’உத்தர பிரதேச தேர்தலை ஒத்திவையுங்கள்’: உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்

’உத்தர பிரதேச தேர்தலை ஒத்திவையுங்கள்’: உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்
அலகாபாத் உயர் நீதிமன்றம்

பெருந்தொற்றுப் பரவலின் அபாயத்தைத் தடுக்க, தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்துமாறும், உத்தர பிரதேச தேர்தலை தள்ளிப்போடுமாறும், பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணையர் ஆகியோரை அலகாபாத் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

வழக்கொன்றின் விசாரணை தொடர்பாக நீதிமன்றம் பதிவு செய்த கருத்துகளின் ஊடாக, இந்தக் கரோனா குறித்த கவலையும் பகிரப்பட்டது. அப்போது நீதிபதி சேகர் குமார் யாதவ், தனது ஆதங்கத்தை நீதிமன்றத்தில் இப்படிப் பதிவு செய்தார். “இரண்டாம் அலையின் பாதிப்புகளை நாம் நன்கறிவோம். அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் நாம் அனைவருக்குமே உயிர் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. ஆனால், அதிகரிக்கும் கரோனா பரவலின் மத்தியில் லட்சக்கணக்கானோர் கூடும் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களால் அவை மேலும் பரவ வாய்ப்பாகும். உத்தர பிரதேசத்தின் பஞ்சாயத்து தேர்தல் மற்றும் மேற்கு வங்க தேர்தல்களில் இதன் பாதிப்பை கண்கூடாகப் பார்த்தோம். அதன் பிறகும், கரோனா விதிமுறைகளை பின்பற்ற வாய்ப்பில்லாத கூட்டங்கள் மற்றும் பேரணிகளைத் தொடர்ந்து வருகிறோம்” என்று அவர் கவலை தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடியின் தடுப்பூசி இயக்கம் மற்றும் அதன் இலக்கை அடைய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், சாதனைகள் ஆகியவற்றைப் புகழ்ந்த நீதிபதி, அங்கிருந்து ஒமைக்ரான் பரவல் குறித்த அபாயங்களுக்குத் தாவினார். ”ஒமைக்ரான் பரவல் குறித்த அபாயங்களை அனைவரும் அறிவோம். பெருந்தொற்று ஆபத்து மீண்டும் நம் வாசலுக்கு வந்துவிட்டது. இந்தச் சூழலில் தேர்தல் பிரச்சாரத்தின் பொருட்டு மிகப்பெரும் மக்கள் கூட்டங்கள் கூடுவது மூன்றாம் அலைக்கு வித்திடும்” என்று எச்சரித்தார்.

இவை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில், பெரும் பேரணிகளை உள்ளடக்கிய தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் உடனடியாகத் தடை செய்யவும், உத்தர பிரதேச தேர்தலை தள்ளிவைப்பதை பரிசீலிக்குமாறும் பிரதமர் மற்றும் தேர்தல் கமிஷனை நீதிபதி கேட்டுக்கொண்டார். அவ்வாறு தவிர்க்க இயலாது எனில், ’அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வாயிலாகப் பிரச்சாரத்தைத் தொடரலாமே’ எனவும் நீதிபதி யோசனை தெரிவித்தார். தேர்தல் தயாரிப்புப் பணிகளைத் தடுத்து நிறுத்தாவிடில், ’இரண்டாம் அலையைவிட மோசமான பாதிப்புக்கு நாம் ஆளோவோம்’ என்றும் நீதிபதி கவலை தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் சூழலில், பல்வேறு உதாரணங்கள் மற்றும் மேற்கோள்களுடன் அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பதிவு செய்திருக்கும் அக்கறை, பொதுவெளியில் பரவலாக கவனம் ஈர்த்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in