என்ன சொல்கிறது உயிரியல் பன்முகத்தன்மை திருத்த மசோதா?

என்ன சொல்கிறது உயிரியல் பன்முகத்தன்மை திருத்த மசோதா?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களில் உயிரியல் பன்முகத்தன்மை திருத்த மசோதாவும் (2021) ஒன்று. இந்த மசோதாவை ஆய்வுசெய்யுமாறு, 21 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை மத்திய அரசு பணித்திருக்கிறது. அடுத்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இதுகுறித்த அறிக்கையை அந்தக் குழு தாக்கல் செய்யவிருக்கிறது.

இந்தியாவின் உயிரியல் பன்முகத்தன்மை சட்டத்தின் பின்னணியில் இருக்கும் முக்கிய அம்சம், உயிரியல் பன்முகத்தன்மை குறித்து 1992-1993-ல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலும், அமெரிக்காவின் நியூயார்க்கிலும் நடந்த சர்வதேச மாநாடுகள். இதன் தொடர்ச்சியாக உருவான ஒப்பந்தத்தில் 1994-ல் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த ஒப்பந்தத்தின்படி, நாடுகள் தத்தமது உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றும், உயிரியல் வளங்களை நியாயமாகவும், சமமாகவும் பயன்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 2002-ல் இந்தியா உயிரியல் பன்முகத்தன்மை சட்டத்தைக் கொண்டுவந்தது.

தற்போது அந்தச் சட்டத்தின் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுவிட்ட நிலையில், இதன் சாதக பாதகங்கள் குறித்த விவாதங்கள் எழுந்திருக்கின்றன. மருத்துவ குணம் கொண்ட தாவரங்களின் சாகுபடியை அதிகரிப்பது, வனங்களில் உள்ள மூலிகைச் செடிகளை உயிரியல் பன்முகத்தன்மை வாரியங்களின் அனுமதி இல்லாமல் ஆயுஷ் மருத்துவத் துறையினர் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது, அதுதொடர்பான ஆய்வுகளை அதிகரிக்க அனுமதிப்பது எனத் தொடங்கி, இத்துறையில் அதிக அளவிலான பன்னாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது வரை பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்நிலையில், மக்களிடம் கருத்து கேட்காமல் இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், ஆயுஷ் துறையை வளர்த்தெடுப்பதற்காக உயிரியல் பன்முகத்தன்மைப் பாதுகாப்பில் சமரசங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அத்துடன், இந்த மசோதாவில் பன்முகத்தன்மைப் பாதுகாப்பைவிடவும் அது தொடர்பான வணிகத்தை வளர்க்கவே முக்கியத்துவம் தரப்படுகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இவ்விஷயத்தில் உள்ளூர் சமூகத்தின் முக்கியத்துவம் குறைக்கப்படுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

இப்படியான சூழலில், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டிருப்பதால், இதுகுறித்த ஆக்கபூர்வ மாற்றங்கள் சாத்தியமாகும் என்றும் நம்பப்படுகிறது.

Related Stories

No stories found.