கடலூரில் நடைபெற்ற விவாத அரங்கம்
கடலூரில் நடைபெற்ற விவாத அரங்கம்

'பலவிதப் போராட்டங்களைக் கடந்தே தினமும் உயிர் வாழ்கிறோம்' - திருநங்கைகள் கண்ணீர்

திருநங்கைகளை காவல்துறை உள்ளிட்ட அனைவரும் மனிதநேயத்துடன் அணுக வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16வது மாநில மாநாட்டையொட்டி 'திருநங்கைகள் சந்திக்கும் வாழ்வியல் சவால்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் விவாத அரங்கம் நேற்று கடலூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய திருநங்கைகள் தங்கள் துயரங்களை பகிர்ந்து கொண்டனர். "சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட சமூகத்தில் தங்களுக்கு எந்த அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களாகவே வாழ்ந்து வருகிறோம்" என தெரிவித்தனர்.

மேலும், 'அடிப்படை வசதிகளான உண்ண உணவு, உடுத்த உடை, உறைவிடம் இவற்றிற்காக யாசகம் செய்தும், பாலியல் தொழில் செய்தும் உயிர் பிழைக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளதாகவும், காவலர்கள் உள்ளிட்ட அனைவராலும் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், பலவிதமான போராட்டங்களைக் கடந்து, தினம் தோறும் உயிர் வாழ வேண்டிய நிலைமையில் இருப்பதாகவும்' கண்ணீருடன் தெரிவித்தனர்.

பங்கேற்ற திரு நங்கைகள்
பங்கேற்ற திரு நங்கைகள்

அதனையடுத்து திருநங்கைகளை மனிதநேயத்தோடு காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் அணுக வேண்டும், தமிழ்நாடு அரசு திருநங்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும், செயல்படாமல் தேக்க நிலையில் உள்ள திருநங்கைகளின் நல வாரியங்களை மனிதநேயமிக்க அதிகாரிகளை கொண்டு உடனடியாக செயல்பட வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை தீர்மானங்கள் விவாத அரங்கத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அ.இ.மாதர் சங்க தலைவர் சுதா சுந்தர்ராமன், எல் ஐ சி காப்பீட்டு கழக ஊழியர் சங்க இணை செயலாளர் வைத்திலிங்கம், புதுச்சேரி சகோதரன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷீத்தல் நாயக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in