விளையாடுங்க... உடல் பலமாகுங்க!- கல்வி அமைச்சரின் காணொலி கரிசனம்

விளையாடுங்க... உடல் பலமாகுங்க!- கல்வி அமைச்சரின் காணொலி கரிசனம்

கரு.முத்து
muthu.k@kamadenu.in

இப்போதிருக்கும் அன்றாடப் பரபரப்புக்கு இடையே, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டிருக்கும் உடற்பயிற்சி காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. அந்தக் காணொலியில் நடைபயிற்சி, ஓட்டம், பளு தூக்குதல், யோகாசனம் என்று பல்வேறு உடற்பயிற்சிகளைச் செய்தும், சிலம்பம், கூடைப்பந்து, கிரிக்கெட், இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடியும் ‘ஆல்ரவுண்ட’ராக அசத்தியிருக்கிறார் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சி மாவட்ட வாலிபால் கழகத்தின் தலைவராக இருக்கும் மகேஷ், மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில்  வாலிபால் போட்டிகள் நடத்தி பரிசளித்திருக்கிறார். கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளையும் நடத்த உதவியிருக்கிறார். சமீபத்திய காணொலி குறித்து அவரிடம் பேசினோம். ஆனந்தச் சிரிப்போடு அளவளாவினார் அமைச்சர்.

உடற்பயிற்சி விழிப்புணர்வு காணொலி வெளியிடும் எண்ணம் எப்படி உதயமானது?

தலைவர் கலைஞர் தன்னால் இயன்றவரை யோகாசனம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்துகொண்டிருந்தார். அதேபோல திமுகவின் இன்றைய தலைவரும், தமிழக முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் உடல் நலனில் அதிக அக்கறை காட்டக்கூடியவர். எவ்வளவு பணிச்சுமைகள் இருந்தாலும் தினந்தோறும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். அவரைப் போன்றவர்களைப் பார்க்கும்போது எங்களுக்கும் உடல்நலனிலும், உடற்பயிற்சிகள் மீதும் ஆர்வமும் அக்கறையும் ஏற்படுகிறது.  

அத்துடன் தற்போது நாம் உடற்பயிற்சிகள் செய்யாததால், நமது தேக ஆரோக்கியத்தை இழந்துகொண்டிருக்கிறோம். அதனால் அனைவரும் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை பொதுமக்களிடம் வைக்கலாமே என்ற எண்ணம் உதித்தது. அந்த எண்ணத்துக்குச் செயல்வடிவம் கொடுத்தவர், திருச்சி நேஷனல் கல்லூரியின் விளையாட்டுத் துறை துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி. அவரது ஊக்கத்தினால்தான் இந்தக் காணொலி தயாரானது. இதைப் பார்த்துவிட்டு, தமிழகத்தில் ஒரு ஆயிரம் பேராவது உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மகிழ்வேன்.

நீங்கள் தினம்தோறும் உடற்பயிற்சி செய்வீர்களா?  

நான் திருச்சியில் இருக்கும்போதெல்லாம் காலையில் நேஷனல் கல்லூரிக்குச் சென்றுவிடுவேன். குறைந்தது ஒரு மணி நேரத்தில் இருந்து அதிகபட்சம் இரண்டரை மணி நேரம் வரை அங்கு உடற்பயிற்சிகள் செய்வேன். குறிப்பாக, வாக்கிங், ஜாக்கிங் கட்டாயம் இருக்கும். அதற்குப் பிறகு, கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சிகளை மேற்கொள்வேன்.

உங்களுக்கு அதிகம் பிடித்த விளையாட்டு எது?

இறகுப்பந்துதான் எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. அதுவும் நண்பர்களுடன் விளையாடுவது ரொம்பவே பிடிக்கும். நேரம் போவதே தெரியாமல் விளையாடிக்கொண்டிருப்பேன். மற்ற விளையாட்டுகளைவிட இறகுப்பந்து விளையாடும்போது மன இறுக்கம் குறைவது நன்றாகவே தெரியும். என்னைப் போன்றவர்களுக்கு வெளியில் ஏற்படும் மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை விளையாட்டுகளின் மூலம்தான் குறைகின்றன.

நம் அனைவருக்குமே ஏதாவது ஒருவகையில் மன அழுத்தம் ஏற்படத்தான் செய்கிறது. அதனால், அனைவருமே உடற்பயிற்சிகளைச் செய்தோ அல்லது விளையாட்டில் ஈடுபட்டோ தங்களது மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இதை நான் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், ஆசிரியர்கள் பெற்றோர்கள்  என அனைவருக்குமான வேண்டுகோளாக வைக்கிறேன். இந்தக் காணொலியிலும் இதை வலியுறுத்தியிருக்கிறேன்.

சென்னையில் இருக்கும்போதும் விளையாடுவீர்களா?

சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் உள்ளவன் என்பதால் சென்னையில் இருக்கும்போதும் விளையாட்டு, உடற்பயிற்சிகளில் கட்டாயம் ஈடுபடுவேன். உதயா (உதயநிதி), அறிவு (அறிவுநிதி) ஆகியோருடன் மைதானத்துக்குப் போனால் அவ்வளவு சீக்கிரம் வீடு திரும்பமாட்டோம்.  

என்ன விளையாட்டு விளையாடுவீர்கள்?

எல்லா விளையாட்டுகளும் விளையாடுவோம். அதிகமாகக் கிரிக்கெட் விளையாடுவோம்.  

உதயநிதி எப்படி விளையாடுவார்?

மிக நன்றாக விளையாடுவார். பேட்டிங்கில் வெளுத்துவாங்குவார். அவரை அவுட் ஆக்குவது ரொம்பவே கஷ்டம்.

உங்கள் விருப்பம் பேட்டிங்கா, பவ்லிங்கா?

எனக்குப் பந்து போடுவதுதான் விருப்பமானது.

விளையாட்டுக் காணொலியில் உள்ள எல்லா விளையாட்டுகளும் உங்களுக்குத் தெரியுமா?

தெரியும். ஆனால், சிலம்பத்தைத்தான் இன்னும் முழுமையாகக் கற்றுக்கொள்ளவில்லை. ஆர்வம் இருக்கிறது. நேரம்தான் போதவில்லை.

இந்த விளையாட்டுகளைப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் திட்டம் இருக்கிறதா?

உடற்பயிற்சிகள் மட்டுமில்லாமல், நம்முடைய மரபுக் கலைகளை யும் பள்ளி மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. முதல்வரோடும், தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சரோடும் இதுகுறித்துப் பேசி என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.  

மரபுக்கலைகள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?

நம்மிடம் விளையாட்டு உட்பட ஏராளமான கலைகள் இருந்திருக் கின்றன. அவற்றில் பாதிக்கும் மேல் வழக்கொழிந்து போய்விட்டதாகச் சொல்கிறார்கள். இருக்கும் கலைகளைக் காப்பாற்ற வேண்டும். வழக்கொழிந்துபோன கலைகளையும் மீட்டெடுக்க வேண்டும். இதில் அந்தத் துறை அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு ஆர்வமாக இருக்கிறார்.

நம்முடைய பழமையான பண்பாட்டையும், நாகரிகத்தையும் கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களிலிருந்து அகழாய்வு செய்து மீட்டெடுப்பது போல நம்முடைய மரபுக் கலைகளையும் அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

உங்கள் உடற்பயிற்சி காணொலி மூலம் ஊருக்கு  என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அனைவரும் காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் உடற் பயிற்சிக்காகச் செலவிட வேண்டும். என்னதான் நாள் முழுவதும் மற்றவர் களுக்காக உழைத்தாலும் நமக்கான நேரமாக அந்த ஒரு மணி நேரத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்களும் விளையாடுங்கள், குழந்தைகளையும் விளையாட விடுங்கள். தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டில் ஈடுபட்டால், அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கலாம். முதலில் நாம் உடலினை உறுதிசெய்யவேண்டும். “100 இளைஞர்களைக் கொடுங்கள். இந்த நாட்டை மாற்றிக்காட்டுகிறேன்” என்றார் விவேகானந்தர். அந்த இளைஞர்கள் அறிவுக்கூர்மை உள்ளவர்களாக மட்டும் இருந்தால் போதாது, உடலில் உறுதி கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in