தடுப்பூசி பெறாதவரை சாய்க்கும் ஒமைக்ரான்: உரைகல் அமெரிக்கா!

தடுப்பூசி பெறாதவரை சாய்க்கும் ஒமைக்ரான்:  உரைகல் அமெரிக்கா!

இங்கிலாந்தில் ஒமைக்ரான் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதன் மத்தியில், அமெரிக்காவின் முதல் ஒமைக்ரான் உயிரிழப்பு உலகுக்கு ஓர் உண்மையைச் சொல்கிறது.

கரோனா பரவலில், அதன் உருமாறிகளில் டெல்டா அளவுக்கு ஒமைக்ரான் வீரியமானதல்ல என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். ஒமைக்ரானின் பரவும் வேகம் டெல்டாவை விட 70 மடங்கு அதிகம் என்பதற்கு அப்பால், ஒமைக்ரானால் உண்டாகும் உடல்நல பாதிப்புகள் குறைவே என்றும் குறிப்பிட்டு வந்தார்கள். ஆனால் கள நிலவரத்தின் அடிப்படையில், தடுப்பூசியே ஒமைக்ரான் பாதிப்பை ஓரளவுக்கு தடுக்கிறது என்றும், டெல்டா போலவே ஒமைக்ரானும் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது என்றும் தெரியவருகிறது.

ஒமைக்ரான் பாதித்தவர்கள் அடிப்படையான கரோனா மருத்துவ பராமரிப்புடன், தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் இவையெல்லாம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கே பொருந்தும். தடுப்பூசி போட்டவர்களின் நோய் எதிர்ப்பாற்றல், கரோனாவின் அனைத்து திரிபுகளுக்கும் எதிராக சிறப்பாகச் செயலாற்றுகிறது. இதன் மூலம் தேவையான மருத்துவ பராமரிப்புடன் அவர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பாகிறது.

அதேவேளை, தடுப்பூசி போடாதவர்களை ஒமைக்ரான் தீவிரமாக பாதிக்கிறது என்பது தெரியவருகிறது. இம்மாதத்தின் தொடக்கத்தில், இங்கிலாந்து தனது முதல் ஒமைக்ரான் உயிரிழப்பை அறிவித்தது. உலக அளவிலும் அதுதான் முதல் உயிரிழப்பாகும். அதில் தொடங்கி நேற்று(டிச.20) வரை இங்கிலாந்தில் 12 பேர் ஒமைக்ரான் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தற்போது, அமெரிக்க மண்ணில் முதல் ஒமைக்ரான் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 சொச்ச வயதுடைய டெக்சாஸை சேர்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்றிய நிலையில், அது தொடர்பான உடல்நல உபாதைகளால் அவர் தற்போது உயிரிழந்துள்ளார். இவர் ஒரு டோஸ் கூட கோவிட் தடுப்பூசி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ் என அமெரிக்காவில் முழு வீச்சில் தடுப்பூசி விழிப்புணர்வு இயங்கும் போதும், தடுப்பூசிக்கு எதிரானவர்கள் அவற்றை போட்டுக்கொள்ள மறுத்து வருகின்றனர்.

தற்போது தடுப்பூசி போடாததில் ஒமைக்ரானால் உயிரிழந்தவரை முன்வைத்து அமெரிக்க அரசும், தடுப்பூசி ஆர்வலர்களும் அங்கு தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டால், கரோனா உருமாறிய வைரஸ்கள் நம்மைத் தொற்றினாலும் உயிர் பிழைக்க ஏதுவாகும் என்பது, அந்த பிரச்சாரத்தின் அடி நாதம். அமெரிக்காவுக்கு அப்பாலும் அந்த குரல்கள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in