மோடி பாணியில் பின்வாங்கிய ஜெகன்மோகன்: சாதித்த விவசாயிகள்

3 தலைநகர் சட்டத்தை திரும்ப பெற்றது ஆந்திரா
மோடி பாணியில் பின்வாங்கிய ஜெகன்மோகன்: சாதித்த விவசாயிகள்
போராட்டத்துக்கு திரண்ட அமராவதி விவசாயிகள்

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதுபோல, ஒரு மாநில அரசு தனது 3 தலைநகர் சட்ட மசோதாவை திரும்பப்பெற்றுள்ளது. தென்னக மாநிலமான ஆந்திராவில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட ஆந்திராவின் தலைநகரான ஹைதராபாத், 2014ல் பிரிக்கப்பட்ட தெலுங்கானாவுடன் போனது. இதனால் புதிய தலைநகரை நிர்மாணிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆந்திர மாநிலம் ஆளானது. அதன்படி அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய தலைநகராக அமராவதியை அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கினார். 2019ல் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி, ஒன்றல்ல மூன்று தலைநகரங்கள் ஆந்திராவுக்கு நிர்மாணிக்கப்படும் என்று உறுதியளித்தார். அதற்கான சட்ட மசோதாவும் கொண்டு வரப்பட்டது.

3 தலைநகர் முடிவை எதிர்த்து போராட்டம்
3 தலைநகர் முடிவை எதிர்த்து போராட்டம்

அதன்படி நிர்வாகத்துக்கு விசாகப்பட்டினம், நீதிதுறைக்கு கர்னூல், சட்டமன்றத்துக்கு அமராவதி என்ற 3 தலைநகரங்களுக்கான ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இது தொடர்பான சட்ட மசோதாவையே, தற்போது திரும்பப் பெறுவதாக இன்று(நவ.22) ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

இதற்கு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு மற்றும் ஜெகனின் அமைச்சரவை சகாக்களின் அதிருப்தி ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகின்றன. ஜெகன் அரசின் 3 தலைநகர் முடிவுக்கு எதிராக அமராவதியை சேர்ந்த விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் 700 நாட்களைத் தாண்டியுள்ள நிலையில், பாத யாத்திரை உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளையும் ஆந்திர விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகளின் தொடர் போராட்டத்தை அடுத்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்ததும், அதே போன்ற முடிவுக்காக ஆந்திராவிலும் எதிர்பார்ப்புகள் முளைத்தன. ஜெகனின் அமைச்சரவை சகாக்களும் 3 தலைநகர் முடிவுக்கு ஆரம்பம்தொட்டே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். துக்ளர் தர்பார் என்று எதிர்க்கட்சிகளும் ஏளனம் செய்து வந்தன.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

இந்நிலையில் 3 தலைநகர் முடிவு தொடர்பாக, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது வாபஸ் முடிவை இன்று அறிவித்தார். பழைய மசோதாவுக்கு பதிலாக புதிய திருத்தப்பட்ட மசோதா கொண்டுவரப்படும் எனவும் ஜெகன் அரசு அறிவித்துள்ளது. ஆனால் 3 தலைநகர் யோசனையை முழுவதுமாக கைவிட்டு, அமராவதியை மட்டுமே தலைநகராக கைகொள்ளும் முடிவுக்கு ஜெகன் அரசு இறங்கி வந்துள்ளதாக தெரிய வருகிறது.

வடக்கே, 3 வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டம் மத்திய அரசை பணிய வைத்தது. அதே பாணியில் தெற்கே, 3 தலைநகரங்களுக்கு எதிரான போராட்டம் ஆந்திர மாநில அரசை பணிய வைத்துள்ளது. இரண்டிலும் போராட்டங்கள் வென்று, அரசின் சட்டங்கள் திரும்பப்பெறப்படுகின்றன. ஆச்சர்ய ஒற்றுமையாய் இரண்டின் பின்னணியிலும் சத்தமின்றி சாதித்திருக்கிறார்கள் சாமானிய விவசாயிகள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in