காசர்கோடு டு ராஞ்சி ஐஐஎம்!- கஷ்டங்களுக்கு நடுவே வென்ற ரஞ்சித்தின் கதை

காசர்கோடு டு ராஞ்சி ஐஐஎம்!- கஷ்டங்களுக்கு நடுவே வென்ற ரஞ்சித்தின் கதை

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

“கல்வியின் வேர்கள் கசக்கலாம். ஆனால், அதில் விளையும் கனி இனிப்பானது” என்றார் அரிஸ்டாட்டில். பல சவால்களை வென்று கல்வியில் ஏற்றம் பெறும் மனிதர்களுக்கு அந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் புரியும். தங்கள் வெற்றிக் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம், வெற்றி பெறத் துடிக்கும் மற்றவர்களுக்கும் உத்வேகம் தருவார்கள் அவர்கள். ராஞ்சியில் உள்ள மத்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) உதவிப் பேராசிரியராக உயர்ந்திருக்கும் கேரளத்தின் பழங்குடி இளைஞர் ரஞ்சித்தின் கதை அப்படியானதுதான்!

ஆம்! ஐஐஎம் நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக பணி ஆணை பெற்றிருக்கும் ரஞ்சித், ‘கல்விக்கு வறுமை தடையே இல்லை’ என்பதை ஒற்றைப் புகைப்படத்தின் ஊடே பாடமாகச் சொல்லி உத்வேகம் தந்திருக்கிறார். காசர்கோடு பகுதியில் உள்ள தனது சிறிய வீட்டை முகநூலில் பகிர்ந்துகொண்ட இவர்,  ‘நான் இந்த வீட்டில்தான் பிறந்தேன். இங்குதான் நான் வளர்ந்தேன். இங்குதான் நான் இப்போதும் வாழ்கிறேன். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு ஐஐஎம் உதவிப் பேராசிரியர் இங்கு பிறந்தார். உங்களில் ஒரே ஒருவரின் கனவுக்கேனும் நான் ஊக்கியாக இருந்தால் அதுவே என் வெற்றி’ எனப் பதிவிட, பாராட்டுப் பூங்கொத்துகளைத் தந்து நெகிழவைத்துவிட்டார்கள் நெட்டிசன்கள். கேரள அரசியல் தலைவர்களும்கூட ரஞ்சித்தைப் பாராட்டு மழையில் நனைய வைத்திருக்கிறார்கள்.

ரஞ்சித்தின் ஓட்டுவீட்டின் செங்கல் சுவர்களில் பூச்சுப் பணிகள்கூட நடக்கவில்லை. வீட்டின் மேற்கூரையில் இருக்கும் ஓடுகள் அடிக்கடி காற்றுக்கும், மழைக்கும் சேதமாகிவிடும் என்பதால் தார்பாலின் போட்டு மூடப்பட்டுள்ளது. வீட்டு வாசலில் ஒரு சிலிண்டரும், கொஞ்சம் சமையல் பயன்பாட்டுப் பொருட்களும் இருக்கின்றன. இரண்டு பேர் கால் நீட்டிப் படுத்தாலே நிறைந்துவிடும் அளவுள்ள, அந்தச் சின்னஞ்சிறிய வீட்டிலிருந்துதான் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் ரஞ்சித்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in