பருவநிலை மாநாடு: இலக்கை எட்டுமா இந்தியா?

பருவநிலை மாநாடு: இலக்கை எட்டுமா இந்தியா?

“2070-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தில் ‘நெட் ஜீரோ’ எனும் இலக்கை இந்தியா எட்டும்” - கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில், இந்தியப் பிரதமர் மோடி முன்வைத்த இந்த உறுதிமொழி பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருக்கும் இலக்குகளை ஒப்பிடும்போது இந்தியாவின் இலக்கு சற்று தொலைவில் இருக்கிறது என்றாலும், கரியமில வாயு வெளியேற்றத்தில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து 3-வது இடத்தில் இருக்கும் இந்தியா முன்வைத்திருக்கும் இந்த உறுதிமொழி, உலக நாடுகளைக் கவர்ந்திருக்கிறது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், ஐநா ஆதரவில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை நடக்கும் இந்த மாநாட்டில், மொத்தம் 5 உறுதிமொழிகளை பிரதமர் மோடி முன்வைத்திருக்கிறார். 2030-ம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத மாற்று எரிசக்தி உற்பத்தியை 500 ஜிகாவாட் அளவுக்கு அதிகரிப்பது; 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான தேவையை 50 சதவீதம் நிறைவேற்றுவது; அதே ஆண்டுக்குள், கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவில் 1 பில்லியன் டன் அளவுக்குக் குறைப்பது, கரியமில வாயுவின் தீவிரத்தை 45 சதவீத அளவுக்குக் குறைப்பது ஆகியவை மற்ற 4 உறுதிமொழிகள். ஆனால், இவையெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம்?

இந்திய நிலவரம்

‘நெட் ஜீரோ' என்பது, வளி மண்டலத்தில் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி ஒருகட்டத்தில் அதைப் பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டுசெல்வது. இந்த நிலையை ஒரு நாடு எட்டுவதற்கு, வனங்கள் அழியாமல் பார்த்துக்கொள்வது, அதிகமான மரங்களை நடுவது, புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது எனப் பல்வேறு முன்னெடுப்புகள் அவசியம்.

பசுங்குடில் வாயுக்கள் என்று அழைக்கப்படும் கரியமில வாயு (கார்பன் டை ஆக்ஸைடு), மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவைதான் பருவநிலை மாற்றத்தின் மிக முக்கியக் காரணிகள். நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்கள் கரியமில வாயு வெளியேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிற புதைபடிவ எரிபொருட்களைவிடவும், நிலக்கரியை எரிக்கும்போதுதான் அதிக அளவில் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது.

வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்கு, 2010-ல் 2.5 பில்லியன் டன்னாக இருந்த நிலையில், அடுத்த 8 ஆண்டுகளில் அது 3.3 பில்லியன் டன்னாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் 50 சதவீத மின்னுற்பத்தி நிலக்கரியைச் சார்ந்து இருப்பதும் இதற்கு முக்கியக் காரணம். பெருந்தொற்றுக் காலப் பொதுமுடக்கத்தால் உலக அளவில் நிலக்கரி உற்பத்தி குறைந்திருந்த நிலையில், தற்போது உலகம் பெருந்தொற்று பாதிப்புகளிலிருந்து மீண்டுவருவதால் நிலக்கரியின் தேவையும் உற்பத்தியும் அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலும் இதே நிலை இருப்பதால், நிலக்கரிக்கான தேவை இங்கு மளமளவென அதிகரித்திருக்கிறது.

இதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் சூரிய மின்சக்தி, காற்றாலை மூலம் உற்பத்திசெய்யப்படும் மின்சாரம் ஆகியவை இயற்கைச் சூழலின் மாறுதல்களுக்கு ஏற்ப உற்பத்தியிலும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகக்கூடியவை. மரபுசாரா எரிசக்தியின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால், அதன் பாதகமான அம்சங்களைக் களைவது அவசியம். அதற்கு விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. வழக்கமான மின்னுற்பத்தி முறைகளைவிடவும் கூடுதல் செலவு பிடிக்கும் விஷயங்கள் இவை. எனவே, இவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பது சவாலான காரியம்.

வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள்

பசுங்குடில் வாயு வெளியேற்றத்தில், இந்தியாவைவிட சற்றே அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவின் பங்கு அதிகம் என்பதுகூட இயல்பானது என்று சொல்லலாம். ஆனால், இந்தியாவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியைக் கொண்ட அமெரிக்கா, இந்தியாவைவிட 2 மடங்கு அதிக அளவில் பசுங்குடில் வாயுவை வெளியேற்றுகிறது. காரணம், தொழில் துறையில் அந்நாடு அடைந்திருக்கும் அசுர வளர்ச்சி. இருப்பினும் இவ்விஷயத்தில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், தங்கள் பொறுப்பை வளரும் நாடுகளின் தலையில் கட்டுவது தொடர்கிறது.

வளரும் நாடுகளின் தலையில் இதுபோன்ற பொறுப்புகள் விழும்போது, அது அந்நாடுகளின் தொழில் வளர்ச்சியில் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தொழில் துறை வளர்ச்சி மிக முக்கியமானது. இந்தியாவின் எரிபொருள் தேவையில் 70 சதவீதத்தைப் பூர்த்திசெய்வது நிலக்கரிதான். அதிக மின்னுற்பத்தி செய்யும் நாடுகளிலும் இந்தியாவுக்குத்தான் 3-வது இடம். இந்தியாவில் மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே வரும் சூழலில், அதற்கேற்ப மின்னுற்பத்தியையும் அதிகரித்தாக வேண்டியிருக்கிறது.

இதற்கிடையே கிளாஸ்கோ மாநாட்டில், வன அழிப்பு தொடர்பான ஒப்பந்தம் பல நாடுகளில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் வன அழிப்பு நடவடிக்கையை நிறுத்தவும், காடுகளை மீட்கவும் உறுதியளிக்கும் இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவது எந்த அளவுக்குச் சாத்தியம் எனும் கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியா, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. பாஜக தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. வனப் பாதுகாப்புச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரும் திருத்தம், வனங்களை அழிக்கும் மெகா திட்டங்களுக்கு அனுமதியே தேவையில்லை எனும் நிலையை உருவாக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் கண்டனத்தைக் கிளப்பியிருக்கிறது. ஆனாலும், அரசு இதில் பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

அதேபோல், கோவாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாலை விரிவாக்கம், ரயில் பாதை என முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு உருவாகியிருக்கும் நிலையில், “நானே ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர்தான். ஆனால், சுற்றுச்சூழலைப் போலவே மக்களின் வாழ்க்கையும் முக்கியம்” என்று பேசியிருக்கிறார், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேண வேண்டியது அவசியம்தான். ஆனால், அதை மத்திய அரசு எப்படி முறையாக முன்னெடுக்கப்போகிறது என்பதில்தான் தெளிவில்லை.

வெற்று வாக்குறுதிகளா?

கிளாஸ்கோ மாநாட்டில் உரையாற்றிய ஐநா பொதுச் செயலர் அன்டோனியோ குத்தேரஸ், “இயற்கையை ஒரு கழிப்பறையைப் போலப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். சுரங்கம், ட்ரில்லிங் என பூமியைத் தோண்டிக்கொண்டே இருப்பதை நிறுத்த வேண்டும். அதன் மூலம் நமக்கு நாமே சவக்குழியைத் தோண்டிக்கொண்டிருக்கிறோம்” எனக் கடுமையான தொனியில் பேசினார். பருவநிலை மாநாடுகளில் இதுபோன்ற அறச்சீற்றம் வெளிப்படுவது சகஜம்தான். அது, எந்த அளவுக்கு உலகத் தலைவர்களால் செவிமடுக்கப்படுகிறது என்பதில்தான் தீர்வுக்கான தொடக்கப்புள்ளி இருக்கிறது.

தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு இருந்த வெப்பநிலையைவிட, 1.5 டிகிரி செல்சியஸுக்கும் மிகாமல் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது, உலக நாடுகள் பொதுவெளியில் அக்கறையுடன் பேசிக்கொண்டாலும் அதை நோக்கிய பயணத்தில் இருக்கும் சுணக்கம்தான், பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் தொடர்வதற்குக் காரணமாகிறது. ஏற்கெனவே, பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைப் பல நாடுகள் கண்கூடாகப் பார்த்துவருகின்றன – இந்தியா உட்பட. இந்தியா ‘நெட் ஜீரோ’ நிலையை எட்டுவதற்கு முன்னரே புவி வெப்பமயமாதல் அதிகரித்து, கடல்நீர் மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதில் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற இந்திய நகரங்களும் அடக்கம் என்பது பதறவைக்கும் தகவல்.

கிளாஸ்கோ மாநாடு இன்னமும் முடிவுக்கு வராத நிலையிலேயே, அது தோல்வியடைந்துவிட்டதாக, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான செயற்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. 2 வாரக் கொண்டாட்டமாக நடக்கும் இம்மாநாட்டில், தலைவர்களின் உளறல்கள்தான் இடம்பெற்றிருந்தன என்று அவர் சாடியிருக்கிறார். அந்த இளம் செயற்பாட்டாளரின் அவநம்பிக்கை வார்த்தைகள் உண்மையாகாமல் இருப்பது, உலகத் தலைவர்களின் செயற்பாட்டில்தான் இருக்கிறது - மோடி உட்பட!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in