ஆறாத் துயரத்தில் ஆப்கன்- அச்சத்தில் உறைந்திருக்கும் மக்கள்!

ஆறாத் துயரத்தில் ஆப்கன்- அச்சத்தில் உறைந்திருக்கும் மக்கள்!

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

அழுகையும் ஆற்றாமையுமாகத் தத்தளித்துக் கொண்டிருக்கிறது ஆப்கானிஸ்தான். ஒருபுறம், விமானங்களில் ஏறி ஆப்கனைவிட்டு எங்கேயேனும் சென்றுவிட வேண்டும் என்று அப்பாவி மக்கள் முட்டிமோதுகிறார்கள். விமான நிலையத்திலோ துப்பாக்கி முனைகளும் கண்ணீர்ப் புகை குண்டுகளும்தான் அவர்களை வரவேற்கின்றன. ஆகஸ்ட் 15-ல் தாலிபான்கள் இறுதியாகத் தலைநகர் காபூலைக் கைப்பற்றிவிட்ட நிலையில், அந்நாடு முழுவதும் அச்ச உணர்வு பரவியிருக்கிறது. 2001-ல் அமெரிக்காவால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட தாலிபான்கள், மீண்டும் ஆப்கனைத் தங்கள் வசமாக்கிவிட்டார்கள்.

அமெரிக்கா செய்த துரோகம்

ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் நடவடிக்கையைத் துரிதப்படுத்தியதன் மூலம் மிக மோசமான விளைவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்படுத்திவிட்டார். வியட்நாம் போருக்குப் பிறகு தார்மிக ரீதியில் அமெரிக்காவுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய தோல்வி இது. 1 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை ஆப்கனுக்காக அமெரிக்கா செலவழித்திருக்கிறது. கடைசியில் மீண்டும் தாலிபான்களின் ஆட்சிக்கே அமெரிக்காவின் இந்த முடிவு வழிவகுத்திருக்கிறது.

ஆப்கன் ராணுவத்தையும் காவல் துறையையும் மேம்படுத்த தேவைக்கு அதிகமாகவே உதவியிருப்பதாக வெறுப்புடன் கூறிவந்த பைடன், தாலிபான்கள் அடுத்தடுத்து பெற்றுவந்த வெற்றிகள் குறித்து கவலைப்படவே இல்லை. “ஆப்கனில் 75 ஆயிரத்துச் சொச்சம் தாலிபான்கள்தான் இருக்கிறார்கள். ஆனால், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 3 லட்சம் ஆப்கன் படையினர் அவர்களை எளிதாக எதிர்கொள்ள முடியும்” என்று ஜூலை 8-ல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சத்தியம் செய்யாத குறையாக பைடன் கூறினார். ஆனால், அடுத்த சில நாட்களில் ஆப்கனில் என்ன நடந்தது என்பதை உலகமே பார்த்தது.

“2001 செப்டம்பர் 11-ல் உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் நடத்திய அல்கொய்தா மீது தாக்குதல் நடத்தவே ஆப்கனுக்குச் சென்றோம். அந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டது. 2011-ல் ஒசாமா பின் லேடனை ஒழித்துவிட்டோம்” என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி ப்ளிங்கன். ஆக, உலகில் தங்கள் அதிகபட்சக் கடமை அமெரிக்காவுக்கு வரும் ஆபத்தைத் தடுப்பதுதான் என்று பைடன் பகிரங்கமாகவே உணர்த்திவிட்டார்.

அனுகூலங்களுக்காக அமைதி காக்கும் நாடுகள்

பல ஐரோப்பிய நாடுகள் காபூலில் உள்ள தங்கள் தூதரகங்களை மூடிவிட்ட நிலையில், சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் தங்கள் தூதரகங்களை மூடவில்லை. தாலிபான்களுடன் சுமுக உறவைப் பேணும் இந்த நாடுகள் தத்தமது சொந்த ஆதாயத்துக்கே முக்கியத்துவம் தருகின்றன. இவை மூன்றுமே அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவை என்பது இன்னொரு விஷயம்.

தாலிபான்கள் முறைப்படி ஆட்சியமைத்த பின்னர்தான் அவர்களை அங்கீகரிப்போம் என சீனா கூறியிருந்தாலும், ஏற்கெனவே அந்த அமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் சீனாவுக்குப் பல அனுகூலங்கள் கிட்டியிருப்பது மறுக்க முடியாதது. அதேபோல், ஆப்கனில் நிகழ்ந்துவரும் மாற்றங்களைப் பாகிஸ்தான் வெளிப்படையாகவே வரவேற்கிறது. பல குழுக்களை உள்ளடக்கிய தாலிபான் அமைப்பில், கணிசமானோர் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

அச்சுறுத்தி வென்ற தாலிபான்கள்

தாலிபான்கள் பயன்படுத்தும் பெரும்பாலான ஆயுதங்களும், வாகனங்களும் ஆப்கன் படைகளிடமிருந்து கைப்பற்றப்பட்டவைதான். அமெரிக்காவில் தயாரான அதிநவீன ஆயுதங்கள் இப்போது தாலிபான்களின் கைகளில் தவழ்கின்றன. ஆப்கன் படைகளுக்கு அமெரிக்கா வழங்கியிருந்த போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இப்போது தாலிபான் வசம்.

“எங்களுக்கு எதிராகச் சண்டையிடுவதைக் கைவிட்டுவிட்டால் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கொல்லமாட்டோம்” என்று ஆப்கன் படையினரை தாலிபான்கள் எச்சரித்திருந்தனர். அதேபோல், ஆப்கன் அரசின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் தாவா கான் மினாபாலைப் படுகொலை செய்ததன் மூலம் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர். இப்படியான அதிரடி வியூகங்கள் மூலம் எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே தாலிபான்கள் தங்கள் இலக்கை எட்டிவிட்டனர்.

அரசு நிர்வாகம்

தலைநகர் காபூலைக் கைப்பற்றி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் ஆட்சி நிர்வாகம் தொடர்பாகத் தாலிபான்கள் தரப்பிலிருந்து தகவல்கள் இல்லை. தாலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் கனி பராதர், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியிருக்கும் நிலையில் அவர் தலைமையில் புதிய அரசு அமையும் என்று ஊகங்கள் எழுந்திருக்கின்றன.

இதற்கிடையே, காபூலில் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் மற்றும் ஆப்கன் தேசிய நல்லிணக்கத்துக்கான உயர் கவுன்சில் அப்துல்லா அப்துல்லா ஆகியோருடன் தாலிபான் முக்கியத் தலைவரின் சகோதரர் ஒருவர் ஆட்சி மாற்றம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்துதான் தாலிபான் செய்தித் தொடர்பாளர்கள் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அச்சம் தரும் காட்சிகள்

கடும் கண்டனங்களுக்கு நடுவில் சர்வதேச அங்கீகாரம் பெறும் முயற்சியில் தாலிபான்கள் இறங்கியிருக்கிறார்கள். எதிரிகளுக்குப் பொதுமன்னிப்பு அளித்துவிட்டதாக உறுதியளித்திருக்கிறார்கள். மக்களுடன் இணக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளவும் முயல்கிறார்கள். ஆனால், அங்கிருந்து வரும் களநிலவரங்கள் காட்டும் காட்சிகள் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.

ஆப்கன் சுதந்திர தினமான ஆகஸ்ட் 19 அன்று, ஊர்வலமாகச் செல்ல முயன்ற ஆப்கானியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பலரைக் கொன்று குவித்திருக்கிறார்கள் தாலிபான்கள். வடகிழக்கு நகரமான ஜலாலாபாத் நகரில் மக்கள் நடத்திய போராட்டத்தை துப்பாக்கிச்சூடு நடத்தி ஒடுக்கியிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தில் பத்திரிகையாளர்களும் தாக்குதலுக்குள்ளாகி யிருக்கிறார்கள். ஆப்கனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கோஸ்ட் மாகாணத்திலும், கிழக்குப் பகுதியில் உள்ள குனார் மாகாணத்திலும் மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றன.

ஏற்கெனவே அல்கொய்தா அமைப்புடன் மிக நெருக்கமான நட்புறவில் தாலிபான்கள் இருக்கிறார்கள். தற்போது ஐஎஸ், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளும் ஆப்கனுக்குள் நுழைந்திருக்கும் நிலையில் அங்கு அச்ச உணர்வு மேலும் அதிகரித்திருக்கிறது. மண முடிப்பதற்காகச் சிறுமிகளைக் கடத்துவது, படைகளில் சேர்க்க சிறுவர்களைக் கடத்துவது போன்ற செயல்களில் தாலிபான்கள் ஈடுபடத் தொடங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பெண்களின் நிலை என்ன?

 “ஆப்கனில் மக்களாட்சி இல்லை. ஷரியா சட்டத்தின்படிதான் ஆட்சி” என்று தாலிபான்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்ட நிலையில், மத ரீதியான கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. சமூகத்தில் பெண்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்று தாலிபான்கள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தாலும் நிதர்சனம் வேறாக இருக்கிறது. பெண் எம்பி-க்களின் வீடுகளில் புகுந்து தேடுதல் நடத்திய தாலிபான்கள், அவர்களது கார்களையும் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். சார்கின்ட் மாவட்டத்தின் முன்னாள் பெண் கவர்னர் சலீமா மஸாரி தாலிபான்களுக்கு எதிராகச் சண்டையிட வீரர்களை நியமித்திருந்தார். அவரைத் தற்போது தாலிபான்கள் கைதுசெய்திருக்கிறார்கள். பெண் பத்திரிகையாளர்கள் பணிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

1996 முதல் 2001 வரையிலான ஆட்சிக்காலத்தில் கசையடி, கை கால்களை வெட்டுவது, சுட்டுக்கொல்வது என கடுமையான தண்டனைகளை நிறைவேற்றியவர்கள் தாலிபான்கள். பெண் குழந்தைகள் பள்ளி செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கன் சமூகத்தில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பெண்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இவை அனைத்தும் இனி அடியோடு மாறிவிடும் எனும் அச்சம் எழுந்திருக்கிறது. பெண்கள் அணியும் புர்கா விற்பனை அதிகரித்திருக்கிறது. ஆண்கள் பஷ்தூன் சல்வார் கமீஸ் எனப்படும் பாரம்பரிய உடையை அணியும் கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

கையறு நிலையில் மக்கள்

ஆப்கானியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்க எல்லைகளில் தீவிரக் கண்காணிப்பில் பாகிஸ்தான் ஈடுபட்டிருந்தது. இத்தனைக்கும் ஆப்கன் அகதிகள் அதிகம் வசிக்கும் நாடு பாகிஸ்தான். தாலிபான் ஆதரவு நிலைப்பாட்டால், ஆப்கன் மக்களைப் பாகிஸ்தான் கைவிட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், மனது மாறி ஆப்கானியர்களைத் தங்கள் எல்லைக்குள் அனுமதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் பாகிஸ்தான் அதிகாரிகள். எனினும், ஆப்கனிலேயே தொடர்ந்து வசிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் மக்கள், தாலிபான்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்தான் வாழ்ந்தாக வேண்டும்.

இதுவரை இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் செய்துவந்த நிதியுதவிகள் உள்ளிட்டவை தாலிபான்களால் மறுதலிக்கப்படும் சூழலில், நிலைமை இன்னும் மோசமாகும். விரைவில் அங்கு உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு வரலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இத்தனை ஆண்டுகளில் 2.5 லட்சம் ஆப்கானியர்கள் அகதிகளாகப் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பெண்களும், குழந்தைகளும்தான். இனி ஆப்கனிலிருந்து புகலிடம் தேடிச் செல்லும் மக்கள் மேற்கத்திய நாடுகளிலும், இந்தியாவிலும் தஞ்சம் புகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி என்ன?

அமெரிக்கப் படைகளை முற்றிலுமாகத் திரும்பப் பெறக்கூடாது என வலியுறுத்தி 44 அமெரிக்க எம்பி-க்கள் அதிபர் பைடனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். மக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்கவே வேறுவழியின்றி ஆப்கனிலிருந்து வெளியேறியதாகக் கூறியிருக்கும் ஆப்கன் (முன்னாள்) அதிபர் அஷ்ரப் கனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்திருக்கிறார். விரைவில் ஆப்கனுக்குத் திரும்பப்போவதாகவும் கூறியிருக்கிறார். “ஆப்கன் மக்களைக் கைவிட மாட்டோம்; கைவிடவும் முடியாது” என ஐநா கூறியிருக்கிறது. ஆனால், புவிசார் அரசியலில் ஆக்கபூர்வ மாற்றங்கள் ஏற்படாத வரை ஆப்கன் மக்களுக்கு விடிவுகாலம் இல்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in