நாம் அணியும் ஆடைக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் தொடர்பு இருக்கிறது தெரியுமா?

நாம் அணியும் ஆடைக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் தொடர்பு இருக்கிறது தெரியுமா?

பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் கவலைகொள்ளத் தொடங்கியிருக்கின்றன. கரியமில வாயு வெளியேற்றத்தில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து 3-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. ‘2070-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தில் ‘நெட் ஜீரோ’ எனும் இலக்கை இந்தியா எட்டும்’ என கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் இந்தியா உறுதியளித்திருக்கிறது. அதற்கான செயல் திட்டங்களையும் வகுக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், புத்தாடைகளை வாங்கும் பழக்கம் அதிகரித்திருப்பது பருவநிலை மாற்றத்துக்குத் துணை செய்யும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சம் டன்னுக்கும் அதிகமாகத் துணிகள் குப்பையில் தூக்கியெறியப்படுகின்றன என்கிறது ‘இந்தியா ஸ்பெண்ட்’ இணையதளம். ஜவுளி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஃபேஷன் ஆடைகளை உற்பத்தி செய்வதிலும் ஏற்றுமதி இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஆடைகள் ஏற்றுமதி செய்வதில் இந்தியாவின் பங்கு கணிசமானது.

இதில் மிக முக்கியமான விஷயம், உலக அளவில் கப்பல் போக்குவரத்து, விமான சேவை ஆகியவை இணைந்து வெளியேற்றும் பசுங்குடில் வாயுக்களின் அளவைவிட, ஜவுளி உற்பத்தித் துறை வெளியிடும் அளவு அதிகம் என்பதுதான்.

பசுங்குடில் வாயுக்கள் என்று அழைக்கப்படும் கரியமில வாயு (கார்பன் டை ஆக்ஸைடு), மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவைதான் பருவநிலை மாற்றத்தின் மிக முக்கியக் காரணிகள். உலகம் முழுதும் ஃபேஷன் துறை ஒவ்வொரு ஆண்டும் 5.3 கோடி டன் ஃபைபரை உற்பத்திசெய்கிறது. அதில் 70 சதவீதம் குப்பையாகக் கொட்டப்படுகிறது அல்லது நெருப்பிலிடப்படுகிறது என பிரிட்டனைச் சேர்ந்த எல்லென் மெக்கார்த்தர் அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. 1 சதவீதம் ஃபைபர் மட்டுமே புதிய ஜவுளி உற்பத்திக்கு மறுசுழற்சியில் பயன்படுத்தப்படுகிறது. இப்படி ஃபைபர் குப்பைகள் சேர்வது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

அத்துடன், தண்ணீர் பயன்பாட்டில் 2-வது இடத்தில் உலக அளவிலான ஃபேஷன் துறை இருக்கிறது என ஐநா சுற்றுச்சூழல் திட்டம் தெரிவித்திருக்கிறது. ஒரு ஜீன்ஸ் பேன்ட்டை உருவாக்க 3,781 லிட்டர் நீர் செலவாகிறது. ஒரு மனிதர் சராசரியாக 3 ஆண்டுகளுக்கு அருந்தும் நீரின் அளவுக்கு நிகரானது இது.

இப்படியான சூழலில், இந்தியாவில் சமீபகாலமாகப் புத்தாடைகள் வாங்கும் போக்கும் அதிகரித்திருப்பது கவலைக்குரிய விஷயமாகியிருக்கிறது. பண்டிகைக் காலங்களில் புத்தாடைகள் வாங்குவது, சில சமயம் பருவகாலங்களுக்கு ஏற்ற ஆடைகள் வாங்குவது என்று இருந்த இந்தியர்கள் இப்போதெல்லாம் மாறிவரும் ஃபேஷனுக்கு ஏற்ப சில வார இடைவெளிகளில் புத்தாடைகள் வாங்குகிறார்கள். கூடவே, இணைய வர்த்தக நிறுவனங்களின் வழியே, செயலிகளைப் பயன்படுத்தி ஆடைகள் வாங்குவதும் அதிகரித்திருக்கிறது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

ஏற்கெனவே, ஜவுளி உற்பத்தித் துறை காரணமாக, பசுங்குடில் வாயு வெளியேற்றம் போன்ற பிரச்சினைகளும், ஆடைகள் குப்பைகளில் வீசப்படுவதால் உருவாகும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் சவால்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அளவுக்கு அதிகமாக ஆடைகள் வாங்கிக் குவிப்பதும், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குத் துணைபுரிகிறது.

இதற்கிடையே, பயன்படுத்திய துணிகளைக் குப்பையில் வீசுவதைக்காட்டிலும், சாத்தியம் உள்ள வரை அவற்றை மறுசுழற்சி செய்யும் வேலைகளிலும் சில ஆடைத் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன. 2019 ஆகஸ்ட் 22-ல் அப்போதைய மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி SU.RE எனும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். தூய்மையான சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கும் வகையில் ஆடை உற்பத்தியை மேற்கொள்வதற்கான பல முக்கிய அம்சங்கள் அதில் முன்வைக்கப்பட்டன. அதில் பல முன்னணி ஆடைத் தயாரிப்பு நிறுவனங்களும் அங்கம் வகிக்கின்றன. கூடவே, இதையடுத்து, மறுவிற்பனை செய்யப்படும் ஆடைகளுக்கான சந்தையையும் விரிவுபடுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

இதில் ஜவுளித் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களான நம்மிடமும் மனமாற்றம் ஏற்படுவது அவசியம். மாறிவரும் ஃபேஷனுக்கு ஏற்ப புத்தாடைகள் வாங்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டு, தேவையான அளவுக்கு ஆடைகள் வாங்கலாம். பயன்படுத்தத்தக்க நிலையில் இருக்கும் பழைய ஆடைகளை ஏழை மக்களுக்குக் கொடுத்து உதவலாம்.

உலகம் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்த புரிதலுடன் செயல்பட்டால், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் காரணிகளில் நம் பங்களிப்பைக் குறைக்கலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in