காற்றில் பறக்கும் கரோனா விதிமுறைகள்!

மக்கள் பிரதிநிதிகளுக்கு வேண்டாமா பொறுப்புணர்வு?
காற்றில் பறக்கும் கரோனா விதிமுறைகள்!
வெள்ள சேதத்தைப் பார்வையிடும் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி

குமரி மாவட்டத்தில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்புகளைச் சூழ்ந்த நேரத்தில், மக்கள் பிரதிநிதிகளின் பணிகள் கவனிக்கத்தக்கதாக இருந்தது. அதேநேரத்தில், கரோனா விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர். முன்னுதாரணமாக இருக்கவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் இப்படி இருக்கலாமா? எனவும் கேள்வி எழுந்துள்ளது.

ஆலோசனைக் கூட்டம்: அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும்
ஆலோசனைக் கூட்டம்: அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும்

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. பலரும் தங்கள் நெருக்கத்துக்குரியவர்களை இழந்தனர். கரோனா வைரஸ் தொற்று இப்போது கட்டுக்குள் வந்திருப்பதால், திரையரங்கத்திலும் 100 சதவீத இருக்கை அனுமதிக்கப்பட்டுள்ளது. வீதிக்கு, வீதி கரோனா வைரஸ் தொற்றை வீழ்த்தும்வகையில் தடுப்பூசி முகாம்களும் சூடுபிடிக்கின்றன. இருந்தும் மக்கள் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுவது, மாஸ்க் அணிவது ஆகியவை அவசியம் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. கரோனா இன்னும் முற்றாக நம்மைவிட்டு விலகாத நிலையில், மக்களில் சிலர் இந்த விதிகளையெல்லாம் தொடர்ந்து மீறுவதைப் பார்க்கமுடிகிறது. காவல் துறையினரும் ஆங்காங்கே சாலைகளில் நின்றுகொண்டு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். ஆனால், குமரியில் பெருமழை நேரத்தில் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளும், மூத்த அரசியல்வாதிகளும் கூட, முகக்கவசம் இல்லாமல் பார்வையிடும் காட்சிகள் தொடர்ந்து அரங்கேறிவருகின்றன.

அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர்
அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர்

நாகர்கோவிலில் மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவந்தக் கூட்டத்திலும் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளில் சிலர் முகக்கவசம் அணியவில்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, குமரியில் மழை சேதங்களை பார்வையிட்டு நிவாரண உதவிகளும் வழங்கினார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி உட்பட யாருமே முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியும் காணாமல் போனது. குமரியில் அதிமுகவினரும் முகக்கவசம் இல்லாமலேயே களப்பணி ஆற்றினர்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் இந்த நொடியிலும் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. பள்ளிக்கூடம், அலுவலகம் என சகல இடங்களிலும் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் முகக்கவசத்தை துறந்துவிட்டு இயங்குவது சரியானது இல்லை என்பதே, சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in