5ஜி பராக்... பராக்!

என்ன கிடைக்கும் இந்தியாவுக்கு?
5ஜி பராக்... பராக்!

இந்தியத் தொலைத்தொடர்புத் துறை அடுத்த கட்டத்துக்குள் நுழைகிறது. தொலைத்தொடர்பில் ஐந்தாவது தலைமுறை சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் முடிவடைந்து, அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான தேதியும் குறிக்கப்பட்டுவிட்டது. 5ஜி சேவையைப் பயன்படுத்தும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சீனா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற வெகுசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறுகிறது.

சற்றே கடினமான காலகட்டத்தில் இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கவிருக்கிறது. இதனால் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும், கூடவே மக்களுக்கும் நிறைய பலன் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்கபூர்வ சமிக்ஞை

ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுடன் இந்தத் துறைக்கு முற்றிலும் புது வரவான அதானி குழுமமும் (அதானி டேட்டா நெட்வொர்க்ஸ்) ஏலத்தில் பங்கேற்றது. மொத்தம் உள்ள 72 கிகாஹெர்ட்ஸில் 51.2 கிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை இந்நிறுவனங்களுக்கு, அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. அதாவது 71 சதவீத அலைக்கற்றை ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே ரிலையன்ஸ் ஜியோ 88 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 48 சதவீத அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்திருக்கிறது. 39 சதவீத அலைக்கற்றையை பாரதி ஏர்டெல்லும், 12 சதவீத அலைக்கற்றையை வோடஃபோன் ஐடியாவும் எடுத்திருக்கின்றன. அதானி குழுமத்தைப் பொறுத்தவரை குறைந்த அளவே ஏலத்தில் எடுத்திருக்கிறது என்றாலும், அந்நிறுவனம் ஏலத்தில் எடுத்திருக்கும் 26 கிகாஹெர்ட்ஸ் குறுகிய தொலைவுக்குள் 5ஜி சேவை வழங்க மிகவும் பொருத்தமானது. இந்நிறுவனங்களிடமிருந்து முதலாவது தவணையாக அரசுக்கு 13,365 கோடி ரூபாய் கிடைக்கும்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயன்படும் அளவுக்குப் போதுமான 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஆகஸ்ட் 12 முதல் ஒதுக்கீட்டுக்கான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். எனினும், உடனடியாக எல்லா பகுதிகளிலும் 5ஜி பயன்பாட்டுக்கு வந்துவிடாது. இந்தியா முழுவதும் 5ஜி சேவை கிடைக்க இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிடும்.

நிலுவைத் தொகையில் சலுகை, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் 4 ஆண்டுகள் சலுகை என அரசு அறிவித்த சலுகைகளால் உத்வேகம் பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் உற்சாகமாகவே பங்கேற்றன. ஜூலை 26-ல் தொடங்கிய ஏலம், 3 நாட்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 7 நாட்கள் 40-க்கும் மேற்பட்ட சுற்றுகளில் ஏலம் நடந்தேறியது. இந்த ஏலம் தொடர்பாக அரசியல் ரீதியான சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், 5ஜி சேவையால் இந்தியாவுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் ஆக்கபூர்வமான சமிக்ஞைகளையே தந்திருக்கின்றன.

யாருக்கு எவ்வளவு?

700 மெகாஹெர்ட்ஸ், 800 மெகாஹெர்ட்ஸ், 1,800 மெகாஹெர்ட்ஸ், 3,300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் மொத்தம் 24.7 கிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் (ஒரு கிகாஹெர்ட்ஸ் என்பது 1,000 மெகாஹெர்ட்ஸ்). இதற்காக 88,078 கோடி ரூபாயை அரசுக்கு வழங்குகிறது அந்நிறுவனம். குறிப்பாக, 700 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மொத்தமாக ஏலத்தில் எடுத்துவிட்டது. 6 முதல் 10 கிலோமீட்டர் வரை ‘கவரேஜ்’ கொண்டது என்பதால் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை, பயனாளர்களுக்கு வேகமான இணையப் பயன்பாட்டை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

700 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையின் விலை அதிகம் என்பதால் கடந்த இரண்டு ஏலங்களில் இந்த அலைவரிசையை எந்த நிறுவனமும் ஏலத்தில் எடுக்கவில்லை (இந்த முறை 600 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை எந்த நிறுவனமும் தொடவில்லை). இந்த முறை 700 மெகாஹெர்ட்ஸுக்கு 40 சதவீதம் விலைக்குறைப்பை அறிவித்திருந்தது இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்). அது நல்ல பலனையும் தந்திருக்கிறது.

3,300 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை அதானி குழுமம் நீங்கலாகப் பிற நிறுவனங்கள் மொத்தம் 80,590 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கின்றன. 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசையை 14,709 கோடி ரூபாய்க்கு எல்லா நிறுவனங்களும் ஏலத்தில் எடுத்திருக்கின்றன. பாரதி ஏர்டெல் நிறுவனம், 43,084 கோடி ரூபாய்க்கு 900 மெகாஹெர்ட்ஸ், 1,800 மெகாஹெர்ட்ஸ், 2,100 மெகாஹெர்ட்ஸ், 2,500 மெகாஹெர்ட்ஸ், 2,100 மெகாஹெர்ட்ஸ், 3,300 மெகாஹெர்ட்ஸ், 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசை என மொத்தம் 19.8 கிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்திருக்கிறது.

வோடஃபோன் ஐடியா நிறுவனம், 1,800 மெகாஹெர்ட்ஸ், 2,100 மெகாஹெர்ட்ஸ், 2,500 மெகாஹெர்ட்ஸ், 3,300 மெகாஹெர்ட்ஸ், 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை 18,799 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. மொத்தமாக 6.2 கிகாஹெர்ட்ஸ் இந்நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கிறது.

இந்த சேவைக்குப் புதுமுகமான அதானி குழுமம், மொத்தமாகவே 212 கோடி ரூபாய்க்குத்தான் 26 கிகாஹெர்ட்ஸில் 400 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை ஏலத்தில் எடுத்திருக்கிறது. அதானி குழுமம் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் கலந்துகொண்டது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அல்ல. விமான நிலையங்கள், துறைமுகங்கள், தளவாடங்கள் மேலாண்மை போன்ற தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவே 5ஜி அலைக்கற்றையை அந்நிறுவனம் ஏலத்தில் எடுத்திருக்கிறது. 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் மிக வேகமான இணைய சேவை கிடைக்கும். ஆனால், குறுகிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்தான் அந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும் என்பது கவனிக்கத்தக்கது. ஒருவேளை, சேவையைத் தொடர முடியாவிட்டால் 10 ஆண்டுகளில் இதிலிருந்து விலகிக்கொள்ளவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

பிஎஸ்என்எல் இடம்பெறாத பின்னணி

இந்த ரேஸிலிருந்து பின்வாங்க விரும்பாத பிஎஸ்என்எல், கூடுதலாக 35 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யுமாறு கோரி மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தது. 3.5 ஜிஹா ஹெர்ட்ஸ் பேண்டில் 30 மெஹா ஹெர்ட்ஸ் வேண்டும் என்றும், 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில் 5 மெகா ஹெர்ட்ஸ் வேண்டும் என்றும் அக்கடிதத்தில் பிஎஸ்என்எல் உயரதிகாரிகள் கோரியிருந்தனர். அதேசமயம், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இதுவரை 4ஜி சேவையை பெறவேயில்லை.

ஏற்கெனவே, டைனமிக் அலைக்கற்றைப் பகிர்வு (டிஎஸ்எஸ்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 4ஜி சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்க முடியும் என்பதால், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

என்னென்ன பலன்கள்?

டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, புணே போன்ற நகரங்களில் 5ஜி சேவை பெரிய அளவில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் 4ஜி-யை விட 10 மடங்கு வேகம் கொண்டது 5ஜி. ஆப்டிக்கல் ஃபைபர் இணையத்துக்கு இணையான வேகத்தில் பயனாளர்கள் இணையத்தைப் பயன்படுத்த முடியும். எனவே, இதைப் பயன்படுத்தும் ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மிக வேகமான இணையச் சேவை மூலம் மேலும் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு விநியோகம், ஆன்லைன் கல்வி, ஆன்லைன் மருந்து விற்பனை என இணையம் / செயலி மூலம் வழங்கப்படும் சேவைகள் இனி புதிய வேகம் பெறும். தொழில்நுட்பம் தொடர்பான சிக்கல்களுக்கும் தீர்வு கிட்டும்.

‘டிஜிட்டல் இந்தியா’ எனும் பதத்துக்கு உண்மையான அர்த்தம் இனிமேல்தான் கிடைக்கவிருக்கிறது என்கிறார்கள் தகவல் தொடர்புத் துறை வல்லுநர்கள். குறிப்பாக, இயந்திரங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு, மெட்டாவெர்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் போன்றவற்றின் மேம்பாட்டுக்கும் பெரிய அளவில் உதவப்போகிறது 5ஜி.

இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையின்படி 2021-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 83 கோடியைத் தாண்டிவிட்டது. 2015-ல் இருந்ததைவிட இந்த எண்ணிக்கையில் 53 கோடி அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், 5ஜியின் வருகை இந்தியர்களின் வாழ்க்கையில் ஆக்கபூர்வ மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in