அலறவிடும் ஆன்லைன் அட்டூழியங்கள்: சைபர் குற்றங்களைச் சமாளிப்பது எப்படி?

அலறவிடும் ஆன்லைன் அட்டூழியங்கள்: சைபர் குற்றங்களைச் சமாளிப்பது எப்படி?

சாதனா
readers@kamadenu.in

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப மோசடியாளர்களின் முகம் மாறிக்கொண்டே இருக்கும். சமீபத்திய உதாரணம், ‘ஃபேஸ்புக் ஃபேக் ஐடி’-க்கள் மூலம் நடக்கும் பண மோசடி. ஃபேஸ்புக்கில் இயங்கிவரும் பலர், தங்கள் பெயரில் மோசடிப் பேர்வழிகள் போலி ஐடி-க்களை உருவாக்கி மெஸெஞ்சர் மூலம் தங்கள் நண்பர்களிடம் பணம் கேட்கிறார்கள் எனக் குமுறிக்கொண்டிருக்கின்றனர். கூடவே, முன்பின் தெரியாத சர்வதேச அலைபேசி எண்களிலிருந்து வரும் வாட்ஸ்-அப் வீடியோ வில்லங்க அழைப்புகளும் பலரைப் பதறச் செய்கின்றன.

சைபர் சதிவலை

சமீபத்தில் சண்டிகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு வந்திருக்கிறது. மறுமுனையில் அரை நிர்வாணமாக ஒரு இளம் பெண் பாலியல் தூண்டில் போட்டுப் பேசியிருக்கிறார். ஆடையை அவிழ்க்கும்படி அந்த இளைஞரையும் வற்புறுத்தியிருக்கிறார். இளைஞரோ செய்வதறியாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டார். அடுத்த நாள் அவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு காணொலி வந்து சேர்ந்தது. அதில், அதே பெண்ணுடன் நிர்வாணமாக அவர் வீடியோ கால் பேசியது போன்று ‘மார்ஃபிங்’ செய்யப்பட்டிருந்தது. சற்று நேரத்தில், புதிய எண்ணில் இருந்து பேசிய மற்றொரு வாட்ஸ்-அப் கால் ஆசாமி பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். அந்த எண்ணை அவர் பிளாக் செய்ய, அடுத்த சில நாட்களில் வெவ்வேறு எண்களிலிருந்து பலர் அழைத்து அச்சுறுத்தி இருக்கிறார்கள்.

நிம்மதியிழந்த இளைஞர் ஒருகட்டத்தில் சைபர் குற்றத் தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அலைபேசி எண் உள்ளிட்ட அவரது தனிப்பட்ட தகவல்களை அவரது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எடுத்து, இப்படி ஒரு சதியை அந்த மோசடிக் கும்பல் செய்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

பெண்கள் மீது பழிபோடாதீர்!

இதுகுறித்து சைபர் குற்றங்களைக் கண்டறியும் பணியில் இயங்கிவரும் சிலரிடம் பேசினோம்.

“இப்படியெல்லாம் நடப்பது உண்மைதான். ஆனாலும், பாலியல் சார்ந்த ஆன்லைன் அச்சுறுத்தல்களில் சிக்காமல் இருக்க ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தாதீர்கள், அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்பை ஏற்காதீர்கள் என்றெல்லாம் நான் அறிவுறுத்த மாட்டேன்” என்று பேசத் தொடங்கினார் சைபர் சமூக ஆய்வாளர் வினோத் ஆறுமுகம்.

“ஆன்லைன் வழி பாலியல் அச்சுறுத்தல் களில் பெரும்பாலும் சிக்கித்தவிப்பது பெண்கள்தான். அவர்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லாதபோதிலும் இந்திய சமூகம் பாதிக்கப்பட்டவரையே பழிப்பதைப் பண்பாடாகக் கொண்டிருக்கிறதே! ஒரு பெண் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ‘பொது இடங்களில் அன்பைப் பரிமாற உதட்டோடு உதடு முத்தம் தருவதில் தவறேதுமில்லை’ என்று பதிவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். உடனடியாக அவருக்கு முன்பின் தெரியாதவர்கள்கூட, ‘உனக்கு லிப் கிஸ் தரட்டுமா?’ என்று அநாகரிகமாக கமென்ட் இடுவது இங்கு சகஜமாக நடக்கிறது. அவ்வாறு நிகழும்போது, ‘உனக்கு இது தேவையா, நீ எதற்காக வரம்பு மீறுகிறாய்?’ என்பன போன்ற கேள்விகளைப் பாதிக்கப்பட்டவரைப் பார்த்துத்தான் நாம் கேட்க பழக்கப்பட்டிருக்கிறோம். இந்த மனப்பான்மையை முதலில் மாற்ற வேண்டும். அரசும் ஊடகமும் மனது வைத்தால் அதைச் செய்ய முடியும்” என்கிறார் வினோத்.

மேலும், “செய்தி, விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகரீதியான செயலிகள் என நம் ஒவ்வொருவரின் அலைபேசியிலும் சராசரியாக 30 செயலிகள் குடிகொண்டிருக்கின்றன. இந்தியச் சந்தையில் அன்றாடப் பயன்பாட்டுக்கு ஐநூற்றுக்கும் மேற்பட்ட செயலிகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றில் எதுவுமே பாதுகாப்பானவை அல்ல என்பதுதான் நிதர்சனம். ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரை ப்ரொஃபைல் லாக் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவரப்பட்டாலும் போலி ஐடி பிரச்சினைகள் நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகின்றன. இதற்குப் பயனாளர்கள் தரப்பில் கவனமாக இருப்பது அவசியம்தான். ஆனாலும் கொண்டை ஊசியைக் கொண்டே பூட்டைத் திறந்து வீடு புகுந்து திருடுகிறார்கள் என்றால், பூட்டைத் தயாரிக்கும் நிறுவனம்தானே அதற்குப் பொறுப்பு? தான் கொடுக்கும் சாவியைத் தவிர எதைக் கொண்டும் திறக்க முடியாத பூட்டை அவர்கள்தானே தயாரிக்க வேண்டும்? அதுபோலத்தான் உங்களுடைய சமூக ஊடக ஐடி களவாடப்படும்போது புகாரை அந்த நிறுவனங்களுக்கு முதலில் தெரியப்படுத்துங்கள். வெறுமனே, ‘என்னுடைய பெயரில் ஃபேக் ஐடி வலம் வருகிறது ஜாக்கிரதை நண்பர்களே’ என்று மட்டும் பதிவிடுவது தீர்வாகாது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எப்படித் தவிர்ப்பது?

இதுபோன்ற அவஸ்தைகளைத் தவிர்க்கும் யோசனை களையும் வினோத் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “ஏற்கெனவே நட்பு வட்டத்தில் இருப்பவர் பெயரில் போலி ஐடி உருவாக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகம் எழுந்தால், அந்த profile-ஐ கிளிக் செய்து facebook.com/----- என்ன பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். பெரும்பாலும் போலி ஐடிகள் பெயரில் ஒரு சொல்லை மாற்றி உருவாக்குவார்கள். அந்த profile-க்குள் உங்களது வேறு சில நண்பர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டிருந்தால் கூடுமானவரை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். ஃபேஸ்புக்குக்குப் புகாரை அனுப்புங்கள். தெரியாத நபரிடம் இருந்து வரும் நட்பு கோரிக்கை ஏற்கும் முன்னதாக அவர்களது profile-ஐ பார்வையிடுங்கள். Follow என்கிற option-ஐப் பூட்டி வையுங்கள். இல்லாவிடில் ஃபேஸ்புக் நட்புப் பட்டியலில் இல்லாதவர்கள்கூட உங்களைப் பின்தொடர முடியும். தொழில்முறை தொடர்பான அலைபேசி அல்லது தொலைபேசி எண்களைத் தவிர தனிப்பட்ட எண்ணை இணையத்தில் பதிவிடாதீர்கள். சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை நான் யூடியூபிலும் முகநூலிலும் வழங்கும்போதெல்லாம், ‘என்னுடைய சமூக வலைதளப் பக்கத்தை ஹேக் செய்தோ, ஃபேக் ஐடி மூலமோ யாரும் மோசடி செய்ய முடியாது. என்னையும் என் வட்டத்தில் இருப்பவர்களையும் மிரட்டியெல்லாம் பணம் பறிக்க முடியாது’ என்று பலர் பின்னூட்டமிடுகிறார்கள். சிக்கலின் தீவிரம் அவர்களுக்குப் புரியவில்லை. உங்களது பெயரில் பெண்களிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டால் என்ன செய்வீர்கள்? நம்முடைய சொந்த வாழ்க்கையும் சைபர் உலக வாழ்க்கையும் வெவ்வேறானவை அல்ல. எப்படி உங்களது வீட்டுக்கான சாவியை எல்லோரிடமும் தர மாட்டீர்களோ அதே போன்று அலைபேசி எண்ணையும் ஃபேஸ்புக்கில் பதிவிடாதீர்கள்” என்றார் வினோத்.

சைபர் போலீஸ் இருக்கு உதவ!

‘அலைபேசியோ, மடிக்கணினியோ எதைப் பயன்படுத்தினாலும் மறுமுனையில் உலகமே உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறது என்கிற எச்சரிக்கை உணர்வோடு செயல்படுங்கள்’ என வலியுறுத்துகிறார் காவல் துறையைச் சேர்ந்த அன்பரசன்.

சைபர் குற்ற தடுப்புப் போலீஸ் பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அன்பரசன் கூறுகையில், “சாதாரண
மாகத் தொலைபேசியில் பேசும்போதுகூட உங்களுடைய பேச்சு பதிவு செய்யப்படலாம் என்கிற கவனம் வேண்டும். அதிலும் அலைபேசி அழைப்பெனில் ஸ்பீக்கரில் வைத்து 10 பேர் கேட்கக்கூடும், வீடியோ கால் எனில் 10 பேர் பார்க்கக்கூடும். இதை மனதில் நிறுத்தி உரையாடினாலே நாகரிகமான பேச்சு வந்துவிடும். சம்பந்தமில்லாத நபர் உங்களிடம் பாலியல் ரீதியில் பேசத் தொடங்கினாலே ஜாக்கிரதையாகிவிடுங்கள். இதையும் மீறி நீங்கள் பாதிக்கப்படும்போது உடனடியாக cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனிலேயே புகாரைப் பதிவிடுங்கள். இதுதவிர தமிழ்நாடு காவல் துறையிலும் இணையம் (eservices.tnpolice.gov.in) வழியாகவே புகாரைப் பதிவுசெய்யலாம். விசாரணையின்போது அவசியமெனில் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். மற்றபடி நீங்கள் காவல் நிலையத்தில் காத்திருந்து புகார் அளிக்க வேண்டும் என்கிற சூழல் இன்றில்லை” என்றார்.

டிஜிட்டல் பயன்பாடு நம்முடைய அன்றாடத்தில் கலந்து விட்ட நிலையில், அதைத் தவிர்ப்பதோ அதைக் கண்டு அஞ்சுவதோ தீர்வாகாது. எச்சரிக்கை உணர்வும் பாதிக்கப்பட்டால், துணிந்து புகாரளிப்பதுமே தீர்வு தரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in