பெத்தவங்ககூட இப்படி கவனிக்க மாட்டாங்க!- கைப்பைகள் சொல்லும் கண்ணீர்க் கதைகள்!

பெத்தவங்ககூட இப்படி கவனிக்க மாட்டாங்க!- கைப்பைகள் சொல்லும் கண்ணீர்க் கதைகள்!

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் ஆகிய இடங்களுக்குச் சென்றால் பெயர், முகவரி, குற்றப்பத்திரிகை எண் எழுதப்பட்ட கைதிகளின் கேஸ் கட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள  மாநகராட்சி முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்திலும் இப்படியான காட்சியைக் காண முடியும்.

இந்த இல்லத்தின் காப்பாளர் அறைக்குள் நுழைபவர்கள், சுவற்றில் ஆணியடித்து, வரிசைக்கிரமமாக விவரங்கள் எழுதப்பட்டு தொடங்கவிடப்பட்டிருக்கும் வெள்ளை நிறக் கைப்பைகளைப் பார்த்து, ‘இது என்ன?’ என்று கேட்காமல் திரும்ப முடியாது. அப்படித்தான் இந்த விடுதிக் காப்பாளர் கங்காதரனிடம் நானும் கேட்டேன்.

‘‘இங்கே உள்ளவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள். எனவே இவர்கள் ஒவ்வொருவருக்கும் பி.பி, சுகர், ஆஸ்துமா, இருதயக்கோளாறு, சீறுநீரகப் பிரச்சினை என்று நிறைய இருக்கும். இந்தப் பைகளில் இவர்களது உடல்நிலை, சிகிச்சை தொடர்பான கேஸ் ஹிஸ்டரி இருக்கிறது. இவர்களுக்கு உடலில் என்ன பிரச்சினை? எத்தனை நாட்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக  சிகிச்சை பெற்றனர், எந்த நாளில் டிஸ்சார்ஜ் ஆனார்கள், என்னென்ன மருந்துகள் எந்தெந்த நேரத்திற்கு உட்கொள்ள வேண்டும், அடுத்து எப்போது எந்த மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட எல்லா விவரங்களும் இந்தக் கைப்பைக்குள் இருக்கும். இந்தப் பைகளை ஒவ்வொரு முறையும் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுதான் இவர்களுக்கான மருந்து மாத்திரைகள் வாங்குகிறோம். அட்மிஷனும் போடுகிறோம்” என்றார் கங்காதரன். இந்தப் பைகளில் நிறைந்திருக்கும் சோகக் கதைகள் கல்நெஞ்சத்தையும் கரையச் செய்பவை.

கைவிடப்பட்டவர்கள்

இந்த இல்லத்தில் முதியவர்கள் 95 பேர் தங்கியிருக்கிறார்கள். இவர்களில் வெளி மாநிலத்தவர்களும் உண்டு. ஐந்தாறு வருடங்களுக்கு மேலாக இங்கேயே தங்கி உள்ளவர்களும் இருக்கிறார்கள். உறவினர், நண்பர்கள் என யாரும் இவர்களை வந்து பார்ப்பதில்லை. ஒரு சிலர் மட்டும் சில மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்குச் சென்று தன் சொந்த பந்தங்களைப் பார்த்துவிட்டு, ஓரிரு நாட்களில் இல்லத்துக்கே திரும்பி விடுகின்றனர். இவர்களை மிகுந்த பரிவுடனும் பாசத்துடனும் பராமரித்துக் கொள்கிறார்கள் இந்தக் காப்பகத்தின் உதவியாளர்கள். இதை நெகிழ்ச்சி ததும்ப விவரித்தார் கங்காதரன்.

“இல்லத்தில் தங்கியிருக்கும் ஆலமுத்து ஒரு மாற்றுத்திறனாளி. 44 வயது. திருச்சி பெரம்பலூரைச் சேர்ந்தவர். இவருக்கு 1,500 ரூபாய் பென்ஷன் தொகை இவர் வீட்டுக்கு வருது. இவரோட உறவினர்கள் அந்தப் பணத்தை மட்டும் வாங்கிக்குவாங்க. ஆனால், இவரைப் பராமரிக்க மாட்டாங்க. ஒரு தடவை வீட்ல கோவிச்சுட்டு வந்துட்டாரு. ரோட்ல விழுந்து கிடந்தவரைப் போலீஸ்காரங்க மீட்டு எங்ககிட்ட கொண்டுவந்து விட்டாங்க. இப்பவும் பேங்க்லருந்து அவருக்கு போன் வரும். அப்ப மட்டும் போய் பென்ஷன் பணத்தை எடுத்து வீட்ல கொடுத்துட்டு அடுத்த நாளே இங்கே வந்துடுவார். வீட்லயே இருக்க வேண்டியதுதானேன்னு கேட்டா, ‘இல்லே சார். எனக்கு இங்கே இருந்தாத்தான் நிம்மதியா இருக்கு’ன்னு சொல்லுவார். ஒரு தடவை இவருக்கு நெஞ்சுவலி வந்துருச்சு. உடனே ஆட்டோ பிடிச்சு 20 நிமிஷத்தில் அரசு மருத்துவமனையில் அட்மிட் பண்ணி காப்பாத்திட்டேன். 5 நாள் ஆஸ்பத்திரியில் இருந்தார். அப்புறம் இல்லத்தில் இருந்தபடி தான் இன்னமும் சிகிச்சை பெற்று வர்றார்” என்றார் கங்காதரன்.

ஆலமுத்துவிடம் பேசினோம். ‘‘மூணு மாசத்துக்கு ஒருவாட்டி பெரம்பலூர் போவேன். பேங்க்லருந்து மூவாயிரம் பணத்தை எடுத்து அம்மாகிட்ட கொடுப்பேன். பணம் வாங்கும்போது மட்டும் டீ சாப்பிடறியா, சோறு சாப்பிடறியான்னு எங்க ஆயா கேட்கும். கேட்கறதோட சரி. ‘இந்தக் காலை வச்சுக்கிட்டு எப்படி சாப்பிடுவே?’ன்னு திட்டும். நான் அப்பவே கிளம்பிடுவேன். எங்க ஆயாவுக்கு நான் தேவையில்லை. பணம்தான் வேணும். எனக்குக் கல்யாணம் பண்ணிவைம்மான்னு கேட்டிருக்கேன். ‘இந்தக் காலை வச்சுட்டு உனக்குக் கல்யாணம் ஒரு கேடா... கருமாதிதான் பண்ணுவேன்’னு சொல்லும். அதுல கோவிச்சுட்டு வந்தவன்தான். இங்கேயே இருக்கேன். இங்கே நெஞ்சு வலி வந்து விழுந்து கிடந்தமாதிரி ஊர்ல கிடந்திருந்தேன்னா வீட்லயே சாகட்டும்னு விட்டிருப்பாங்க. இங்கேன்றதால காப்பாத்திட்டாங்க. பெத்தவங்ககூட இப்படி கவனிக்க மாட்டாங்க’’ என்று கண்ணீர் ததும்பச் சொல்கிறார் ஆலமுத்து.

இனியும் காத்திருக்க வேண்டியதில்லை

மேலும் சில விஷயங்களை கங்காதரன் பகிர்ந்து கொண்டார். “திவாரின்னு ஒரு 30 வயசு வடநாட்டுக்காரப் பொண்ணு. வழிதவறி வந்துட்டார். பி.இ பட்டதாரி. அவருக்கும் உடம்புக்கு சரியில்லை. அவருக்கும் சிகிச்சை நடந்துட்டிருக்கு. அவங்க சொந்தக்காரங்களுக்குத் தகவல் சொல்லிவிட்டிருக்கோம். இங்கே தங்கியிருக்கும் ஹரிகிருஷ்ணனுக்குக் கிட்னி பிரச்சினை. வருஷக் கணக்கா இங்கே தங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துட்டிருக்கார். இவங்களோட டாக்டர்கள் ஒவ்வொரு கிழமையில ஒவ்வொருத்தர் இருப்பாங்க. அந்த நாள் பார்த்து எங்க உதவியாளர் 15 நாளைக்கு ஒரு தடவை, 30 நாளைக்கு ஒரு தடவைன்னு போவார். இந்த பையைக் கொண்டு போய் குறிப்பிட்ட டாக்டர்கிட்ட காட்டினா, சம்பந்தப்பட்ட நோயாளியோட உடல்நிலையைப் பற்றி விசாரிச்சுட்டு, அடுத்த 15 நாளைக்கு மருந்து மாத்திரை தந்துடுவார். ஒரு வேளை நோயாளியின் உடல்நிலை மோசம்னு தெரிஞ்சா கூட்டீட்டு வந்து அட்மிட் போடுங்கன்னு சொல்லிவிடுவார்” என்றவரை இடைமறித்து, ‘‘சாதாரணமா ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போனாலே ‘ஓபிக்குப் போங்க... எக்ஸ்ரே டிபார்ட்மென்ட்டுக்குப் போங்கன்னு’ன்னு சுற்ற விடுவார்களே. இத்தனை பேரை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள்?” என்று கேட்டோம்.

‘‘முதல்ல சிரமமாகத்தான் இருந்தது. அப்புறம் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலாவை ஒரு தடவை போய் பார்த்தோம். வாரா வாரம், வெவ்வேற நாட்களில் மாத்திரை, மருந்து கொடுக்கிறீங்க. இதையே 15 நாட்களுக்கு ஒரு முறை, ஒரு மாசத்துக்கு ஒரு தடவை மாத்திரை மருந்து கொடுத்தா எங்க வருகையும் காத்திருப்பும் குறையுமேன்னு கோரிக்கை வச்சோம். அவங்களும் எங்க நிலைமையப் புரிஞ்சுகிட்டு, ஒரு ஆர்டர் போட்டு, ‘முதியோர் காப்பகத்திலயிருந்து வந்தா யாரையும் நிற்க வைக்க வேண்டாம். நோயாளிகளை அவசியமில்லாம கூட்டிட்டு வரச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்’னு சொல்லிட்டாங்க. அதனால இப்ப இந்த வேலையில சிரமம் ஏதுமில்லை’’ என்றார் கங்காதரன்.

கங்காதரன் மாதிரியான நல்லிதயங்கள் இருக்கும் வரை, ஆதரவற்றோர் என யாரும் இல்லை என்று ஆறுதல் கொள்ளலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in