உஷார்: கூகுள் பே-யும் அமேசானும் நம்மைக் கைவிடலாம்!

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா நமக்கும் உணர்த்தும் பாடம்
உஷார்: கூகுள் பே-யும் அமேசானும் நம்மைக் கைவிடலாம்!

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதைப் பற்றி பேசிப் பேசி ஓய்ந்துவிட்டோம். அதில் முக்கால்வாசி அமெரிக்கத் தரப்பு நியாயங்களே, ரஷ்யத் தரப்பு செய்தி முழுமையாக நம்மை வந்தடையவில்லை என்ற குரலும் காதில் கேட்கிறது. இருக்கட்டும்.

பேருந்தில் ஒருவன் பிக்பாக்கெட் அடிக்கிறான். நாம் பார்த்துவிட்டோம். துணிச்சல் இருந்தால் அவனைப் பாய்ந்து பிடிப்போம் அல்லது கூச்சலாவது போடுவோம். பயமாக இருந்தால், கமுக்கமாக சைகை காட்ட முயற்சிப்போம். பயந்தாங்கொள்ளியாக இருந்தாலும் சரி, தைரியசாலியாக இருந்தாலும் சரி அனிச்சையாக ஒன்றைச் செய்வோம். நம்முடைய பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று தடவிப் பார்ப்போம். சரி, விஷயத்துக்கு வருகிறேன். இந்த உலகமயமாக்கல் சூழலில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா? நாம் என்றால் நம்முடைய நாடு பாதுகாப்பாக இருக்கிறதா?

"இந்தியா மேல எவன் குண்டு போடப் போகிறான். அமெரிக்காவும் நம்முடன் நட்பாக இருக்கிறது. ரஷ்யா அதைக்காட்டிலும் அன்பைப் பொழிகிறது. பிறகென்ன பிரச்சினை?" என்று கேட்கலாம். இருக்கிறது. நடப்பது வெறும் ஆயுதப் போர் மட்டுல்ல, பொருளாதாரப் போர், தொழில்நுட்பப் போர். அமெரிக்கா தொடுத்திருக்கிற அந்த மறைமுகப் போரை ரஷ்யாவாலேயே தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதற்கு நீங்கள் நேரடிப் போரே தொடுத்திருக்கலாம் என்று ரஷ்ய அதிபரே வாய்விட்டுச் சொல்லியிருக்கிறார்.

அரசுக்கும் அரசுக்குமான போரில், அமெரிக்க கார்பரேட் நிறுவனங்களும் தங்கள் வேலையைக் காட்டிவிட்டன. உலகம் முழுக்க கடை பரப்பியிருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தும் தனது ரஷ்ய சேவையை முற்றாகத் துண்டித்திருக்கின்றன. கூகுள், யுடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா, மைக்ரோசாஃப்ட், அமேசான், பெப்ஸி உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் சேவையை நிறுத்திவிட்டன. நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஊடக நிறுவனங்கள், வால்ட் டிஸ்னி, சோனி, வார்னர் பிரதர் போன்ற சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், சிட்டி பேங்க் உள்ளிட்ட வங்கிகள், ரஷ்யாவில் 5 கிளைகளை வைத்திருந்த அமெரிக்க ஓட்டல்கள், கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்திவிட்டன.

ஏர் பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே ரஷ்யா வாங்கிய விமானங்களுக்கு உதிரி பாகமும் தரமாட்டோம், சர்வீசும் செய்து தர மாட்டோம் என்று சொல்லியிருக்கிறது. தனிமனிதர்கள் பயன்படுத்துகிற டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான விசா, மாஸ்டர் கார்டு சேவை துண்டிப்பு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ்களின் சேவை நிறுத்தம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். உள்நாட்டில் அந்நிறுவனங்களின் கிளைகளில் பணியாற்றிய ரஷ்யர்கள் எல்லாம் நடுத்தெருவில் நிற்கிறார்கள். அமெரிக்க கார் என்று பெருமையாக வாங்கியவர்கள், இனி அந்தக் காரை சர்வீஸ்கூட விட முடியாது. அமெரிக்க சரக்கடித்துப் பழக்கப்பட்டவர்களுக்கு இனி அந்த சரக்கு கிடைக்காது.

இந்தியா உலகமயமாக்கலுக்குள் நுழைந்து 30 ஆண்டுகள் ஆகப்போகிறது. குக்கிராமங்கள் கூட இப்போது உலக மயமாக்கலின் நன்மைகளை நுகரத் தொடங்கியிருக்கின்றன. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்தது போன்ற தடைகள் நம் நாட்டின் மீதும் விதிக்கப்பட்டால், என்னவெல்லாம் நடக்கும் என்று சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. நம்மூரிலும் வெளிநாட்டு கார், வங்கிச் சேவை, அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் எல்லாமும் இருக்கிறது. உங்கள் பர்ஸைத் திறந்து பார்த்தால் விசா அல்லது மாஸ்டர் கார்டு இருக்கும். நாளைக்கே அமெரிக்கா நம் நாட்டின் மீது தடை என்ற பெயரில் இந்தச் சேவைகளைத் தடை செய்து, தான் முதலீடு செய்த தனியார் வங்கியையும் மூடி, நாம் செல்போன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப் பயன்படுத்தும் கூகுள் பே மாதிரியான ‘ஆப்’பையும் தடை செய்துவிட்டால் என்ன செய்வது? அதைவிடுங்கள் ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தில்தான் நம்முடைய செல்போன்கள் எல்லாமே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதை முடக்கிவிட்டால், ஒட்டுமொத்த இந்தியர்களின் செல்போன்களும் காயலான் கடைக்கல்லவா போய்விடும்? அதற்கு மாற்று இயங்குதளத்தை நாம் அறிமுகப்படுத்துவது எப்போது?

உஷாராக இருக்கிறோமா?

நம்முடைய பழநி முருகன், எனக்கென்று ஒரு நாடு, என் மக்கள், கொடி என்று சொன்னதைப் போல, சீனா தனக்கென ஒரு இணையம், தனக்கென ஒரு வங்கிச் சேவை, தனக்கென ஒரு சமூக ஊடகம், தனக்கென கார், விமான தயாரிப்பு நிறுவனங்கள் என்று எல்லாவற்றிலும் தனிக்கடை போட்டதன் அர்த்தம் இப்போதுதான் நமக்கு விளங்குகிறது. சீனா அளவுக்கு இல்லாவிட்டாலும் ரஷ்யாவும்கூட அதில் கூடுதல் கவனம் செலுத்தியது.

ஒரு வகையில் நாம் மோடி அரசைப் பாராட்டலாம். சீனாவுடன் எல்லையில் பிரச்சினை என்றதும், முதல் வேலையாக டிக்டாக் உள்ளிட்ட அவர்களது செல்போன் செயலிகளை எல்லாம் இந்திய அரசு தடை செய்தது. முதலில் வேடிக்கையாக இருந்தாலும், அதன் பின்னுள்ள சூட்சுமம் இப்போது புரிகிறது. சீனா செய்திருந்தால் அது நமக்கு இழப்பு. நாமே தடை செய்துவிட்டு, அதற்கு மாற்றையும் அறிமுகப்படுத்தியது உண்மையிலேயே பாராட்டத்தக்க நடவடிக்கைதான்.

ஏற்கெனவே விசா, மாஸ்டர் கார்டுகளுக்குப் பதில் ருபே கார்டை இந்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது என்றாலும் அது பரவலாகப் புழக்கத்தில் இல்லை. இனி வாடிக்கையாளர் வற்புறுத்திக் கேட்டால் ஒழிய, விசா, மாஸ்டர் கார்டுகளை வங்கிகள் வழங்கக்கூடாது என்று உத்தரவு போட வேண்டும். இந்த யுத்த காலத்தில், யுபிஐ வழி பணப்பரிவர்த்தனை செயலியை செயல்படுத்தும்படி, தேசபக்தியுள்ள நம் நாட்டு நிறுவனமான டாடாவை ஊக்குவித்திருக்கிறது மத்திய அரசு.

உள்ளூர்மயம், சுய சார்பு

ரஷ்யா எங்கிருந்து தாக்குதல் நடத்தப் போகிறது, எந்தெந்த விமானங்களில், எத்தகைய ஆயுதங்களுடன் வருகிறார்கள் என்பதை எல்லாம் துல்லியமாக உக்ரைனுக்குப் போட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றன அமெரிக்க நிறுவனங்கள். எப்படி என்கிறீர்களா?

உங்கள் மகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறாளா? அவள் கர்ப்பமாக இருப்பது, உங்களுக்கு முன்பே கூகுள் நிறுவனத்துக்குத் தெரிந்துவிடும் என்று ஒரு புதுமொழி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் செல்கிற இடம், பேசுகிற வார்த்தை, இணையத்தில் தேடுகிற பொருள் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து தகவலைத் திரட்டுகிறது கூகுள். இப்படி ரஷ்ய வாடிக்கையாளர்களிடம் இருந்து திருடப்பட்ட தகவல்களை உக்ரைனுக்கு அளித்திருக்கிறது அமெரிக்கா என்கிறார்கள். நெருக்கடி காலத்தில் தனது வாடிக்கையாளர்களைக் கைவிட்டதுடன் நில்லாமல், அவர்களிடம் திருடிய தகவல்களை எதிரிகளுக்கு அளிப்பது எவ்வளவு பெரிய துரோகம்?

10 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தமிழீழ ஆதரவாளர்கள் பிரபல தனியார் அலைபேசி நெட்வொர்க் நிறுவனத்தின் சிம் கார்டை திரும்ப ஒப்படைப்பதை ஒரு போராட்ட இயக்கமாகவே நடத்தியது நினைவிருக்கலாம். காரணம், அந்த இந்திய நிறுவனம் இலங்கையிலும் தொழில் செய்கிறது. அதன் சிம் கார்டுகளை விடுதலைப்புலிகளும் பயன்படுத்தினார்கள். இலங்கை அரசு கேட்டுக்கொண்டபோது, புலிகளின் ரகசிய பேச்சுக்களையும், தகவல்களையும் அரசு கையில் கொடுத்துவிட்டது அந்த அலைபேசி நெட்வொர்க் நிறுவனம். இதைத் துரோகம் என்றார்கள் நமது தமிழீழ ஆதரவாளர்கள்.

ஆனால் அந்த நிறுவனமோ, “ஒரு நாட்டில் தொழில் செய்ய எங்களுக்கு அனுமதி தருகிற அரசாங்கங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் கேட்டால் கொடுக்கத்தானே வேண்டும்?” என்றது. ரஷ்யாவில் நடப்பதோ வேறு. அந்த நாட்டில் தொழில் செய்து, அந்நாட்டு வாடிக்கையாளர்களின் பணத்தில் வாழ்ந்து கொண்டே, அவர்களது தகவல்களைத் திருடி எதிரி நாட்டுக்குத் தருகிறது அமெரிக்கா. இதே செயல் இனி வருங்காலத்தில் இந்தியாவிலும் நடக்கலாம்.

வாடிக்கையாளர் சேவை பற்றிப் பேசுகிறபோது, உலகிலேயே மோசமான நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள்தான். ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்களைப் போல வாடிக்கையாளர்களை மதிக்கிற நிறுவனங்கள் எதுவும் இல்லை என்று சொல்வார்கள். இப்போது அந்த ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்கள் தன்னுடைய ரஷ்ய வாடிக்கையாளர்களை எவ்வளவு மோசமாக நடத்துகிறது என்பதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

தாராளமயமாக்கல், உலக மயமாக்கலுக்கு ஆதரவாக 5-வது கியரில் போய்க்கொண்டிருக்கும் மோடி அரசு இனி கொஞ்சம் நிதானித்துச் செல்ல வேண்டிதிருக்கும். சீமானும், பாஜகவில் சில தலைவர்களும் சொல்கிறார்களே உள்ளூர்மயம், சுயசார்பு, மேக் இன் இண்டியா, சுதேசி என்று. அதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. தேச பக்தர்களே, ஃபேஸ்புக், ட்விட்டரை விட்டு வெளியேறுங்கள். 'கூ'வில் (Koo) குடியேறுங்கள் என்ற குரலை காது கொடுத்து கேட்க வேண்டிய சூழல், நமக்கு வரலாம். நமது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், எல்ஐசி, ரயில்வே போன்றவற்றை தனியார் மயமாக்குவதாக இருந்தாலும்கூட வெளிநாட்டுக்காரர்களுக்கு பங்கு விற்பனை செய்வது, நாட்டின் பாதுகாப்பையே அடகு வைப்பதற்குச் சமமானது என்பதை உணர வேண்டும்.

சீரியஸான ஒரு பிரச்சினையைச் சொல்லி கட்டுரையை முடிக்கலாம். பொதுவாக அமெரிக்காவின் ஜிபிஎஸ் (இடஞ்சுட்டி) சேவையைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். நம் ராணுவமும் அதைத்தான் பயன்படுத்தியது. கார்கில் போர் நடந்தபோது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றுகொண்டு, நமக்கு அந்தச் சேவையை வழங்க மறுத்தது அமெரிக்கா. உண்மையிலேயே நமது ராணுவம் அப்போது சிரமப்பட்டுப் போனது. அப்போது இந்தியாவுக்கென பிரத்யேகமாக ஒரு இடஞ்சுட்டி சேவை தேவை என உணரப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு (Indian Regional Navigation Satellite System (IRNSS)) என்ற இந்தியப் பகுதிக்காக தற்சார்பு இடஞ்சுட்டி (NAVIC) திட்டத்தை முன்னெடுத்தது இந்தியா. மொத்தம் 7 செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி இந்தச் சேவையை அமல்படுத்துவது நமது திட்டம். அந்தத் திட்டம் முழுமையாக வெற்றியடைந்துவிட்டதா என்று தெரியவில்லை. முழுமையடையவில்லை என்றால், விரைவிலேயே அதை முழுமையாக்க வேண்டும்.

உலக மயமாக்கல் சூழலில், எதுவும் எளிதில் கிடைப்பது போலவே, எளிதில் பறிபோகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, நம்முடைய பர்சும், பல்சும் பத்திரமாக இருக்கிறதா என்பதைச் சரி பார்த்துக்கொள்வோம். நம்மை பாதுகாக்கும் பொறுப்புள்ள அரசும் அதைச் செய்யும் என்று நம்புவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in