அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்

வெளியூர்க்காரர்களுக்கு அனுமதியில்லை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

கரோனா பரவலைத் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழ்நாடு அரசு. அதன்படி வருகிற 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அரசு அறிவித்தது. அன்றைய தினம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்ததால், இதுகுறித்த ஆலோசனை கூட்டம் இன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் ஆட்சியர் எஸ்.அனீஸ் சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். தற்போது தமிழக அரசு விதித்திருக்கிற கூடுதல் வழிமுறைகள் அடிப்படையில் வருகிற ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதால், ஊர் மக்களுடனும், விழா கமிட்டியினருடனும் கலந்தாலோசித்தோம். அந்தக் கூட்டத்தில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்குப் பதில் மறுநாள் (ஜன.17) திங்கள்கிழமை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு ஆட்சியர் அளித்த பதில்களும் வருமாறு:-

ஜல்லிக்கட்டுக்கான கட்டுப்பாடுகள் குறித்துச் சொல்லலாமா?

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஆகியோர் madurai.nic.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அப்போது அவர்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வயது சான்று, 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்கிற தேதிக்கு 2 நாட்களுக்கு முன்பு, கரோனா தொற்று இல்லை என்று எடுத்த ஆர்.சி.பி.சி.ஆர். டெஸ்ட் சான்றிதழையும் கையில் வைத்திருக்க வேண்டும். ஏற்கெனவே சொன்ன அதே கட்டுப்பாடுகளுடன் ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு நடக்கும். ஏற்கெனவே சொன்ன அதே கட்டுப்பாடுகளுடன் ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு நடக்கும்.

மாடுபிடி வீரர்களும், காளை வளர்ப்போரும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆன்லைன் மூலம் பதிவுசெய்வது அவசியம் என்று அறிவித்திருந்தீர்களே? அது இப்போது எந்த நிலையில் இருக்கிறது?

ஆன்லைன் பதிவானது இன்று பகல் 3 மணிக்குத் தொடங்கி, நாளை மாலை 5 மணி வரையில் நடைபெறும். 3 போட்டிக்கும் ஒரே இணையதளத்தில்தான் பதிவு செய்ய வேண்டும். அதேசமயம், ஒரு போட்டியில் பங்கேற்பவர் இன்னொரு போட்டியில் பங்கேற்க முடியாது. எனவே, முன்னுரிமை அடிப்படையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் எது முதல் தேர்வு, எது இரண்டாவது, எது மூன்றாவது என்று முடிவு செய்துகொள்ளலாம். அவர்களது விருப்பப்படி முன்மாதிரி நடக்கும்.

புகழ்பெற்ற ஜல்லிக்கட்டைப் பார்வையிட வெளியூர் பார்வையாளர்கள் நிச்சயம் வருவார்கள். அப்படி வருபவர்களைத் தடுக்க என்னென்ன மாதிரியான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருக்கிறது?

மூன்று ஜல்லிக்கட்டுகளுக்குமே பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நிகழ்ச்சியைப் பார்க்கச் செல்ல முடியும். எனவே, வெளியூர் மக்களுக்குப் அனுமதி கொடுப்பதிலேயே கட்டுப்பாடுகளை விதிக்கப்போகிறோம். எவ்வளவு தொலைவில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் அனுமதிச் சீட்டு இல்லையென்றால் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டோம்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எந்த ஊர்க்காரர்களாக இருந்தாலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம் தானே?

இல்லை. அலங்காநல்லூர் பகுதியினர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம். மற்ற ஊர் ஜல்லிக்கட்டுகளுக்கும் அந்தந்த ஊர் மக்கள் மட்டும்தான் பங்கேற்க வேண்டும். வெளியூர்க்காரர்களுக்கு அனுமதி கிடையாது. 3 ஜல்லிக்கட்டுகளுமே தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. எனவே, மக்கள் வீட்டில் இருந்தே பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in