கேரளத்தில் கானல் நீரானதா மதச்சார்பின்மை?

மதத்தை முன்னிறுத்தி நிராகரிக்கப்பட்ட பரதநாட்டிய கலைஞர்
கேரளத்தில் கானல் நீரானதா மதச்சார்பின்மை?

இடதுசாரிகள் முற்போக்கு ஆட்சி என மார்தட்டிக்கொள்ளும் கேரளத்தில் மதத்தை முன்வைத்து பரதக்கலைஞர் ஒருவரின் நிகழ்ச்சியை ரத்து செய்திருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் பிரசித்திபெற்ற பரதநாட்டியக் கலைஞர்களில் முக்கியமானவர் மன்சியா(27) இஸ்லாமியரான இவருக்கு பரதநாட்டியத்தின் மீது சிறுவயதில் இருந்தே ஈர்ப்பு அதிகம். பரதத்திலேயே இளங்கலை, முதுகலை பட்டம் பெற்ற இவர் எம்.பில் பட்டமும் பெற்றார். இப்போது மலையாள தொன்மக் கலைகளை வளர்த்தெடுக்க உருவாக்கப்பட்ட கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பரதக்கலையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்.

மன்சியா பரதநாட்டியத்தை கற்றுக்கொண்டதும், ஆலயங்களில் பரத நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதும் இஸ்லாமிய மத கட்டமைப்புக்கு எதிரானது என அவரது சொந்த சமூகத்தில் இருந்தே கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டார். ஆனாலும், கலைக்கு மதம் என்னும் வடிவம் கிடையாது. அது ஆழ்நிலை தவம் என்னும் நிலைப்பாட்டினைக் கொண்ட மன்சியா அந்த எதிர்ப்பையும் மீறியே தன் பரதத்தை அரங்கேற்றிவந்தார்.

இந்நிலையில் கேரள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்சூர் மாவட்டம் இறிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல் மாணிக்கம் கோயில் திருவிழாவில் ஏப்ரல் 21-ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணிவரை மன்சியாவின் பரத நிகழ்ச்சி புக் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரைத் தொடர்பு கொண்ட ஆலயத்தின் நிர்வாகிகள், ‘மன்சியா மாற்றுமதம் என்பதால் இந்துக்கோயிலில் அவர் நடனமாட அனுமதிக்கமுடியாது’ என தெரிவித்தனர். மதச்சார்மற்ற மாநிலம் என முற்போக்கு முகம் காட்டும் இடதுசாரிகளின் ஆட்சியில் இப்படி ஒரு நிலையா? என சமூக வலைதளங்களிலும் இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது.

இதுகுறித்து பரதக்கலைஞர் மன்சியா நம்மிடம் கூறுகையில், ‘கேரளத்தின் மேடைகளும் மதம் சார்ந்தவை ஆகிவிட்டது. ஆனால் எனக்கு இது புது அனுபவம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு குருவாயூர் கோயிலில் எனக்குக் கொடுத்த வாய்ப்பும் இதே காரணத்திற்காக தட்டி பறிக்கப்பட்டது. காலம் இன்னும் மாறவே இல்லை. நான் கடந்த ஜனவரி 8-ம் தேதி, இந்துமதத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஷ்யாம் கல்யாணைத் திருமணம் செய்துகொண்டேன். அதனால் நான் இப்போது இந்துவாகிவிட்டேனா என்னும் கேள்வியையும் எதிர்கொண்டேன். ஆனால் எனக்கு மதம் கிடையாது. கலைக்கோ, கலைஞர்களுக்கோ மத அடையாள எல்லையே கிடையாது. மதம் இல்லை என்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறேன். இவ்வளவுதான் நம் மதச்சார்பின்மை’’ என்றார்.

இதுகுறித்து கூடல்மாணிக்கம் கோயில் அறங்காவலர் பிரதீப் மேனனிடம் கேட்டபோது, "கோயில் விதிமுறையின்படி இந்துக்களுக்கு மட்டுமே இங்கு நிகழ்ச்சிக்கான வாய்ப்பு கொடுக்கப்படும். 800 கலைஞர்கள், பத்துநாள்கள் நடக்கும் திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். அனைவரிடமும் அவர்களது மதத்தைப் பற்றிக் கேட்டே நிகழ்வை உறுதிசெய்தோம். மன்சியா தனக்கு மதம் இல்லை என எழுத்துமூலமாகவே கொடுத்தார். அதனால்தான் வாய்ப்பு மறுக்கப்பட்டது’’ என்றார்.

Related Stories

No stories found.