த பெரியவர் சித்தவன் (81) இன்று உயிரிழந்தார். கோவில்பட்டி, கருப்பூரைச் சேர்ந்த சித்தவனின் மெச்சத்தக்க பணிகள் அப்பகுதிவாசிகளை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கருப்பூரைச் சேர்ந்தவர் சித்தவன். கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் மானாவாரி சாகுபடிதான். கூடவே இந்தப் பகுதி விவசாயிகள் அதிகளவில் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுவருகின்றனர். மழைக்காலங்களில் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் வறட்சியான கோடைகாலங்களில் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் சவாலான விசயம். இதற்காகவே, கருப்பூரைச் சேர்ந்த சித்தவன், தன் தோட்டத்திலேயே பம்ப் செட் மூலம் தண்ணீர் எடுத்து, அந்த சுற்றுவட்டார கால்நடைகளின் தாகம் தீர்க்க தன் தோட்டத்திலேயே ஒரு இடத்தில் தண்ணீரை இலவசமாக வழங்கிவந்தார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தோட்டத்தில் தண்ணீர் குடிக்க வந்த ஆடுகள் உற்சாகமாக துள்ளிக்குதித்து செல்வதைப் பார்த்த சித்தவன், அப்போதிருந்தே கால்நடைகளின் தாகம் தீர்க்கும் பணியினைக் கையில் எடுத்தவர். கருப்பூர் மட்டுமன்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்துக்கும் அதிகமான கிராமங்களில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள், சித்தவனின் தோட்டத்திற்கு தங்கள் ஆடு, மாடுகளை தண்ணீர் குடிக்க தினமும் கூட்டம், கூட்டமாக அழைத்துவருவது வழக்கம். இதற்காகவே தினமும் மதியம் 12 மணி முதல் 3 மணிவரை தன் தோட்டக் கதவுகளைத் திறந்துவைத்துவிடுவார் சித்தவன்.

இதையெல்லாம், விட விசேசம், தன் தோட்டத்தில் தண்ணீர் தேவைக்கான மின்மோட்டார் சாவியை யார் வேண்டுமானாலும் எடுத்து மோட்டாரை தேவைக்கு போட்டுக்கொள்ளலாம் என சாவியையும் தோட்டத்தில் அனைவரும் அறியும்வகையில் பொதுவில் வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருந்தார். கால்நடைகளின் தோழனான பெரியவர் சித்தவன் வயோதிகத்தால் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு கருப்பூர் சுற்றுவட்டார விவசாயிகளை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in