நகையைத் தவறவிட்டு தவித்த மூதாட்டி... நிம்மதி தந்த ஆட்டோ ஓட்டுநர்!

நேர்மைக்குக் கிடைத்த வெகுமதி
நகையைத் தவறவிட்டு தவித்த மூதாட்டி... 
நிம்மதி தந்த ஆட்டோ ஓட்டுநர்!
ஆட்டோ ஓட்டுநரைப் பாராட்டும் காவல் கண்காணிப்பாளர் ஜவகர்

தவறுதலாகத் தவறவிட்ட உடைமைகள் திரும்பக் கிடைப்பது இன்றைய காலகட்டத்தில் அரிதாகிவிட்டது. அதேபோல், தவறவிடப்பட்ட பொருட்களை உரிமையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நேர்மையாளர்களும் அரிதுதான். அப்படி ஒரு ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை, நகைப் பையைத் தவறவிட்டுவிட்டு தவித்த மூதாட்டிக்கு நிம்மதியைத் தந்திருக்கிறது. நேர்மையுடன் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடமிருந்து பாராட்டும் கிடைத்திருக்கிறது.

நாகை மாவட்டம், வடக்கு பொய்கை நல்லூரைச் சேர்ந்த 58 வயது மூதாட்டி ரெஜினா மேரி. இவர் பொறையாரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக, வடக்குப் பொய்கை நல்லூரில் இருந்து ஒரு ஷேர் ஆட்டோவில் நாகை புதிய பேருந்து நிலையம் வந்து இறங்கியுள்ளார். அப்போது, தான் கொண்டுவந்த 10 பவுன் நகை வைத்திருந்த பையை ஆட்டோவிலேயே விட்டுவிட்டு இறங்கிவிட்டார். பொறையார் பேருந்தில் ஏறும் நேரத்தில்தான், தான் கொண்டுவந்த பை தன்னிடம் இல்லாதது அவருக்கு நினைவுக்கு வந்திருக்கிறது.

“பத்து பவுனும் இன்றைக்கு நான்கு லட்ச ரூபாய் மதிப்புடையதாயிற்றே, அதை இப்படி தவறவிட்டு விட்டோமே” என்று கண்ணீருடன் கதறினார். ஒருகட்டத்தில் அந்தப் பையை ஆட்டோவிலேயே விட்டுவிட்டோம் என்பது நினைவுக்கு வந்திருக்கிறது. உடனடியாக, நாகை பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிற்கும் இடத்துக்குப் போய், தான் ஏறிவந்த ஆட்டோவைத் தேடினார்.

ஆனால், அந்த ஆட்டோவைக் காணவில்லை. இதையடுத்து வெளிப்பாளையம் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். கண்ணீருடன் அங்கேயே காத்திருந்த ரெஜினா மேரிக்கு எஸ்.பி அலுவலகத்திலிருந்து நல்ல செய்தி கிடைத்தது. நாகை பீச் லைன் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வசந்தகுமார், தனது ஆட்டோவில் பை ஒன்று இருப்பதைக் கண்டு, அதை எடுத்து திறந்து பார்த்துள்ளார். பையில் துணிகளுடன் நகை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் தவறவிட்ட நபரைக் கண்டறிந்து அவரிடமே நகைப் பையை ஒப்படைக்க வேண்டும் என முடிவுசெய்த வசந்தகுமார், நேராக நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தார்.

பையை அங்குள்ள போலீஸாரிடம் ஒப்படைத்து விவரத்தைச் சொன்னார். இதனிடையே வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் ரெஜினா மேரி காத்திருக்கும் தகவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குக் கிடைத்தது. உடனடியாக அவரைத் தனது அலுவலகத்துக்கு அழைத்து வரச்சொல்லி உத்தரவிட்டார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜவகர். அங்கு வந்த ரெஜினா மேரியிடம் அவர் தவறவிட்ட 10 பவுன் நகை மற்றும் பை ஒப்படைக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர் வசந்தகுமாரின் நேர்மையைப் பாராட்டிய ஜவகர், அவருக்குப் பொன்னாடை போர்த்தி, வெகுமதி அளித்துப் பாராட்டினர்.

Related Stories

No stories found.