திடீர் மாரடைப்பு: பயணிகளைக் காத்து உயிரிழந்த ஓட்டுநர்

திடீர் மாரடைப்பு: பயணிகளைக் காத்து உயிரிழந்த ஓட்டுநர்
ஓடும் பேருந்தில் உயிரிழந்த ஓட்டுநர் ஆறுமுகம்

மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் பேருந்து இன்று காலை 6.20 மணிக்கு மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதை ஓட்டுநர் ஏ.ஆறுமுகம் என்பவர் ஓட்டிவந்தார். பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, பைபாஸ் சாலையில் ஏறியதுமே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கடுமையான நெஞ்சுவலியிலும்கூட, பொறுமையாக பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திய அவர் அடுத்த நிமிடமே இறந்துவிட்டார்.

என்ன சம்பந்தம் இல்லாத இடத்தில் பேருந்து நிறுத்தப்படுகிறது என்று பணிகளும், நடத்துநரும் கவனித்தபோதுதான் ஆறுமுகம் நிலைகுலைந்து கிடப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை வேறு இருக்கைக்கு மாற்றி பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்பதும் உறுதியானது. இவ்வளவு இக்கட்டான சூழலிலும் நெருக்கடியான பைபாஸ் சாலையில், பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி நம் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாரே என்று பயணிகள் நெகிழ்ந்துபோனார்கள்.

வாகனத்தை மட்டும் நிறுத்தாமல் அவர் நெஞ்சைப் பிடித்திருந்தார் என்றால், அடுத்த 200 மீட்டரில் காமராஜர் பாலத்தில் ஏறி வைகை ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்திருக்கும் என்றும் பயணிகள் கூறினர்.

இதுகுறித்து சக பேருந்து ஓட்டுநரான பழனிராஜ் கூறும்போது, "இந்தப் பேருந்தை காலை 6.20 மணிக்கு மதுரையில் இருந்து எடுக்கும் ஆறுமுகம், கொடைக்கானல் போய்விட்டு, திரும்பவும் மதுரைக்கு வருவார். அடுத்து கோவைக்கு ஓட்டுவார். பிறகு அங்கிருந்து மதுரைக்கு ஓட்டிவருவார். இடையில் மாற்று டிரைவரோ, ஓய்வு நேரமோ கிடையாது. இப்படித் தொடர்ச்சியாக பேருந்து ஓட்டியதால்தான் அவரது உடல்நலம் கெட்டுவிட்டது. இதேநிலைதான் புறநகர்ப் பேருந்துகளை ஓட்டும் பல டிரைவர்களுக்கும் இருக்கிறது" என்றார் வேதனையுடன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in