ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைப்பு

விரைவில் கைது செய்யப்படுவார் என காவல் துறை தகவல்
ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைப்பு

பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த அதிமுகஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தை திருப்பியும் கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகாரால், ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய, ராஜேந்திர பாலாஜி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று(டிச.17) தள்ளுபடி செய்தது. மேலும், தள்ளுபடி உத்தரவை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டிய கோரிக்கையும் உரிய காரணங்களுடன் நீதிபதியால் ஏற்க மறுக்கப்பட்டது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படை அமைத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். டிஎஸ்பி, 2 காவல் ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன், கார் ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் எண்ணிக்கை தற்போது 6ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் எஸ்பி மனோகரன் தெரிவித்துள்ளார். விரைவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in