மாணவர்களைப் பற்றிக்கொண்ட மத அரசியல்!

ஹிஜாப் - காவித் துண்டு விவகாரத்தில் திரைமறைவு நிகழ்வுகள்
மாணவர்களைப் பற்றிக்கொண்ட மத அரசியல்!

வட இந்தியாவில் அதிகம் தென்படும் மதரீதியிலான பதற்றம் தென்னகத்தையும் தொற்றிக்கொண்டிருக்கிறதோ எனும் கவலையை உருவாக்கியிருக்கிறது, கர்நாடகத்தில் வெடித்த ஹிஜாப் - காவித் துண்டு விவகாரம். அன்பையும், நல்லொழுக்கத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் மதரீதியாகப் பிளவுபட்டுக்கிடக்கிறார்கள். பூதாகரமாக உருவெடுத்த இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?

தொடக்கப் புள்ளி

கரோனா பரவலால் மூடுவதும் திறப்பதுமாக இருக்கும் கர்நாடகக் கல்வி நிறுவனங்களில், இந்த விவகாரம் வெடித்தது இப்போது அல்ல. 2021 டிசம்பர் மாதத்தில், கடலோர மாவட்டமான உடுப்பியில் உள்ள அரசு முன் பல்கலைக்கழகக் கல்லூரியில்தான் (Pre-university College) பிரச்சினை தொடங்கியிருக்கிறது. அதாவது, 11-12-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் தொடங்கிய பிரச்சினை இது. கல்வி நிலையத்துக்கு 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தொடங்கினர். அவர்கள் வகுப்புகளில் பங்கேற்க கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்தது. கல்வி நிலையத்துக்குள் மாணவிகள் நுழைய அனுமதி வழங்கப்பட்டபோதும் வகுப்புக்குள் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் வருகைப்பதிவேட்டில் ‘ஆப்சென்ட்’ போடப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகளும் பெற்றோரும் முறையிட்டிருக்கிறார்கள். ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவிகள் படிக்கும் கல்வி நிறுவனத்தில் 6 மாணவிகள் மட்டும் ஹிஜாப் அணிந்து வருவது குறித்து கல்லூரி நிர்வாகம் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. ஆனால், கல்லூரியில் ஆண் ஆசிரியர்கள் இருப்பதையும் வெளியிலிருந்து ஆண்கள் வந்துசெல்வதால் ஹிஜாப் அணிகிறோம் என்று மாணவிகள் தரப்பில் பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், கல்லூரியின் 37 ஆண்டு காலத்தில் யாரும் ஹிஜாப் அணிந்து வரவில்லை என்பதால், கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிய அனுமதி மறுத்திருக்கிறது. இதன் பிறகுதான் இந்த விவகாரம் பிரச்சினையாகத் தொடங்கியிருக்கிறது.

பரவிய பதற்றம்

கர்நாடகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி நிறுவனங்களிலும் இதே பிரச்சினை வெடித்திருக்கிறது. சிக்மக்ளூர், மங்களூரு ஆகிய இரண்டு கல்லூரிகளிலும் இதே விவகாரம் வெடித்தது. ஆனால், அது வேறு வகைகளில் வெடித்திருக்கிறது. கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் மாணவ அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் காவித் துண்டை அணிந்து வந்திருக்கிறார்கள்.

இதையடுத்து, கல்லூரிக்குள் ஹிஜாப் அணியவும் காவித் துண்டு அணியவும் கல்லூரி நிர்வாகங்கள் தடை விதித்தன. அப்படி குண்டாப்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் தடையை மீறி ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளைக் கல்லூரிக்குள் விடாமல், கல்லூரி முதல்வர் கேட்டை இழுத்து மூடும் வீடியோ காட்சிதான் சமீபத்தில் தேசிய அளவில் வைரலானது. இன்னொரு புறம், ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு ஆதரவாக நீலத் துண்டு அணியும் போராட்டமும் நடைபெற்றது.

இப்படி கர்நாடகத்தில் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளான நிலையில், அம்மாநில பாஜக அரசு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 5 அன்று, ‘கர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் சீருடை விதியைப் பின்பற்ற வேண்டும். மத அடையாளங்களை அணிந்து வர அனுமதி இல்லை’ என்ற உத்தரவைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்புவரை சீருடை தொடர்பாக மாநில அளவில் எந்த விதிமுறையும் இல்லை. பள்ளி நிர்வாகங்கள் அல்லது கல்லூரி வளர்ச்சிக் குழு இந்த முடிவை எடுத்துக்கொள்ளலாம் என்பதே, கர்நாடகத்தில் இருந்த நிலை. ஆனால், மாநில அரசு தலையிடும் அளவுக்கு இந்த விவகாரம் மாறிப்போனது!

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், மாண்டியாவில் ஒரு கல்லூரிக்குள் வந்த மாணவியை காவித் துண்டு அணிந்திருந்தவர்கள் முற்றுகையிட்டு, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டனர். அதற்குப் பதிலடியாக ‘அல்லாஹு அக்பர்’ என்று அவர் ஓங்கிக் குரல் எழுப்பியது, இந்தியாவைத் தாண்டி சமூக ஊடகங்களில் வைரலானது.

கர்நாடகத்தில் புதிதல்ல!

காவித்துண்டு அணிவது, கோஷம் எழுப்புவது என்ற நிலையிலிருந்து வாகனங்கள் மீது தாக்குதல், தேசிய கொடிக் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றியது எனப் போராட்டங்கள் வேறு வடிவத்தை நோக்கி திசை மாறியதால், கர்நாடக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அரசு அறிவித்தது. மாணவர்களை முன்னிட்டு மத ரீதியிலான மோதல் உருவாகும் அளவுக்குக் காட்சிகள் மாறிக்கிடக்கின்றன. இதில், அரசியல் வண்ணம் கலந்தது எப்படி? கர்நாடக வட்டாரங்களில் விசாரித்தோம்.

“இந்த விவகாரங்களை தமிழ்நாட்டிலிருந்து பார்க்கும் சூழல் வேறு. ஆனால், கர்நாடகத்தில் அப்படி கிடையாது. கடலோர மாவட்டங்களான உடுப்பி, தக்‌ஷிண் கன்னடா, உத்தர் கன்னடா போன்ற மாவட்டங்களில் பாஜக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவாக உள்ளது. கர்நாடகக் கல்வி நிலையங்களில் பாஜகவின் மாணவ அமைப்பான ஏபிவிபி மிகவும் வலுவானது. அதேபோல இடதுசாரி, இஸ்லாமிய மாணவர்கள் அமைப்புகளும் இயங்கிவருகின்றன.

ஹிஜாப் அணியும் விஷயம், திடீரென இப்போது தோன்றிய விவகாரம் கிடையாது. இந்தப் பகுதிகளில் பல ஆண்டுகளாகவே உள்ள பிரச்சினைதான் இது. கல்வி நிறுவனங்களில் சீருடை அணிய வேண்டும்; ஹிஜாப் அணியக் கூடாது என்று ஏபிவிபி சொல்வதும், ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என்று இடதுசாரி, இஸ்லாமிய மாணவர்கள் அமைப்புகள் சொல்வதும் வாடிக்கைதான். இப்போது வெடித்த விவகாரத்தின் பின்னணியிலும் இந்த அமைப்புகள்தான் இருக்கின்றன. உதாரணமாக, உடுப்பியில் தொடங்கிய விவகாரத்தில் ஹிஜாப் அணிவதில் உறுதிகாட்டிப் போராட்டம் நடத்திய 6 மாணவிகள், இஸ்லாமிய மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான். அதேபோல மாண்டியாவில் ‘அல்லாஹு அக்பர்’ என்று கோஷமிட்ட பெண்ணும் இஸ்லாமிய மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்தான். ‘அல்லாஹு அக்பர்’ என்ற கோஷமே உடுப்பி இஸ்லாமிய மாணவிகளிடமிருந்துதான் தொடங்கியது” என்கிறார்கள் கர்நாடகத்தைச் சேர்ந்த சிலர். அத்துடன், இவ்விவகாரத்தில் பாஜக முன்னெடுக்கும் அரசியலையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதில், வழக்கம்போல அரசியல்வாதிகளும் புகுந்து குளிர்காய நினைக்கிறார்கள்.

அரசியல் கணக்குகள்

“காவித் துண்டு விநியோகம் முதல், இந்து மாணவர்களை ஒருங்கிணைத்ததுவரை அனைத்தையும் செய்ததில் ஏபிவிபி மட்டுமல்ல, பாஜகவும் உள்ளது. அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக அளவில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் வெற்றியைத் தக்கவைக்க கடலோரப் பகுதிகளில் வழக்கமான வெற்றியை பாஜக பெற வேண்டும். இந்து வாக்குகளை ஒருங்கிணைப்பதில் இந்த விவகாரம் உதவும் என்று அக்கட்சி நினைக்கிறது. இந்த விஷயத்தில் ராகுல், பிரியங்கா என தேசிய அளவில் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவை விமர்சிக்கிறார்கள். ஆனால், கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பட்டும்படாமலும், யார் மனதும் நோகாதவாறே கருத்து தெரிவிக்கிறார்கள். ஏனென்றால், இங்கு விஷயமே வேறு. இதன் பின்னணியில் எல்லாமே அரசியல்தான்” என்கிறார்கள் கர்நாடகத்தைச் சேர்ந்த நடுநிலையாளர்கள்.

கல்வி நிலையங்களுக்குள் புகுந்த அரசியல் காரணமாக, சகோதர சகோதரிகளாகப் பழகிய மாணவச் செல்வங்கள் மதக்கோலம் பூண்டு பிரிந்துக் கிடக்கிறார்கள். இதில், வழக்கம்போல அரசியல்வாதிகளும் புகுந்து குளிர்காய நினைக்கிறார்கள். இவற்றுக்கு மத்தியில், மறு தீர்ப்பு வரும்வரை சீருடை மட்டுமே அணிந்துகொண்டு வகுப்பறைக்கு வர வேண்டும் என்றும் ஹிஜாப், காவித் துண்டு போன்றவற்றை அணியக் கூடாது என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் தற்காலிகத் தீர்வைத் தந்திருக்கிறது. இனியாவது, பதற்றம் தணிந்து பாடங்களில் கவனம் செலுத்தட்டும் மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in