நமக்கு நாமே...

பழங்குடிகள் உருவாக்கிய யூடியூப் சேனல்!
நமக்கு நாமே...

தங்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தவும், தமது கலை, மருத்துவத்தை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கவும் பழங்குடிகள் சேர்ந்து உருவாக்கி இருக்கும் யூடியூப் சேனல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

கேரளத்தில் வயநாடு, பாலக்காடு, இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். கேரள அரசு ஆவணங்களின்படி அங்கு 4 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடியினர் உள்ளனர். இதில் அட்டப்பாடி குடியிருப்புகளை மையமாக வைத்து ‘கோத்ர கலாமண்டலம்’ என்ற யூடியூப் சேனலை பழங்குடி மக்கள் தொடங்கியுள்ளனர்.

23 திருமணங்கள்... 113 குழந்தைகள்!

இந்த யூடியூப் சேனலுக்குள் நுழைந்ததும்... கேரளத்தின் அட்டப்பாடி பழங்குடி கிராமத்தில் நூறு வயதைத் தாண்டியும் வாழ்ந்து கடந்த 2013-ல் இறந்த மூப்பன் குறித்து ஆவணப்படமாக விரிகிறது ஒரு காணொலி. மூப்பன் ஒரு நடமாடும் தகவல் சுரங்கமாக வாழ்ந்தவர். 23 பெண்களைத் திருமணம் முடித்த அவருக்கு 113 குழந்தைகள் என விவரிக்கும் காட்சிகள் அதிர்ச்சியூட்டின. மறுபுறம், பிரமாதமான இயற்கை மருத்துவ ஞானம் படைத்தவராக அவர் திகழ்ந்தார் என்று விவரிக்கும் காட்சிகள் ஆச்சரியமூட்டின.

பழங்குடி இனத்தின் உட்பிரிவுகளில் ஒன்று ‘கோத்ர’. இந்த மக்களை குறிக்கும் வகையில் ‘கோத்ர கலாமண்டலம்’ என இந்தச் சேனலுக்கு பெயர் வைத்துள்ளனர். கேரளத்தில் 37 வகையான பழங்குடியின குழுக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குப் பாரம்பரிய அறிவு ஏராளம். பழங்குடி கலைஞர்களின் ‘ஆசாத் கலா சங்கம்’ இந்த யூடியூப் சேனலின் மூளையாக இருந்து செயல்பட்டாலும் பழங்குடிகளின் கூட்டு முயற்சியாகவே இதை செயல்படுத்தி வருகின்றனர்.

மூப்பன்
மூப்பன்

அபூர்வ மருத்துவ முறைகள்!

இது தொடர்பாக, ஆசாத் கலா சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான பழனிச்சாமி நம்மிடம் பேசுகையில், “பெரும்பாலும் பழங்குடி குடியிருப்புகளில் வாழும் முதிய பழங்குடிகள் தங்கள் கிராமம், குடியிருப்பைத் தாண்டி வெளியே செல்வதில்லை. இதனால் அவர்களின் பாரம்பரிய அறிவு வெளி உலகுக்குத் தெரிவதில்லை. அட்டப்பாடி பகுதியில் 480 பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளன. இதேபோல் ஒவ்வொரு பழங்குடி பகுதியிலும் பிரத்யேகமான மரபு மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மக்களை பெரிதும் பாதிக்கும் நோய்களுக்கும், பிணி வருமுன் தடுப்பதற்கும் பழங்குடிகள் நுட்பமான வாழ்வியல் முறையை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

இந்த மருத்துவத் தகவலையும், வாழ்வியல் அனுபவங்களையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியே இந்த யூடியூப் சேனல். பழங்குடியின கலைகளையும் வெளி உலகுக்குக் கொண்டு சேர்க்கும் பெருங்கனவு உள்ளது. இப்போதுதான் வீடியோக்களைப் பதிவேற்றத் தொடங்கியுள்ளோம். இன்னும் சில மாதங்களில் இது பழங்குடி மக்களின் ஆவணமாகத் தலைமுறைக்கும் நின்று பேசும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in