இசை வலம்: உலக இசை நாளுக்கு உள்ளூர் தாலாட்டு!

இசை வலம்: உலக இசை நாளுக்கு உள்ளூர் தாலாட்டு!

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

உலக இசை நாளான ஜூன் 21, இன்றைக்கு 120 நாடுகளில் கொண்டாடப்படும் இசைத் திருநாளாக மாறியிருக்கிறது. ஆனால், உலக இசை நாளின் தாய்வீடு பிரான்ஸ்தான். இந்த நாளில், இசைக் கலைஞர்கள் பல இடங்களில் திரளாகக் கூடி இசைத்து மகிழ்வர்; மகிழ்விப்பர். தெருக்கள், பூங்காக்கள், அரங்குகள், ரயில் நிலையங்கள் என எல்லா இடத்திலும் இசை கரைபுரண்டு ஓடும்.
இதுதொடர்பாக, 1980-களின் தொடக்கத்தில் மாரீஸ் ஃபிளெர்ட் என்பவர் பிரான்ஸில் ஒரு சர்வே எடுத்தார். அதில் பிரான்ஸின் குடிமக்களில் இரண்டில் ஒருவருக்கு ஏதேனும் ஓர் இசைக் கருவியை வாசிப்பதிலோ, பாடுவதிலோ திறமை இருப்பது தெரிந்திருந்தது. அதாவது பிரான்ஸின் ஒவ்வொரு வீட்டிலும் இசை இருந்தது. ஆனால், பிரான்ஸின் தெருக்களில் எங்கும் இசை ஒலிக்கவேயில்லை. இந்த நிலையை மாற்றி தெருவெங்கும் இசையை ஒலிக்க வைக்கும் நாளாக ஜூன் 21-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தார் ஃபிளெர்ட்.
 பிரான்ஸின் தொழில்முறை இசைக் கலைஞர்களையும் இசையில் ஆர்வத்துடன் இருக்கும் இளம் கலைஞர்களையும் ஒன்றிணைத்து, இசை நிகழ்ச்சிகளை நடத்தினார் ஃபிளெர்ட். இதைத் தொடர்ந்து, 1982 ஜூன் 21-ல் பிரான்ஸின் தெற்கு ஹெமிஸ்ஃபியர் நகரத்தில் முதல் உலக இசை நாள் கொண்டாட்டங்கள் நடந்தன. இரவுவரை நீடித்தன அந்நாளின் கொண்டாட்டங்கள். பின்னாளில், பிரான்ஸின் தேசிய நாளாகவே ஜூன் 21 அறிவிக்கப்பட்டது.

பிரான்ஸில் தொடங்கிய இந்த இசை அலை, வெகு சீக்கிரமாகவே பல நாடுகளுக்கும் பரவியது. ஏறக்குறைய 120 நாடுகளின் 700 நகரங்களில் இன்றைக்கு உலக இசை நாள் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. அதில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, ஆஸ்திரேலியா, பெரு, பிரேசில், ஈக்வடார், மெக்ஸிகோ, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் உண்டு. கரோனா பேரிடர் காலத்தில் உலகமே சிக்கித் தவிக்கும் இந்நாளில், உலக இசை நாளின் கொண்டாட்டங்கள் வீதிகளில் முடக்கப்பட்டிருந்தாலும், காற்று வெளியில் வலைதளங்களின் வழியே உலகம் முழுவதும் பிரவாகமாகப் பொங்கிக்கொண்டிருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக, ‘தி இந்தியன் பர்ஃபார்மிங் ரைட்ஸ் சொசைட்டி - மியூசிக் பிளஸ்’ அமைப்புடன் இணைந்து
#CreditTheCreators எனும் பிரச்சாரத்தை தொடங்கியிருக் கின்றனர். திரைப் பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் எனப் பலரும் இந்தச் சமூக வலைதள பிரச்சாரத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். ஒவ்வொரு பாடலின் பின்னணியிலும் ஒரு சுவாரசியமான கதை அல்லது ஒரு சுவாரசியமான சம்பவம் இருக்கும். அது, அந்தப் பாடலின் உருவாக்கத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். அதுபோன்ற சுவாரசியமான பாடல் உருவான சம்பவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் மகத்தான கலைஞர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதுதான் இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம். கேரளத்தைச் சேர்ந்த ஆர்யநந்தா எனும் இந்தச் சிறுமி, மரம், செடி, கொடி, பறவைகள் என எல்லாவற்றிலும் இசை நீக்கமற நிறைந்திருக்கும் அதிசயத்தை இதமான பாட்டாகவே பாடியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in