25 வருடமாக உழைத்த எனக்கு சினிமா தந்த பரிசு இதுதான்... வேதனையில் கேமராமேன் ராஜராஜன்!

கருணாநிதி கையால் விருதுபெறும் ராஜராஜன்
கருணாநிதி கையால் விருதுபெறும் ராஜராஜன்

25 வருட காலமாக சினிமாவில் நாய் மாதிரி உழைத்தும் தனக்கு உரிய அங்கீகாரமோ வசதியோ இல்லை என பிரபல கேமராமேன் ராஜராஜன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ராஜராஜனின்பழைய, புதிய புகைப்படங்கள்
ராஜராஜனின்பழைய, புதிய புகைப்படங்கள்

தமிழ் சினிமா உலகில்  ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ராஜராஜன் என்கிற பாண்டியன். இவர் ‘ராஜாதிராஜா’, ’மெல்லதிறந்தது கதவு’, ‘நான் பாடும் பாடல்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘வைதேகி காத்திருந்தாள்’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவுக்காக கருணாநிதி கையால் விருது வாங்கி இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பல  திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த இவரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் இவரை  சமீபத்தில் பிரபல சேனல் ஒன்று பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தது. அதில் அவர் தன்னுடைய திரைப்பயணம் குறித்து  விரிவாக பேசியிருந்தார்.

'நான் வாகினி ஸ்டூடியாவில் கேமரா உதவியாளராக இருந்தேன். முதலில் பாலுமகேந்திரா படங்களில் உதவியாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அவரின் படத்திற்கு பின் தொடர்ந்து எனக்கு தனியாக ஒளிப்பதிவாளராக படம் பண்ணுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. பணம் விஷயத்தில் பெரிதாக டிமாண்ட் செய்ய மாட்டேன். இதனால் எனக்கு பணத்தை ஒழுங்காக வாங்க தெரியாது என்று இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் அடிக்கடி சொல்வார். இப்போது வரை எனக்கு நான் பணிபுரிந்த எந்த படத்திலும் செட்டில்மெண்ட் கிடைத்ததில்லை.

ராஜராஜன்
ராஜராஜன்

அட்வான்ஸ் மட்டுமே கொடுத்தார்கள். படம் நன்றாக ஓடினாலும் கூட அதற்கான முறையான முழு ஊதியம் எனக்கு கிடைத்தபாடில்லை. உதாரணத்துக்கு ‘அம்மன் கோயில் கிழக்காலே’ படத்துக்கு ரூ.15,000 பேசினார்கள். படம் நன்றாக ஓடியது. ஆனால், எனக்கு இன்னும் அந்த படத்திற்கான செட்டில்மெண்ட் வரவில்லை. சினிமாவின் நிலைமை இது தான். 

25 வருடம் சினிமாவில் கண்மூடித்தனமாக இரவு பகலாக உழைத்தேன். சில சமயம் படப்பிடிப்பில் அடியும்  பட்டிருக்கிறது. கேமரா முகத்தில் விழுந்து பல் உடைந்திருக்கிறது.  ரவில் வீட்டுக்கு போன நாட்கள் மிக குறைவு. என் பிள்ளைகள் என்னை அந்நியராகவே பார்த்தார்கள். ஏனென்றால், நான் வீட்டில் இருப்பதில்லை. பெரும்பாலான நேரம் சினிமாவில் பரபரப்பாக பொழுதை கழித்துவிட்டு வீட்டுக்கு வந்தாலும் நாய் மாதிரி வள்வள் என்று விழுவேன். 

அந்த காலத்தில் நாங்கள் மனநிறைவாக பணி செய்வோம். நான் பணிபுரிந்த பல முன்னணி நடிகர்களும் தங்கமானவர்கள். விஜயகாந்த் எனக்கு மிகவும் நெருக்கம். நல்ல மனிதர். பிரபுவும் மிகவும் அன்பானவர். அப்படியான மனிதர்களுடன் பணிபுரிந்த நினைவுகளால் தான் நாங்கள் இன்றும் ஆரோக்கியமாக இருக்கிறோம். இப்போது அந்த காலத்தை நாங்கள் மிஸ் பண்ணுகிறோம். 

அதுதான் பொற்காலம். இப்போது இன்னும் நேர்மை குறைந்திருப்பதாகவே தோன்றுகிறது. இப்போது எனக்கு எதுவும் வேண்டாம். திரும்பவும் சினிமாவில் பணிபுரியும் எண்ணம் இல்லை. நான் என் குடும்பத்துடன் மதுரை அலங்காநல்லூரில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in