ஸ்பா, மசாஜ் மையங்களில் கண்காணிப்பு கேமரா: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஸ்பா, மசாஜ் மையங்களில் கண்காணிப்பு கேமரா: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் செயல்படும் அனைத்து ஸ்பா மற்றும் மசாஜ் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடுமாறு, தமிழக காவல் துறைத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. சட்டப்படியும், அரசு வகுத்த விதிமுறைகளின்கீழும் செயல்படும் தங்கள் மையத்தின் செயல்பாடுகளில், சோதனை என்ற பெயரில் அடிக்கடி போலீஸார் தொந்தரவளித்து வருவதாகவும், அவ்வாறான காவல் துறை செயல்பாட்டுக்கு தடைவிதிக்க உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியிருந்தார்.

வழக்கு விசாரணையின் போது பதிலளித்த காவல் துறையினர், ஏனைய ஸ்பா, மசாஜ் மையங்கள் குறித்து புகார்கள் வெளியாகும்போது நடைபெறும், வழக்கமான நடவடிக்கையாகவே தங்களது ஆய்வு தொடர்ந்து வருகிறது என விளக்கமளித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்ரமணியம், ஸ்பா, மசாஜ் மையங்கள் தொடர்பாக அதிகரிக்கும் புகார்களின் மத்தியில் இம்மாதிரி காவல் துறையினரின் ஆய்வு நடவடிக்கைகள் அவசியமாகின்றன என்றும் அவற்றுக்கு தடைவிதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் அவ்வாறு தடைவிதிப்பது மோசமான முன்னுதாரணமாகி குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்பாகி விடும் என்றும் தெரிவித்தார். இறுதியாக மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

அதேவேளையில், ஸ்பா மற்றும் மசாஜ் மையங்களின் வெளிப்படைத் தன்மை மற்றும் சட்டவிரோதச் செயல்பாடுகளை தவிர்க்கும் வகையில் உத்தரவு ஒன்றையும் நீதிமன்றம் பிறப்பித்தது. அதன்படி தமிழகம் முழுதும் உள்ள ஸ்பா, மசாஜ் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக காவல் துறை தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகம் மற்றும் புதுவையில் ஸ்பா மற்றும் மசாஜ் மையங்களின் பெயரால், பாலியல் முதல் பணம் பறிப்பு வரையிலான குற்றச்செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. அதிலும் புதுவை மற்றும் அதன் தமிழக எல்லைப் பகுதிகளில் இயங்கும் மசாஜ் சென்டர்களில், 18 வயதுக்குட்பட்ட சிறுமியர் மீட்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதன் மறுபக்கமாய், ஆரோக்கிய நோக்கில் செயல்படும் மாற்று மருத்துவ மையங்களின் சேவைகளும் அவப்பெயருக்கு ஆளாகி வருகின்றன.

தற்போதைய நீதிமன்ற உத்தரவின் மூலம், வெளிப்படைத் தன்மையுடன் ஸ்பா, மசாஜ் மையங்கள் இயங்கியாக வேண்டும் என்பதால், குற்றப் பின்னணி உடைய சென்டர்கள் குறையவும், தரமான மையங்கள் கவலையின்றி சேவையாற்றவும் வாய்ப்பாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in