போதைக் காளான்: கொலைக் களமாகிறதா கொடைக்கானல்?

புகார் குரல் எழுப்பும் பாஜக நாராயணன் திருப்பதி
மேஜிக் காளான்
மேஜிக் காளான்

கொடைக்கானலை கொலைக்களமாக்கும் மேஜிக் காளானுக்கு எதிராக, அவ்வப்போது பொதுவெளியில் குரல்கள் எழுந்து அடங்குவதுண்டு. அந்த வரிசையில் பாஜக செய்தி தொடர்பாளரான நாராயணன் திருப்பதி, இன்று ட்விட்டர் வாயிலாக ஆட்சேபக் குரல் எழுப்பி உள்ளார்.

கோடை வாசஸ்தலமான கொடைக்கானலுக்கு கோடைக்காலத்தில் கூட்டம் திரளுவது வழக்கம். ஆனால், மழை மற்றும் குளிர்காலமான நவம்பர்-டிசம்பரிலும் கூட, நாடு நெடுகிலும் இருந்து கணிசமான இளைஞர்கள் கொடைக்கானலுக்கு ரகசியமாய் வருகை தருவார்கள். குளிர்காலத்தில், அங்கே அவர்களுக்கு என்ன வேலை என்பதில் ’மேஜிக் காளான்’ என்ற போதைக் காளானின் மகிமை மறைந்திருக்கிறது.

கொடைக்கானல் வாசிகளே அறிந்திராத இந்த மேஜிக் காளான்கள், கொடைக்கானலின் அடர் வனப்பகுதிகளில் அபரிமிதமாக வளர்ந்திருப்பவை. 70-களில் பிரபலமான ஹிப்பி கலாச்சார இளைஞர்கள் இங்கே வந்து தங்கியபோது, மேஜிக் காளானைக் கண்டறிந்து, உள்ளூர் மக்களுக்கு சொன்னார்கள். அதன் பிறகே இந்த போதைக் காளான் அதிகம் பிரபலமானது.

பதப்படுத்தலில் போதைக் காளான்
பதப்படுத்தலில் போதைக் காளான்

கசப்புத் தட்டும் இந்தக் காளானை காயவைத்து பதப்படுத்தி, முட்டை உணவுடன் சேர்த்து உண்கிறார்கள். சுமார் 10 கிராம் போதைக் காளான் உட்கொண்டால், நாள் முழுக்க போதை தாங்குமாம். ஆனால் நரம்பு மண்டலத்தையும், மனநலனையும் இந்தக் காளான் சிதைத்துவிடும். அந்த வகையில் உயர் போதை வஸ்துகள் வரிசையில் போதைக் காளானும் பெயர் பெற்றது. குளிர்காலத்தில் வருமானம் இழந்த ஒருசில தங்கும் விடுதிகள் இவற்றை வைத்து காசு பார்த்தன.

காவல் துறையினர், அரசியல்வாதிகள் பின்னணியில் அமோக கள்ள வர்த்தகத்தில் செழிக்கும் போதைக் காளானால், அவ்வப்போது உயிரிழப்புகளும் நேர்ந்ததுண்டு. கூடுதல் போதைக்காக தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள் சிலவற்றை சேர்ப்பார்கள். இதன் வீரியத்தாலும், ஒவ்வாமையாலும் உயிரிழப்புகள் நேர்ந்திருக்கின்றன. சம்பவம் நேர்ந்த சில காலத்துக்கு அடக்கி வாசிக்கும் போதைக் காளான் விற்பனை, இடைவெளிக்குப் பின்னர் வழக்கம்போல சூடுபிடிக்கும்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்த போதைக் காளான் குறித்தே பாஜக செய்தி தொடர்பாளரான நாராயணன் திருப்பதி இன்று(டிச.2) ட்விட்டரில் நீண்ட பதிவு தந்துள்ளார். அந்தப் பதிவில், “போதைக் காளான் விற்பனை கொடைக்கானலில் அதிக அளவில் பெருகிவருகிறது. பல்வேறு இடங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஆம்லெட்டில் இந்தக் காளான்களை வைத்து உண்கிறார்கள். இந்தக் காளான்கள் மற்ற மாநிலங்களுக்கும் கடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

பல விடுதிகள் மற்றும் தங்கும் அனுமதியில்லாத பல இல்லங்களில் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரு சிலர் இதை உட்கொண்டு இறந்தும் போயிருப்பது கொடுமை. மிக மோசமான இந்தச் செயல்பாடுகளில், பல இடைத்தரகர்கள் இருப்பதோடு அரசியல் பின்புலமும் உள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து 3 வருடங்களுக்கு முன்னரே நான் எச்சரித்திருந்தேன். சில வருடங்களுக்கு முன், காவல் துறை ஆய்வாளர் ஒருவர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தபோதும், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில‌ மாத‌ங்க‌ளாக‌ கொடைக்கானல் கே.ஆர்.ஆர் கலையரங்கம், செட்டியார் பூங்கா, சின்ன பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிப்படையாக போதைக் காளானை ஒரு கும்ப‌ல் விற்பனை செய்வதால், சுற்றுலாப் பயணிகளுக்கு த‌ட்டுப்பாடின்றி கிடைப்பதாக‌வும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. இதுகுறித்து காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து, குற்றம் செய்பவர்களை கைது செய்ய வேண்டும்.

அடுத்த தலைமுறையைப் படுகுழியில் தள்ளும் கொடுமையான செயல் இது. இந்தக் காளான் போதைப் பொருள் என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட வேண்டும். முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

போதைக் காளான் விற்பனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்தப் பதிவில், திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை நாராயணன் திருப்பதி இணைத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in