52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்

எஸ்சி, எஸ்டி மாணவர் நிதியில் முறைகேடு
52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்

எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்விதொகையில், சுமார் ரூ.17 கோடிவரை முறைகேடு செய்திருப்பதாக, 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியிருக்கிறது.

கடந்த 2011முதல் 2014-ம் ஆண்டு காலகட்டத்தில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்விதொகையில், சுமார் ரூ.17 கோடி 36 லட்சம் முறைகேடு செய்திருப்பதாகவும், இந்த முறைகேட்டில் 52 கல்லூரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், வழக்கறிஞர் அசோக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் 10 விதங்களில் பள்ளி, கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான உதவித் தொகையில் ரூ.4 கோடி, பெரம்பலூரில் இல்லாத கல்லூரிக்கு ரூ.58லட்சம், ஒரே மாணவருக்கு ஒரே ஆண்டில் பலமுறை கல்வி உதவித்தொகை பெயரில் ரூ.13 லட்சம், கல்வி உதவி தொகையை கல்லூரி பயன்பாட்டுக்காக பயன்படுத்தி ரூ.24லட்சம் முறைகேடு, ஒரே மாணவனுக்கு வெவ்வேறு அடையாள அட்டையை அடிப்படையாக வைத்துப் பலமுறை எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.13 லட்சம் முறைகேடு, வேறு மாநில மாணவர்களுக்கு, மாணவர் அல்லாத நபருக்கு என வெவ்வேறு முறையில் ரூ.17 கோடி வரை பல்வேறு வகைகளில முறைகேடுகள் நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த முறைகேட்டில் பல பாலிடெக்னிக் கல்லூரி, பயிற்சிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி என 52 கல்லூரிகளுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெயரிடப்படாத உயர் கல்வித் துறை அதிகாரிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் எஸ்சி, எஸ்டி மாணவர் கல்வித் தொகையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். நாளை முதல் கல்லூரி முதல்வர்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in