இசை வலம்: ‘புலிட்சர்’ பரிசாளரின் இசை நெசவு!

இசை வலம்: ‘புலிட்சர்’ பரிசாளரின் இசை நெசவு!

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

கியூபாவில் பிறந்த இசைக் கலைஞரான தானியா லியோன், 78-வது வயதில் இசைக்கான ‘புலிட்சர்’ பரிசைத் தன்னுடைய ‘ஸ்டிரைட்’ (Stride) என்னும் இசைக் கோர்வைக்காகப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நியூயார்க்கின் பில்ஹார்மோனிக் இசைக் குழுவினரால் இந்த இசைக் கோப்பு இசைக்கப்பட்டது. அமெரிக்காவில் பெண்களுக்குக் குடியுரிமை கோரி மகத்தான போராட்டம் 
நடைபெற்றது. இதில் செயற்கரிய செயல்களைச் செய்த பெண்ணியவாதிகளின் உத்வேகமான போராட்டங்களைத் தொடர்ந்து, 1919-ல் 19-வது சட்டத்திருத்தத்தின் மூலம் பெண்களுக்கான வாக்குரிமையை உறுதிசெய்தது அமெரிக்க அரசு.

அந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாடும் வகையில், 19 பெண் இசையமைப்பாளர்களிடம் இசைக் கோப்புகளைப் பெற்று அதனை பில்ஹார்மோனிக் இசைக் குழுவினர் வாசிக்கும் நிகழ்வு கடந்த ஆண்டு நடந்தது. அதில்தான் தானியா லியோனின் ‘ஸ்டிரைட்’ இசைக்கப்பட்டது. “வாக்குரிமைக்காகப் போராடிய பெண்களில் சூசன் பி. ஆண்டனி எனும் பெண்ணியவாதியின் பங்களிப்பை அவருடைய போராட்ட வாழ்வைச் சித்தரிக்கும் வகையில்தான் ‘ஸ்ட்ரைட்’ இசைக் கோர்வையை எழுதினேன்” என்கிறார் தானியா லியோன்.

“பதினைந்து நிமிட ‘ஸ்டிரைட்’ இசைக் கோப்பில் ஓர் இனிமையான இசைப் பயணத்தை தானியா லியோன் படைத்திருக்கிறார். பிராஸ் செக் ஷன் (Brass Section) எனப்படும் டிரம்பட், சாக்ஸபோன், பிரெஞ்ச் ஹார்ன் போன்ற வாத்தியங்களிலிருந்து வெளிப்படும் ஒலி இந்த இசைக்கோப்புக்குப் பிரம்மாண்டம் சேர்க்கிறது. டிம்பொனி போன்ற தாள வாத்தியங்கள், நரம்பு வாத்தியங்களின் சேர்ந்திசையில் இந்த சிம்பொனி கேட்பவர்களை மெய்மறக்கச் செய்கிறது. பாரம்பரியமான கறுப்பின இசையின் கூறுகளையும், அமெரிக்க, கரீபிய இசையின் சாரத்தையும் மேற்குலகக் கலைஞர்களைக் கொண்டு இசை நெசவு செய்திருக்கிறார் தானியா லியோன்” என்று ‘புலிட்சர்’ விருது தேர்வுக் குழுவினர் பாராட்டியிருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in