அமெரிக்கச் சூறைப் புயலில் உயிர்பிழைத்த பூனை!

9 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்ட அதிசயம்
அமெரிக்கச் சூறைப் புயலில் உயிர்பிழைத்த பூனை!

அமெரிக்காவில் வீசிய சூறைப் புயலில் சிக்கி, 9 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டிருக்கிறது ஒரு வளர்ப்புப் பூனை. அந்நாட்டின் கென்டகி, ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், டென்னஸி, மிசூரி ஆகிய மாநிலங்களில் வீசிய சூறைப் புயல் (tornado) கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டிச.10 இரவில் ஏற்பட்ட இந்தச் சூறைப் புயலில், இதுவரை 90 பேர் உயிரிழந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் கென்டகி மநிலத்தின் மேஃபீல்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வளர்க்கப்பட்டுவந்த மேடிக்ஸ் எனும் பூனை, அந்தக் கட்டிடம் கடும் சேதம் அடைந்த நிலையிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறது.

அந்நிறுவனத்தில் பணிபுரியும் சோன்னி ஹூட் கிப்ஸன் தான், யதேச்சையாக அதை மீட்டெடுத்திருக்கிறார். டிச.19-ல் அந்த அலுவலகத்துக்கு கிப்ஸன் சென்றிருந்தார். அப்போது அவர் காதில் பூனை கத்தும் சத்தம் மெலிதாகக் கேட்டது. மனப்பிரம்மையாக இருக்கும் எனக் கருதிய கிப்ஸன், அந்தப் பூனையின் பெயர் சொல்லி அழைத்தார். அப்போது மீண்டும் அந்தப் பூனை ‘மியாவ்’ என்றது.

எனினும், சத்தம் எங்கிருந்து கேட்டது எனத் தெரியாமல் குழம்பிய கிப்ஸன், மற்ற ஊழியர்களை உதவிக்கு அழைத்தார். அவர்களின் தேடுதலில், இடிபாடுகளுக்கு அடியில் உள்ள ஒரு துளையில் அந்தப் பூனை உயிருடன் இருந்தது தெரியவந்தது. அதைப் பார்த்த அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி.

“அந்தப் பூனையை என் கைகளில் ஏந்திக்கொண்டது நம்ப முடியாத உணர்வைத் தந்தது. பூனைகளுக்கு 9 ஜென்மம் உண்டு என்பார்கள். இந்த 9 நாட்களிலும் அது 8 ஜென்மம் எடுத்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார் கிப்ஸன்.

பசியும் தாகமுமாக இருந்தாலும் மேடிக்ஸின் உடலில் ஒரு சிராய்ப்பு கூட இல்லை. அதைத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கும் கிப்ஸன், அதைத் தன் வீட்டுச் செல்லப்பிராணியாக வளர்க்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார். சூறைப் புயலில் கடும் சேதத்தைச் சந்தித்த மேஃபீல்டு நகரவாசிகளுக்கு, இந்த நிகழ்வு உத்வேகத்தைத் தரும் என்று கூறியிருக்கும் கிப்ஸன், “மேடிக்ஸின் கதையைக் கேட்பவர்கள், மோசமான சூழலிலிருந்து கூட அற்புதமான விஷயங்கள் நடந்தேறும் என்பதை உணர்ந்துகொள்வார்கள். இதைக் கேட்டு யாராவது ஒருவரேனும் உத்வேகம் கொண்டால், இந்தப் பூமியில் அவதரித்ததற்கான நோக்கத்தை மேடிக்ஸ் பூர்த்திசெய்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்” என நெகிழ்கிறார் கிப்ஸன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in