வாழ்வைச் சிதைக்கும் வரதட்சணைக் கொடுமைகள்!- தோழர்கள் ஆட்சியிலும் தொடரும் அவலம்

வாழ்வைச் சிதைக்கும் வரதட்சணைக் கொடுமைகள்!- தோழர்கள் ஆட்சியிலும் தொடரும் அவலம்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

நாட்டிலேயே கல்வியறிவு அதிகம் கொண்ட மாநிலம் எனும் பெருமையைக் கொண்டது கேரளம். ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மாநிலம் இது. அரசுப் பணி, அரசியல் என அனைத்து மட்டங்களிலும் சரிபாதியாகப் பெண்கள் கோலோச்சும் கேரளம், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் முன்பே உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிய மாநிலமும்கூட. இப்படி பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சும் கேரளத்தில், அண்மைக்காலமாக வரதட்சணை எனும் கொடூர அரக்கனால் நிகழும் அசம்பாவிதங்கள் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, அண்மையில் நிகழ்ந்த இளம்பெண் விஸ்மயாவின் மரணம், வரதட்சணைக் கொடுமை குறித்து பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலைக்குத் தள்ளிய கொடுமை

கொல்லம் அருகே சாஸ்தாங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்மயா. இவருக்கும் கேரள மோட்டார் வாகனத் துறையில் பணியாற்றும் கிரண்குமாருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கிரண்குமாருக்கு துளியும் அழகிலோ, கல்வியிலோ விஸ்மயா குறைந்தவர் இல்லை. ஒன்றேகால் ஏக்கர் நிலம், 100 சவரன் நகைகள், பத்து லட்ச ரூபாயில் கார் என வரதட்சணையாக வாரி இறைத்தனர் விஸ்மயாவின் பெற்றோர். ஆனால், பேராசைக்காரரான கிரண்குமார், வரதட்சணையாகத் தனக்குத் தரப்பட்ட கார் பிடிக்கவில்லை எனவும், அதற்குப் பதிலாக ரொக்கப் பணம் தர வேண்டும் எனவும் விஸ்மயாவைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினார்.

ஒருகட்டத்தில் இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் விஸ்மயா புகுந்தவீட்டின் குளியலறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, தன் கணவரால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி சிதைந்துபோன தனது முகம் மற்றும் உடல்பகுதிகளின் படங்களை உறவினர்கள் சிலருக்கு வாட்ஸ்-அப் மூலம் அவர் அனுப்பிவைத்திருந்தார். இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் அந்தப் படங்கள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன.

தொடரும் மரணங்கள்

இதேபோல், ஆழப்புழாவைச் சேர்ந்த 19 வயதே ஆன சுசித்ராவும் வரதட்சணை கொடுமையால் மரணித்துப்போனார். அவர், திடீரென தனது கணவர் இல்லத்தில் இறந்து கிடந்தார். தீராத வயிற்றுவலியால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது கணவர் குடும்பத்தினர் சொல்ல, சுசித்ராவின் பெற்றோரோ வரதட்சணைக் கொடுமையால் தனது மகளைக் கொலைசெய்துவிட்டனர் என கதறினர்.

இதுகுறித்து சுசிந்திராவின் தந்தை சுனிலிடம் பேசினோம். “என் மகளின் ஜாதகப்படி 20 வயதுக்கு முன்னரே திருமணம் செய்துவிடவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் 7 வருடங்கள் கழித்துதான் திருமணம் நடக்கும் என்று சொன்னதால்தான் சீக்கிரமே திருமணம் செய்துவைத்தோம். 55 பவுன் நகை போட்டு திருமணம் செய்தோம். எங்கள் சக்திக்கு டூவீலர் வாங்கிக் கொடுத்தோம். ஆனால், கார் வேண்டும் என தொந்தரவு செய்தனர். இதனால் பத்து லட்ச ரூபாய்க்குக் காரும் வாங்கித் தந்தோம்.

இத்தனைக்கும் திருமணத்தின்போதே, எனது ஓய்வூதிய பணத்தில் பிறகு கார் வாங்கப் பணம் தருவதாகச் சொல்லியிருந்தோம். ஆனால், மாப்பிள்ளை விஷ்ணுவின் சகோதரிக்குப் பணம் தேவை என எங்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே என் மகளின் நகைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டனர்” என வேதனை பொங்கச் சொன்னார் சுனில். இதேபோல் கேரளத்தில் கடந்த வாரத்தில் மட்டும் நான்கு வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன.

கேரளத்தை உலுக்கிவரும் தொடர் வரதட்சணை மரணங்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனும் கவலை தெரிவித்திருக்கிறார். கூடவே, அவர் இதுதொடர்பாக சில ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளையும் செய்துள்ளார்.

 “பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கவும், அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கவும் விரைவு நீதிமன்றங்கள் தொடங்கப்படும். இதேபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்ளவும், குற்றங்கள் நிகழாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வார்டு அளவில் விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்படும்’’ என முதல்வர் கூறியிருக்கிறார்.
விழிப்புணர்வு இல்லையா?

கேரளத்தில் தொடர்ந்து வரதட்சணைக் கொடுமைகள் அதிக அளவில் இருப்பது ஏன் என, பெண்ணியச் செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான திருத்தமிழ் தேவனாரிடம் பேசினோம்.

“பூகோள அடிப்படையில் கேரளம் இயற்கைவளம் மிகுந்த பகுதி. பொதுவாகவே இங்கு இருப்பவர்களில் பலரும் அரபு நாடுகளில் வேலைசெய்கின்றனர். இந்தியாவிலேயே அதிகளவில் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கேரளத்தில்தான் இருக்கிறார்கள். அதனால் இயல்பாகவே இங்கு அதிக வரதட்சணை கொடுக்கும் கலாச்சாரம் இருக்கிறது. அது பணக்காரர்களுக்கு சாத்தியம். எளிய மக்களும் அந்தக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதுதான் முதல் பிரச்சினை.

கேரளத்தில் வரதட்சணையை சமூக அந்தஸ்தாகப் பார்க்கின்றனர். கல்வியறிவு நிறைந்த கேரளத்தில் வரதட்சணை என்பது ஒரு குற்றம் என்பதே, அம்மாநில மக்களின் மனஓட்டத்தில் இல்லை என்பது ஒரு முரண். வரதட்சணை பெருங்குற்றம் எனும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை அரசு தொடங்க வேண்டிய நேரம் இது” என்றார் திருத்தமிழ் தேவனார்.

மேலும், “இதில் இன்னொரு பார்வையும் இருக்கிறது. தமிழ்நாட்டில் சில சமூகங்களில் பெண்களுக்குத் தட்டுப்பாடு இருக்கும். ஆண்களோ எப்படியாவது திருமணம் நடந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள். ஆனால், கேரளம் அப்படியல்ல. அங்கே ஆயிரம் ஆண்களுக்கு 1,031 பெண்கள் இருப்பதாகச் சொல்கிறது புள்ளிவிவரம். இங்கே பெண்கள் சந்தைப்பொருளாக இருப்பதன் பின்னணியில் இதுவும் அடங்குகிறது.

திருமண வயதில் இருப்போருக்கு அரசு கவுன்சலிங் கொடுக்க வேண்டும். திருமணத்துக்குப் பிந்தைய கண்காணிப்பும் அவசியம். பெண்கள் 95 சதவீதமும், ஆண்கள் 97 சதவீதமும் கல்வியறிவு பெற்ற ஒரு மாநிலத்தில், வரதட்சணையின் காரணமாக பெண்கள் பலியாவது பெரும் சோகம். திருமணத்தின் போதே, வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக சட்டத்தை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பது குறித்து கேரள அரசு பெண்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டிய நேரம் இது’’ என்றும் அவர் சொன்னார்.

என்னதான் சட்டங்கள் போட்டு சாட்டையைச் சொடுக்கினாலும், ஒட்டுமொத்த சமூகத்தின் மனமாற்றம்தான் இதுபோன்ற கொடுமைகளுக்கு முடிவுகட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in