விவசாயிகளுக்கு விடியல் தருமா திமுக அரசு?- வேளாண் குடிகளின் விருப்பப் பட்டியல்

விவசாயிகளுக்கு விடியல் தருமா திமுக அரசு?- வேளாண் குடிகளின் விருப்பப் பட்டியல்

கரு.முத்து
muthu.k@kamadenu.in

நீர்ப்பாசனத்துக்கென்று தனி அமைச்சகம், அதற்கு அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர், சுமார் 60 கோடி ரூபாயில் தூர்வாரும் பணிகள், குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணைத் திறப்பு, சுமார் 61 கோடி ரூபாயில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம், 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயக்கடன் வழங்க இலக்கு என்று ஆரம்பம் முதலே விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றிவருகிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விவசாயத்திற்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுமென்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நம்பிக்கையில் விரிசல்கள்

கடந்த அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, இடுபொருள் நிவாரணம் வழங்குவதற்கான உச்சவரம்பு தளர்வு என்று பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. இப்போதைய அரசின் செயல்பாடுகளும் விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை விதைத்திருக்கின்றன. அதேசமயம், அரசின் செயல்பாடுகளும் நடைமுறைப் பிரச்சினைகளும் அந்த நம்பிக்கையை மெய்ப்பிக்குமா, நிஜமான விடியலைத் தருமா எனும் கேள்வியும் உருவாகியிருக்கிறது.

கடுமையான நிதி நெருக்கடியே அரசுக்கு முதன்மையான சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகம் வேறு குடைச்சல் கொடுக்கிறது. ஊழலில் திளைத்திருக்கின்ற, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கின்ற வேளாண் அதிகாரிகள் இன்னமும் பணியில் தொடர்கிறார்கள். வேளாண் துறை தொடர்பாகக் கேள்வி எழுப்பும் செய்தியாளர்களிடம், “கிறுக்குத்தனமாக கேள்வி கேட்காதே” என்று வேளாண் துறை அமைச்சர் சீறுவதையெல்லாம் பார்க்கும்போது, விடியல் சாத்தியமா என்றே சந்தேகம் எழுந்திருக்கிறது.

தூர்வாரும் பணிகள்

தஞ்சாவூரில் மே 16-ல் நடைபெற்ற விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், “தூர்வாரும் பணிகள் முந்தைய ஆட்சியில் நடந்ததுபோல கோழிசீய்ப்பது போல் இருக்காது” என்று உத்தரவாதம் அளித்தார். ஆனாலும் அதைவிட கொஞ்சம் நன்றாக இருக்கிறதே தவிர குறிப்பிட்டு பாராட்டும்படி பணிகள் நடைபெறவில்லை.

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் 1997 முதலே தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பகாலங்களில் சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. 2018-ல் 115 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது மூன்று லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது மூன்றரை லட்சம் ஏக்கராக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிலையில் அதற்கான நிதியாக வெறும் 61 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதை வைத்துக்கொண்டு இந்தத் திட்டம் எந்த அளவுக்கு சிறப்பாக நிறைவேற்றப்படும் என்று கேட்கிறார்கள் விவசாயிகள். கடந்த காலங்களில் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே பயனளித்த இத்திட்டம் இப்போது எப்படி செயல்படுத்தப்படும் என்பதும் கேள்விக்குறிதான். செலவழிக்கும் நிதியை கண்காணிக்கும் பணியில் அரசு கறாராகச் செயல்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள். இந்நிலையில், அரசு பல்வேறு விஷயங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இலவச மின்சாரம்

கடந்த அதிமுக ஆட்சியில் உபரி மின்சாரம், மின் திட்டங்களில் தன்னிறைவு என்று அடிக்கடி சொல்லப்பட்டாலும் விவசாயிகளுக்கான 24 மணிநேர மும்முனை மின்சாரம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. அதிகபட்சம் பத்து மணி நேரம் வரையில்தான் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது இன்னும் கூடுதலாக வழங்கப்பட வேண்டும். 2003-லிருந்து மின் இணைப்புக்காக விண்ணப்பித்து இன்னமும் காத்திருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 4.25 லட்சம். அவர்களில் வெறும் ஐம்பதாயிரம் பேருக்கு மட்டுமே அதிமுக ஆட்சியில் இணைப்பு வழங்கப்பட்டது. அதிலும் 25 ஆயிரம் இணைப்புகள் தத்கால் மூலம் வழங்கப்பட்டது. மீதமுள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு என்பது திமுக அரசின் முன் விஸ்வரூபமாக நிற்கும் பிரச்சினை. அதேபோல தடையில்லா மும்முனை மின்சாரம் என்பதைக் கையாள்வதும் மின் துறை அமைச்சகத்துக்குப் பெரும் சவாலாகத்தான் இருக்கப்போகிறது.

அடம் பிடிக்கும் அண்டை மாநிலம்

எத்தனைத் தீர்ப்புகள் வந்தாலும் காவிரி நீரைப் பொறுத்தவரை தமிழகத்தின் உரிமை என்பது இன்னமும் கர்நாடகத்திடம்தான் இருக்கிறது. நியாயமாக நமக்கு வழங்க வேண்டிய நீரை அம்மாநிலம் முழுமையாக வழங்கியதே இல்லை. தென்மேற்குப் பருவமழை காலத்தில் தனது அணைகள் முழுவதும் நிரம்பிய பிறகு, கிடைக்கும் உபரிநீரை மட்டுமே தமிழகத்துக்கு வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது கர்நாடகம். காவிரி மேலாண்மை வாரியம், உச்ச நீதிமன்றம் என்று எது ஆணையிட்டாலும் அதையெல்லாம் கிடப்பில் போட்டுவிடுகிறது.

ஜனவரி மாதம் 2.76 டி.எம்.சி, பிப்ரவரி முதல் மே மாதம் வரை ஒவ்வொரு மாதமும் தலா 2.50 டி.எம்.சி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டிய நிலையில் ஜூன் 21-ம் தேதிவரை ஒரு டி.எம்.சி தண்ணீர்கூட கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு வரவில்லை. கடந்தகால அனுபவங்களின்படி பார்த்தால் முறைப்படி கிடைக்க வேண்டிய நீரைப் பெற பெரும் போராட்டத்தைத்தான் நடத்த வேண்டியிருக்கும் திமுக அரசு.

இந்நிலையில் உபரிநீரையும் தமிழகத்துக்குள் வரவிடாமல் செய்ய, மேகேதாட்டுவில் புதிய அணையை கட்டும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது கர்நாடகம். மத்திய அரசின் ஒத்திசைவையும் மறைமுகமாகப் பெற்று அணைக்கான ஆயத்த வேலைகளைத் தொடங்கியும் விட்டது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் அணை கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்திருக்கிறார். அதற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் தமிழக அரசு முன்னிலும் தீவிரமாக இதற்காகப் போராட வேண்டியிருக்கும்.

கூட்டுறவு வங்கிகளில் குழப்பம்

“விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது, உரங்கள் விற்பனை செய்வது என்று கூட்டுறவு வங்கிகளின் பங்கு விவசாயத்தில் வெகு முக்கியமானது. ஆனால், அதன் மூலம் பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையோ மிகவும் குறைவு” என்று சொல்லும் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வலிவலம் சேரன் அதற்கான காரணத்தையும் விளக்குகிறார். “சுமார் ஏழு அல்லது எட்டு வருவாய் கிராமங்களுக்கு ஒன்று என்ற கணக்கில்தான் கூட்டுறவு வங்கிகள் இருக்கின்றன. கடந்த 25 ஆண்டுகாலமாக அரசியல்வாதிகளின் தலையீட்டாலும், நிர்வாகச் சீர்கேட்டாலும் பல கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டிருக்கின்றனவே தவிர, புதிதாக ஒரு கூட்டுறவு வங்கிகூட தொடங்கப்படவில்லை.

இவ்விஷயத்தில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களை அரசு செய்ய வேண்டும். முதலில், ஆளுங்கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து கூட்டுறவு வங்கிகளை விடுவித்து தன்னாட்சி அதிகாரத்துடன் அதிகாரிகளின் மேற்பார்வையில் செயல்படுமாறு சீரமைக்க வேண்டும். ஒரு வருவாய் கிராமத்துக்கு ஒன்று என்ற கணக்கில் கூட்டுறவு வங்கிகள் அமைக்கப்பட்டு அந்த வருவாய் கிராமத்தின் அத்தனை விவசாயிகளும் அதில் இணைக்கப்பட்டு, அவர்களின் நில அளவு, அதன் புல எண்கள் என்று அனைத்து விவரங்களும் தரவுகளாகச் சேமிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் அனைத்து விவசாயிகளுக்கும் தடையின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும். 

இதைச் செய்தால் காப்பீடு, நிவாரணம், இழப்பீடு, உர விநியோகம் என்று எதற்காகவும் புதிய கணக்கெடுப்புகள் தேவைப்படாது.
எந்தத் திட்டமானாலும் பதிவிலுள்ள கணக்குகளின்படி உடனடியாகச் செயல்படுத்த முடியும். எந்த விவசாயி எவ்வளவு பரப்பில் குறுவை, அல்லது சம்பா சாகுபடி செய்திருக்கிறார் என்பதை மட்டும் அந்தந்தப் பருவத்தில் பதிவு செய்துகொண்டால் போதும். அனைத்தையும் கூட்டுறவு வங்கி மூலமாகவே அரசு செய்துவிடலாம். அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதைச் செய்தால் அது விவசாயிகளின் நலனுக்கான வலுவான அடித்தளமாக இருக்கும்” என்கிறார் சேரன்.

சத்தீஸ்கர் காட்டும் பாதை

இந்த ஆண்டுக்கான நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு 1,940 ரூபாயாக மத்திய அரசு அறிவித்துள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அது நடக்குமா என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அரசின் பொருளாதார நிலையைச் சுட்டிக்காட்டி அந்த அறிவிப்பைத் தள்ளிப்போட வேண்டாம் என்று சொல்லும் விவசாயிகள் அதற்கான வழியையும் காட்டுகிறார்கள்.

“நாட்டிலேயே முதன்முதலாக சத்தீஸ்கர் அரசுதான் 2019 முதல் நெல்லுக்குக் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயை வழங்கிவருகிறது. அப்போதைய நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பூபேஷ் பகேல் நிதிநிலை சரியில்லை என்றாலும் தனது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் விதமாகக் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயை அறிவித்தார். மத்திய அரசு அப்போது அறிவித்திருந்த ஆதார விலையான 1,750 ரூபாயைக் கையோடு வழங்கிய அவர், மீதமுள்ள 750 ரூபாயை சில மாதங்கள் கழித்து வழங்கினார்.

இப்படிச் செய்ததன் மூலம், அந்த ஆண்டு அங்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கான 46 லட்சம் மெட்ரிக் டன் நெல்லைவிட இரு மடங்காக சுமார் 82 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை உற்பத்திசெய்து அரசின் கொள்முதல் நிலையங்களில் கொண்டுவந்து சேர்த்தார்கள் சத்தீஸ்கர் விவசாயிகள். தமிழக அரசும் அதைப் பின்பற்றி, குறுவை நெல் கொள்முதலுக்கே குவிண்டாலுக்கு 2,500 ரூபாயை வழங்க வேண்டும். மத்திய அரசின் ஆதார விலையை இப்போது வழங்கிவிட்டு, 100 நாட்கள் கழித்துகூட மீதித் தொகையை வழங்கலாம். அதேபோல, கரும்புக்கு டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்குவது உட்பட மற்ற விளைபொருட்களின் விலையையும் உயர்த்தி வழங்க வேண்டும்” என்கிறார், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளரான சுவாமிமலை சுந்தரவிமல்நாதன்.

வெகுமதித் திட்டம்

‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ எனும் அந்தக்காலப் பழமொழி இன்றும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. விதை, உரம், பூச்சி மருந்து, கூலி என்று எல்லாமும் பல மடங்கு உயர்ந்திருக்கிற நிலையில் கவுரவத்துக்காகத்தான் விவசாயம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் மீண்டும் மீண்டும் நஷ்டமடையும் விவசாயிகளுக்கு, அரசு வெகுமதி தர வேண்டும் என்ற குரல்கள் நீண்டநாட்களாக ஒலித்துவருகின்றன. இந்தக் குரலுக்குச் சில மாநிலங்கள் மதிப்பளித்து வெகுமதியும் அளிக்கத் தொடங்கியுள்ளன.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி யிருந்தாலும் 2018-ல் அவர் கொண்டுவந்த விவசாயி களுக்கான வெகுமதித் திட்டமே அவரை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது. ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாயை வெகுமதியாக அளிக்கும் திட்டத்தை நாட்டிலேயே முதன்முதலாக அமல்படுத்தினார் ராவ். இத்திட்டத்துக்கு விவசாயிகளிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து உற்சாகமடைந்தவர், 9 மாதங்கள் ஆட்சிக்காலம் மீதமிருந்த நிலையில் தைரியமாக ஆட்சியைக் கலைத்துவிட்டு, 2018 டிசம்பரில் தேர்தலைச் சந்தித்தார்.

விவசாயிகளின் தயவால் இரண்டாவது முறையாகவும் ஆட்சியைக் கைப்பற்றினார். இவரின் இந்த வெற்றிக்கான காரணங்களில் முக்கியமானது, விவசாயிகளுக்கான வெகுமதித் திட்டம்தான் என்று மத்திய உள்துறை அளித்த தகவலின் அடிப்படையில்தான், பாஜக 2019 மக்களவைத் தேர்தலில் விவசாயிகளுக்கு வெகுமதி என்ற வாக்குறுதியை அளித்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாயை மத்திய அரசு வெகுமதியாக அளித்தும் வருகிறது.

நல்ல திட்டமான இதை சத்தீஸ்கர் மாநிலமும் கையிலெடுத்தது. கடந்த 2019-லிருந்து அங்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வெகுமதியாக அளிக்கப்பட்டுவருகிறது. அதற்குப் பிரதியுபகாரமாக விவசாயிகள் இரண்டு போகம் சாகுபடி செய்து நெல் விளைவித்துத் தரவேண்டும் என்பதுதான் நிபந்தனை. ‘ராஜீவ்காந்தி கிசான் நியாய் நிதி’ என்ற பெயரிலான அந்தத் திட்டத்தை அங்குள்ள விவசாயிகள் அமோகமாக வரவேற்றுள்ளார்கள். அங்கு கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

செய்வாரா ஸ்டாலின்?

இங்கெல்லாம் கிடைத்த வரவேற்பைப் பார்த்துவிட்டு ஆந்திர அரசும் கடந்த ஆண்டு முதல் வெகுமதித் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏக்கருக்கு 13,500 ரூபாய் வெகுமதி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். இப்படி பல மாநிலங்கள் முன்னெடுத்திருக்கும் இந்தத் திட்டத்தைத் தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் விரும்புகிறார்கள். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் இன்னமும் அவரது பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பதுபோல, இதுவும் காலத்துக்கும் ஸ்டாலின் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும்.

சுமார் 5 லட்சம் கோடி அளவுக்குக் கடன்சுமை இருப்பதாகத் தமிழக நிதியமைச்சர் தெரிவித்திருக்கும் நிலையில், இத்திட்டங்களைச் செயல்படுத்துவது எளிதான காரியமல்ல. ஆனால், இவை மிகவும் அத்தியாவசியமானவை என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இவற்றை நடைமுறைப்படுத்தினால், விவசாயிகளுக்கான விடியலும் சாத்தியப்படும்; திமுக அரசும் விவசாயிகள் மத்தியில் கொண்டாடப்படும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in