பாலிதீன் பைகளால் கூடுகட்டும் நாமக்கோழி!- நீலகிரியில் ஓர் அவலம்

பாலிதீன் பைகளால் கூடுகட்டும் நாமக்கோழி!- நீலகிரியில் ஓர் அவலம்

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து தொடர்ந்து நாம் விவாதித்து வருகிறோம். ஆனால், பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்ட மாவட்டம் என போற்றப்படும் நீலகிரியின் ஊட்டி ஏரியில், நாமக்கோழி என்றழைக்கப்படும் நீர்ப்பறவை பிளாஸ்டிக் கழிவுகளால் கூடுகட்டும் அவலத்தைப் பார்க்கும்போது, நாம் இன்னமும் அடிப்படை நோக்கத்தையே புரிந்துகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

பிளாஸ்டிக் பொருட்களை வைத்து கூடுகட்டுவதை இப்பறவைகள், தங்கள் குஞ்சுகளுக்கும் சொல்லிக் கொடுக்கும் காட்சி இன்னும் வேதனையைத் தருகிறது. இந்த அவலத்தைச்  சலனப்படமாக எடுத்து ஆவணப்படுத்தியுள்ளார் சூழலியல் ஆர்வலரும் புகைப்படக் கலைஞருமான ஊட்டி மதிமாறன்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதிமாறன், “ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது யுரேஷியன் கூட் (Eurasian coot) என்ற பறவை அதிகளவு காணப்படுகிறது. நாமக்கோழி என்றழைக்கப்படும் இது, ஒரு நீர் வாழ்ப் பறவை. ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் மட்டுமின்றி இந்தியாவிலும் இப்பறவை காணப்படுகிறது. இது வெண்மை நாமம் தீட்டிய கருநீர் கோழி வகையைச் சேர்ந்தது. இதன் கூடுகள் வலிமையான கட்டமைப்பைக் கொண்டவை.

வழக்கமாக ஆழமற்ற நீர்ப் பகுதி களில், தாமரைத் தண்டுகள், இலைகள், தாவரத் தண்டுகள் போன்றவற்றைக் கொண்டு இந்தப் பறவைகள் கூடு கட்டும். இந்தப் பணியில் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்து செயல்படும். பெரும்பாலான கூடுகளைப் பெண் பறவைகளே அழகாகக் கட்டிவிடும். ஆண் பறவைகள் இதற்கான பொருட்களைச் சேகரித்துவரும். அழகான கூடு கட்டிய பின்னர், பெண் பறவைகள் அதில் முட்டைகளை இட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.

இந்நிலையில், சுற்றுச்சூழல் சீர்கேடு, பருவநிலை மாற்றம், பிளாஸ்டிக் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பறவைகளின் கூடுகட்டும் முறையும், வாழ்க்கை முறையும் மாறியிருப்பதுதான் வேதனை யளிக்கிறது. இலைகளையும் தண்டுகளையும் பயன்படுத்தி கூடுகளைக் கட்டி வந்த இந்தப் பறவைகள், தற்போது நீர்நிலைகளில் மிதந்துவரும் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி கூடுகளைக் கட்டுகின்றன. இதைவிட கொடுமை, இந்தப் பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கும் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு கூடு கட்டுவதற்குக் கற்றுக்கொடுக்கின்றன என்பதுதான்!

கடந்த இரண்டு வருடங்களாக இதையெல்லாம் ஆவணப்படுத்தி வருகிறேன். நீலகிரிக்கு, நாமக்கோழிப் பறவைகள் வலசைப் பயணமாக வந்து கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து மீண்டும் தங்கள் பகுதிகளுக்கே திரும்பிச் செல்கின்றன. இந்நிலையில், இவற்றின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் இயற்கைக்கு விடப்பட்ட மிகப் பெரிய சவால். இது தொடர்ந்தால், இதுபோன்ற நீர்வாழ்ப் பறவைகள் அழியும் அபாயம் உள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை நீர்நிலையில் கொட்டுவதைத் தடுக்கவும், நீர் நிலைகள் மாசுபடாமல் பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசு மட்டுமல்லாமல் பொதுமக்களும் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விஷயம் இது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in