பாரம்பரிய விவசாயத்தின் பெருமை போற்றும் பேராசிரியர்!

நெல் சாகுபடியில் கவனிக்க வைக்கும் சுந்தர்
சுந்தர்
சுந்தர்

தண்ணீர் தட்டுப்பாடு, கட்டுப்படியாகாத விலை எனப் பல்வேறு காரணங்களால் விவசாயிகளே விவசாயத்தைக் கைவிட்டு வெளியேறும் இன்றைய சூழலில், தனியார் கல்லூரிப் பேராசிரியரான சுந்தர் பாரம்பரிய விவசாயத்தின் மீது கொண்டிருக்கும் ஆர்வம் ஆச்சரியமூட்டுகிறது. சொந்தமாக விவசாய நிலம் இல்லை என்றாலும், 8 ஏக்கரை குத்தகைக்கு எடுத்து நெல்சாகுபடி செய்யும் அளவுக்குப் பாரம்பரிய விவசாயத்தின் மீது பற்று கொண்டிருக்கிறார் சுந்தர்.

ஆளுயர நெற்கதிரோடு சுந்தர்
ஆளுயர நெற்கதிரோடு சுந்தர்

விவசாயக் குடும்பம்

குமரி மாவட்டம், பறக்கை கிராமத்தில் இருக்கிறது அந்த வயல். பாரம்பரிய நெல் ரகமான ‘மாப்பிள்ளை சம்பா’ ரகத்தை அங்குதான் சாகுபடி செய்கிறார் சுந்தர். நாம் வயலுக்குச் சென்றிருந்த நேரத்தில் சுற்றுவட்டார வயல்களில் இருந்த நெற்பயிர்கள் எல்லாம் சராசரி அளவிலேயே இருக்க, சுந்தரின் வயலில் இருந்த பாரம்பரிய நெல் ரகங்கள் மட்டும் ஆள் உயரத்தில் பிரம்மாண்டமாக இருந்தன. விளைந்து நிற்கும் நெல்மணிகளைப் பிடித்துக்காட்டியபடியே நம்மிடம் பேசத் தொடங்கினார் சுந்தர்.

“நான் தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். எனக்கு சின்ன வயதில் இருந்தே விவசாய ஆர்வம் அதிகம். என் தாத்தா, அப்பா என தலைமுறை, தலைமுறையாகவே விவசாயம் செய்துவருகிறோம். என் அப்பா விவசாய நிலங்கள் இருந்தாலும் கொத்தனார் வேலைசெய்ய வெளிநாட்டுக்குப் போனார். இதனால் சின்ன வயதிலேயே விவசாய நிலங்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு வந்தது. ஒருகட்டத்தில் விவசாயம் செய்வது மனதுக்குப் பிடித்த தொழிலாகிவிட்டது” என்கிறார் சுந்தர்.

தலைக்கு மேல் தழைத்துநிற்கும் நெற்கதிர்
தலைக்கு மேல் தழைத்துநிற்கும் நெற்கதிர்

நச்சு கலப்பற்ற உணவுக்காக...

சுந்தருக்கு இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்பதிலேயே அலாதி ஆர்வம். இதில் லாபநோக்கத்தைவிட, சாப்பிடும் உணவு ரசாயன நச்சுக் கலப்பின்றி, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனும் விருப்பமே அடித்தளமாக இருந்திருக்கிறது. குறைந்தபட்சம் தன் குடும்பத்துக்கேனும் ஆரோக்கிய உணவைக் கொடுத்துவிட வேண்டும் எனும் செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு செயல்படத் தொடங்கியவர் இவர். மகிழ்ச்சி ததும்ப அதைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“எங்களிடம் இருந்த வயல் ஒருகட்டத்தில் தோப்பாக மாறிவிட்டது. அதில் இப்போது தென்னை மரங்கள் நிற்கின்றன. சொந்த வயல் இல்லாவிட்டாலும், இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களைச் சாகுபடி செய்யும் ஆசை மட்டும் மாறவில்லை. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோபாலின் உதவியோடு 8 ஏக்கர் விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, பாரம்பரிய நெல் ரகங்களைச் சாகுபடி செய்துவருகிறேன்.

இயற்கை விவசாயத்துக்கென்றே வீட்டில் 5 மாடுகளும் வளர்த்து வருகிறேன். அதன் மூலம் மாட்டுச்சாணம், சிறுநீர் ஆகியவற்றை எடுத்து உரமாக வயலில் போடுகிறேன். இவற்றைக் கொண்டு ஜீவாமிர்தக் கரைசல் தயாரித்து வயலில் தெளிக்கிறேன். இதில் கடையில் நாம் விலை கொடுத்து வாங்கும் டி.ஏ.பி உரத்துக்கு இணையான சக்தி கிடைக்கிறது. 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரைச் சேகரித்து, அதோடு 10 கிலோ சாணம், 7 கிலோ சர்க்கரை ஆகியவற்றையும் சேர்த்து ஒரு குடுவையில் போட்டு இறுக மூடிவிடுவேன். இந்தக் கலவையை தினமும் காலை, மாலையில் மட்டும் திறந்து கிளறிவிடுவேன். மூன்றுநாள் கழித்து, இதைத் தண்ணீரோடு சேர்ந்து வயலில் தெளிக்கலாம். இப்படித் தெளித்தால் டி.ஏ.பியை விட பல மடங்கு வயலுக்கு சக்தி கிடைக்கும். பயிர் வளர்ச்சியூக்கியாக செயல்படும்” எனப் பேராசிரியருக்கே உரிய தன்மையோடு விவரிக்கிறார் சுந்தர்.

இயற்கை முறையில் பூச்சிவிரட்டி

இதேபோல் பூச்சித் தொந்தரவுகளில் இருந்து நெல் மகசூலைக் காக்க, மீன் அமினோ அமிலம் எனும் இயற்கை வழி பூச்சிவிரட்டியையும் தானே தயாரித்து அடிக்கிறார் சுந்தர். இதன் மூலம் நெல்லுக்கு இலை வழி ஊட்டமும் கிடைப்பதாகச் சொல்லும் சுந்தர், அதைப் பற்றியும் நம்மிடம் விளக்கினார்.

“குமரி மாவட்டம் கடலோர மாவட்டம் என்பதால், இங்கு இயல்பாகவே மீன் வளமும் அதிகம். அதனால் ஆண்டுமுழுவதும் மீன் கிடைக்கும். எனவே, மீன் கழிவுகளும் அபரிமிதமாகக் கிடைக்கும். சாதாரணமாக ஒரு உணவகத்தில் போய்க் கேட்டால்கூட மீன்கழிவைக் கொடுத்துவிடுவார்கள். மீன்கழிவுகளைச் சேகரித்து அவற்றைச் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அதனோடு நாட்டுச் சர்க்கரை சேர்த்து 41 நாட்களுக்கு இறுக மூடிவைக்க வேண்டும். இடையில் ஒருமுறை மட்டும் திறந்து நன்றாகக் கிளறிவிடவேண்டும். 41 நாட்கள் கழித்துப் பார்க்கும்பொழுது தேன் போல் இருக்கும். இதை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி என சேர்த்து தெளித்துவிடுவேன். இதன்மூலம் நெல் எப்போதும் பசுமை மாறாமல் இருக்கும். பொதுவாகவே பூச்சிகள் அமாவாசை, பவுர்ணமி நேரங்களில்தான் பெரும்பாலும் இனப்பெருக்கம் செய்யும். அப்போது இதை அடித்தால் இனப்பெருக்கம் தடைபடுவதோடு, பூச்சிகளும் ஓடிவிடும்” என விவரித்துக்கொண்டே நெல் மணிகளின் உயரத்தைக் காட்டுகிறார்.

பெருமைக்குரிய அந்தஸ்து

கல்லூரி பேராசிரியர் என்னும் ‘ஒயிட் காலர்’ பணியில் இருந்தாலும், சுந்தருக்கு பாரம்பரிய விவசாயத்தின் மீதுதான் அளவுகடந்த நாட்டம். தனது முயற்சிகளுக்கு தனது குடும்பத்தினரும் பெரிதும் ஒத்துழைப்பதாகச் சொல்கிறார் சுந்தர்.

“என்னதான் நாம் வேறு பணிகள் செய்து சம்பாதித்தாலும் விவசாயி என்று சொல்லும்போது வரும் சந்தோஷம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. நான்கு பேர் நாம் உருவாக்கிய விளைபொருளைச் சாப்பிடுகிறார்கள் என்பதே எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்? இதில் எனக்கு லாபமே இல்லாவிட்டாலும் ஆரோக்கியமான உணவை என் சுற்றத்தாருக்கும், குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் கொடுக்கிறேனே அந்தத் திருப்தி இருக்கிறது. முழுக்க குத்தகை நிலத்தில்தான் நெல் விவசாயம். நான்கைந்து வயல்களில் சாகுபடி செய்கிறேன். மாப்பிள்ளை சம்பா இந்த வயலில் இருக்கிறது. இதுபோக, கொல்லன் சம்பா, கருப்பு கவுனியும் போட்டிருக்கிறேன். இதில் மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால், எப்போதும் மாப்பிள்ளை போல் இளமையாகவே இருக்கலாம்” என்கிறார் சிரித்துக்கொண்டே.

சுந்தருடன் விவசாயி கோபால்
சுந்தருடன் விவசாயி கோபால்

சுந்தருக்கு இயற்கையின் மீதான காதல் வரக் காரணமாக இருந்தது, இவரது கல்லூரியில் இயற்பியல் பாடம் நடத்திய செந்தில்நாத் என்னும் ஆசிரியர்தான். முனைவர் பட்டம்பெற்ற செந்தில்நாத், தனியார் கல்லூரியில் பார்த்துவந்த பேராசிரியர் பணியையே விட்டுவிட்டு 15 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டே சுந்தரும் இயற்கை விவசாயத்தில் கால்பதித்துள்ளார்.

ஆத்ம திருப்திக் கணக்கு

சுந்தருக்கு வயல் குத்தகைக்குப் பிடித்துக்கொடுத்த கோபால் கூறும்போது, “40 வருடங்களாக நான் ரசாயன உரம் போட்டுத்தான் விவசாயம் செய்துவந்தேன். இயற்கை விவசாயத்தில் சுந்தர் காட்டிய ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு நானும் அதில் ஈடுபட்டேன். இவ்வளவு உயர நெல்லை இந்தப் பகுதியிலேயே பார்த்தது இல்லை” என்றார்.

‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது’ என்பது பழமொழி. அது பல நேரங்களில் நிஜமொழியாகவும் இருப்பதால் தான், விவசாயத்தில் போதிய வருமானம் இல்லை எனப் பலரும் அதைவிட்டு வெளியேறுகின்றனர். நம்மிடம் அதைப் பற்றிப் பேசிய சுந்தர், “மற்ற விவசாயிகளைப் போல் கொள்முதல் மையத்திலும், வெளிச்சந்தையிலும் விளைச்சலை நான் கொடுப்பதில்லை. ஆரோக்கியத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள் தேடிவந்து வாங்கிச்செல்கின்றனர். ஆனாலும் இது லாபக்கணக்கு இல்லை... ஆத்ம திருப்திக் கணக்கு!’’ என்று பெருமிதத்துடன் சொல்கிறார்.

பாரம்பரிய விவசாயத்தின் பெருமை உணர்ந்த சுந்தருக்கு இயற்கையின் ஆசி கிட்டட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in