காஷ்மீரிகள் அல்லாதோரும் வாக்களிக்க வாய்ப்பு!

கனல் கக்கும் காஷ்மீர் அரசியல் களம்
காஷ்மீரிகள் அல்லாதோரும் வாக்களிக்க வாய்ப்பு!

“பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க 25 லட்சம் பேருக்கு காஷ்மீரில் வாக்குரிமை அளிக்கப்படவிருக்கிறது. வெளியிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து பாஜகவுக்கு வாக்களிக்க வைக்கப்போகிறார்கள். உள்ளூரைச் சேர்ந்த ஒரு ஃபாசிஸ்ட்டை ஆட்சியாளராக அமரவைப்பார்கள். இது காஷ்மீர் தேர்தல் ஜனநாயகத்தின் சவப்பெட்டி மீதான கடைசி ஆணி” - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவருமான மெஹ்பூபா முஃப்தி முன்வைத்திருக்கும் அதிரடிக் குற்றச்சாட்டு இது. இது தொடர்பாக காஷ்மீரின் பிற கட்சிகளும் கண்டனக் குரல்களை எழுப்பிவருகின்றன.

காஷ்மீர் தேர்தல் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் எடுத்திருக்கும் முடிவுதான் இந்த சர்ச்சைக்குக் காரணம். காஷ்மீரில் தங்கியிருக்கும் வெளியூர் மக்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என காஷ்மீர் தலைமைத் தேர்தல் அதிகாரி ஹ்ரிதேஷ் குமார் அறிவித்துள்ளார். இதன்படி காஷ்மீரில் வசிக்கும் ஊழியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைப் பதிவுசெய்து தேர்தலில் வாக்களிக்கலாம். இது காஷ்மீர் அரசியல் கட்சிகளைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அடுத்தடுத்த அதிர்வுகள்

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டக்கூறு, 2019 ஆகஸ்ட் 5-ல் நீக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலில் ஜம்மு - காஷ்மீர் தொகுதி மறுவரையறை ஆணையத்தை, 2020 மார்ச் 6-ல் மத்திய அரசு அமைத்தது. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் 2021 ஜூன் மாதம் தொடங்கின. 2021டிசம்பர் 20-ல் இதன் வரைவு அறிக்கை வெளியானது. இதன்படி, சட்டப்பேரவையில் ஜம்மு பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37-லிருந்து 43 ஆகும். அதேசமயம், காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 46-லிருந்து 47 ஆக மட்டுமே உயரும் என அறிவிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை கிளப்பியது. ஆணையத்தில் இடம்பெற்றிருக்கும் காஷ்மீர் எம்பி-க்கள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

இந்தச் சூழலில், காஷ்மீர் தலைமைத் தேர்தல் அதிகாரியின் சமீபத்திய அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்படி, காஷ்மீரில் நிரந்தர முகவரி இல்லாதவர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியும். “காஷ்மீரில் ஒருவர் எவ்வளவு காலமாக வசித்து வருகிறார் என்பது முக்கியமில்லை. சம்பந்தப்பட்ட நபர் காஷ்மீரில் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து வாக்காளர் பதிவு அதிகாரி (ஈஆர்ஓ) இறுதி முடிவை எடுக்கலாம்” என்று கூறியிருக்கிறார் ஹ்ரிதேஷ் குமார். வெளிமாநிலத்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்வதற்கான ஒரே நிபந்தனை, அவர்கள் தங்கள் மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து தங்கள் பெயரை நீக்கிக்கொள்ள வேண்டும்; அவ்வளவுதான்.

கூடவே, பிற மாநிலங்களில் பணிபுரியும் காஷ்மீர் மக்கள், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உள்ளிட்டோர் சர்வீஸ் வோட்டர் எனும் பெயரில் வாக்காளர் பட்டியலில் சேர்ந்து தேர்தலில் வாக்களிக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேற்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்படவிருக்கிறது. ஆக, 20 அல்லது 25 லட்சம் புதிய வாக்காளர்களில் காஷ்மீரிகள் அல்லாதவர்கள் கணிசமாக இருப்பார்கள்.

ஏன் எதிர்ப்பு?

பொதுவாக, காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு கிடைக்கும். எனினும், காஷ்மீரில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கு அந்தக் கட்சிகள் குறித்து அதிகம் தெரியாது; அல்லது அவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்தமாட்டார்கள். அவர்களுக்கு நன்கு பரிச்சயமானவை தேசியக் கட்சிகள்தான். காங்கிரஸ், பாஜக ஆகியவை தேசியக் கட்சிகள் என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்க விஷயம். காங்கிரஸைப் பொறுத்தவரை ஏற்கெனவே உட்கட்சிப் பிரச்சினைகளால் கலகலத்துக் கிடக்கிறது. காங்கிரஸ் தலைமையுடன் தொடர்ந்து முரண்பட்டுவரும் ஜி-23 தலைவர்களில் பிரதானமானவர் குலாம் நபி ஆசாத். இவர் காஷ்மீரின் பிரச்சாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்தப் பொறுப்பிலிருந்து விலகியது காஷ்மீரில் காங்கிரஸின் நிலை என்ன என்பதைக் காட்டிவிட்டது. இந்நிலையில், புதிய வாக்காளர்களால் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.

இதன் அடிப்படையில் தேசிய மாநாட்டுக் கட்சி (என்சிபி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி (ஜேகேபிசி) ஆகியவை இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்திருக்கின்றன. ‘காஷ்மீரில் தேர்தலை ஒத்திவைத்து தொகுதிகளை வலுக்கட்டாயமாகப் பிரித்து பாஜகவுக்கு ஆதரவான சூழலை உருவாக்க மத்திய அரசு முதலில் முயற்சித்தது. இப்போது உள்ளூர் அல்லாதவர்களை அனுமதிப்பது தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிதான்’ என்று மெஹ்பூபா ட்வீட் செய்தார். “ஹிட்லர் எவ்வளவு முயன்றும் யூதர்களை ஒழிக்க முடியவில்லை. இஸ்ரேல் எத்தனை முயன்றாலும் பாலஸ்தீனத்தை ஒழிக்க முடியவில்லை. அந்த வரிசையில், ஒரே ஒரு காஷ்மீரி மிஞ்சியிருந்தாலும் பாஜகவின் நோக்கங்கள் நிறைவேற அனுமதிக்கமாட்டார்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவைக் கண்டித்தாலும் இதன் மூலம் பாஜகவால் காஷ்மீரில் வெற்றி பெற்றுவிட முடியாது என்றே சூளுரைத்திருக்கிறார்.

எப்போது தேர்தல்?

வரும் டிசம்பர் மாதத்தில் குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் சேர்த்து காஷ்மீருக்கும் தேர்தல் நடக்கும் என்றே கருதப்பட்டது. எனினும், இறுதி வாக்காளர் பட்டியலே நவம்பர் 25-ல்தான் வெளியாகும் என ஹ்ரிதேஷ் குமார் கூறியிருக்கிறார். உண்மையில் அக்டோபர் 31-ம் தேதியே இறுதிப் பட்டியல் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது தள்ளிப்போய்விட்டது. இனி அதுதொடர்பான பணிகள் முடிவடைந்ததும் காஷ்மீரில் கடும் குளிர்காலம் தொடங்கியிருக்கும். பிப்ரவரியில்தான் குளிர் சற்று குறையும். அதன் பின்னரே தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இவ்விஷயத்தில் பாஜகவுக்குச் சாதகமாக, வேண்டுமென்றே பணிகள் தள்ளிப்போடப்படுவதாகவும் காஷ்மீர் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதற்கிடையே பயங்கரவாதப் பிரச்சினைகள் வேறு. எல்லையில் நடக்கும் பெரிய அளவிலான தாக்குதல்களைவிடவும் காஷ்மீருக்குள் நடக்கும் துப்பாக்கிச்சூடு போன்ற தாக்குதல்களே தற்போது அதிகம். எல்லையில் பாதுகாப்புப் படையினரின் கவனம் குவிவதைத் தடுக்க பயங்கரவாதிகள் இதை ஓர் உத்தியாகவே பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. காஷ்மீர் பண்டிட்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியிருக்கின்றன.

காஷ்மீர் பண்டிட்கள், காவலர்கள் உள்ளிட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாகக் கூறும் மெஹ்பூபா, இதுபோன்ற ஒவ்வொரு மரணத்தையும் பாஜக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாகவும் குற்றம்சாட்டுகிறார். இந்தச் சூழலில், காஷ்மீரில் ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற, நிலையான ஆட்சி அமைவது அவசியம் என்றே அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்துகிறார்கள். கூடவே, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனும் குரல்களும் வலுக்கின்றன.

காஷ்மீரில் 370-வது சட்டக்கூறு அமலில் இருந்தபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆட்சிக்காலம் 6 ஆண்டுகளாக இருந்தது (370-வது சட்டக்கூறைக் கொள்கை ரீதியாக எதிர்த்தது போலவே, 6 ஆண்டுகால ஆட்சிக் காலம் தொடர்வதையும் பாஜக எதிர்த்து வந்தது). அந்த சட்டக்கூறு நீக்கப்பட்டுவிட்ட நிலையில், இனி தேர்ந்தெடுக்கப்படும் அரசு 5 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்கும். ஜனநாயகபூர்வமாக ஓர் அரசு அமைந்து 5 ஆண்டுகள் நிலையாக இருந்து ஆட்சி செய்தால், காஷ்மீரில் அமைதி திரும்பும். நல்லதே நடக்கட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in