மூன்றாம் பாலினத்தவர் வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்று

மூன்றாம் பாலினத்தவர் வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்று

மூன்றாம் பாலினத்தவர்களின் குறைகளைக் களையவும், அவர்கள் அரசு உயர் பதவிகளில் எட்டிப் பிடிக்கவும் அவர்களுக்கு பிரத்யேகக் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஷ்ணு, நெல்லை ஆட்சியர்
விஷ்ணு, நெல்லை ஆட்சியர்

மூன்றாம் பாலினத்தவர்கள் சமூக ரீதியாக எதிர்கொள்ளும் சிக்கல்கள் கொஞ்சம் இல்லை. வளரிளம் பருவத்தில் தங்களுக்குள் ஹார்மோன் மாற்றத்தினால் சமநிலை குழப்பத்திற்கு ஆளாகின்றனர். ஒருகட்டத்தில் நண்பர்களின் பகடிக்கு உள்ளாவதும் நிகழ்கிறது. இதை வீட்டில் சொன்னதும் ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் கிடைத்துவிட்டால் அவர்களின் வாழ்வு தவம். அப்படி ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்கள் இருக்கும் போதுதான் வீட்டைவிட்டு வெளியேறும் நிர்பந்தம் ஏற்படுகிறது. கல்வியில் இடைநின்று போதிய பணிவாய்ப்பும் இல்லாமல் அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் அபாயமும் நிகழ்ந்துவிடுகிறது. அதற்கு ஒருவகையில் அவர்களது பெற்றோரே காரணமாகி விடுவதுதான் அதிர்ச்சியானது.

இப்படியான சூழலில்தான் திருநங்கை, திருநம்பிகளின் வாழ்வில் வெளிச்சத்தை வீசும் சில அறிவிப்புகளைச் செய்துள்ளார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு. அதன்படி, மாதத்திற்கு ஒருமுறை விவசாயிகள், பென்சனர்கள், மீனவர்களுக்கு பல மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. அதேபோல் திருநெல்வேலியில் வரும் மே மாதத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருநங்கை, திருநம்பிகளுக்கான குறைதீர் கூட்டம் நடத்தப்படும். மூன்றாம் பாலினத்தவர் போட்டித் தேர்வில் வாகை சூடும் வகையில் பயிற்சி வகுப்புகள், அவர்களுக்கு உயர்கல்வி கற்க விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள், தொழில் பயிற்சி தேவைப்படுவோருக்கு தொழில் பயிற்சி ஆகியவையும் வழங்கப்படும் என நெல்லை ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

இது மூன்றாம் பாலினத்தவரின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தையும், அவர்களின் வாழ்வில் வெளிச்சக் கீற்றையும் படரவிடும் என்பதில் சந்தேகம் இல்லை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in