
மகாராஷ்டிர மாநிலத்தில் எருமை மாடுகள் வளர்ப்பு மற்றும் பால் வியாபாரத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் பட்டதாரி இளம்பெண் ஒருவர்.
மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகர் அருகில் இருக்கும் நிகோஜ் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரத்தா தவான் (23). இவரது தந்தை ஒருசில எருமை மாடுகளை வளர்த்து அதன் முலம் தனது குடும்பத்தை கவனித்து வந்தார். திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் முடங்கிப் போனார். அதனால் 11 வயதான அவரது மகள் ஸ்ரத்தா குடும்ப பாரத்தை தனது தோளில் ஏற்றிக் கொண்டார்.
அப்போது வீட்டில் ஒரு,சில எருமை மாடுகள் மட்டும் இருந்தது. ஸ்ரத்தா படித்துக்கொண்டே தன் வீட்டில் மாடுகளையும் கவனித்துக்கொள்ள ஆரம்பித்தார். அதனால் மாடுகளின் எண்ணிக்கை கொஞ்சம் உயர ஆரம்பித்தது. பாலைக் கறந்து இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று பால் வியாபாரம் செய்தார். பள்ளி நேரத்துக்குள் அதை முடித்துவிட்டு வந்து சரியாக பள்ளிக்கு சென்று வந்தார்.
வருமானம் உயர ஆரம்பித்ததும் அதைக் கொண்டு மேலும் மாடுகளை வாங்கினார். 2015-ம் ஆண்டு 10-வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தினமும் 150 லிட்டர் பால் சப்ளை செய்தார். 2016-ம் ஆண்டு மாடுகளின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்தது. ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் அளவுக்கு வருமானம் கிடைத்தது. மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் சவால்களும் அதிகரித்தது. தீவனம், பால் விற்பனை உள்ளிட்ட எல்லா சிக்கல்களையும் சமாளித்து தற்போது மாடுகளின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் தினமும் 450 லிட்டர் பால் கிடைக்கிறது. வேலைக்கு ஆட்கள் வைத்திருக்கிறார். பால் பண்ணையை கவனித்துக் கொண்டாலும் படிப்பை கைவிடவில்லை. கிராமத்தில் இருந்துகொண்டே கல்லூரி படிப்பையும் தொடர்ந்தார். தற்போது எம்எஸ்சி முடித்துள்ளார். தற்போது மண்புழு உரம் தயாரிக்கும் தொழிலையும் செய்து வருகிறார்.
ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் கிலோ மண்புழு உரம் சி.எஸ் அக்ரோ ஆர்கானிஸ் என்ற பெயரில் விற்பனை செய்கிறார். அதோடு மாட்டுச்சாணத்தில் இருந்து பயோகேஸ் தயாரிக்கிறார். தற்போது பால் பக்கத்து பண்ணைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. "பால் மற்றும் மண்புழு உரம் விற்பனை மூலம் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது''என்று ஸ்ரத்தா தெரிவித்தார்.