பேசும் படம் - 31: ஹிட்லர் அழிக்கச்சொன்ன புகைப்படங்கள்!

பேசும் படம் - 31: ஹிட்லர் அழிக்கச்சொன்ன புகைப்படங்கள்!

இரண்டாம் உலகப் போரின்போது  உலகையே மிரளவைத்த பெயர் அடால்ப் ஹிட்லர். முதல் உலகப்போரில் ஜெர்மானிய  படையில் ஒரு சாதாரண ராணுவ வீரராக இருந்த இவர், இரண்டாம் உலகப் போரில் அதே ஜெர்மனியின் தலைவராக  உயர்ந்து, உலகையே நடுங்கவைத்தார். 

யூதர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்தது, அதிகாரத்தைப் பரப்பும் ஆர்வத்தில் மற்ற நாடுகள் மீது போர் தொடுத்தது என ஹிட்லர் மீது ஏராளமான குற்றப்பத்திரிகைகளை வரலாறு வாசிக்கிறது. அதே நேரத்தில் ஒரு சாதாரண வீரர் என்ற நிலையில் இருந்து ஒரு நாட்டுக்கே தலைவராகும் அளவுக்கு ஹிட்லரை உயரவைத்தது அவரது கடுமையான உழைப்புதான் என்பதையும் மறுக்க முடியாது.

ஹிட்லரின் உழைப்புக்கு முக்கிய உதாரணமாக அவர் தனது பேச்சாற்றலை வளர்த்த விதத்தைக் கூறலாம். தனக்கு ஆதரவாக மக்களைத் திரட்டும் அளவுக்குப் பேச்சாற்றல் வாய்ந்த ஹிட்லர், அந்தக் கலையை யாரிடமும் மாணவனாக இருந்து கற்கவில்லை. மாறாகத்  தனியறையில் பேசிப் பேசி தனது பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டார். அப்படிப் பேச்சாற்றலை வளர்க்கத் தனியறையில் அவர் பயிற்சி மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படங்களைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். இந்தப் படங்களை எடுத்தவர் ஹிட்லரின் அதிகாரபூர்வ புகைப்படக்காரரான ஹென்ரிச் ஹாப்மேன்.

ஹிட்லரின் புகைப்படக்காரராக  மட்டுமின்றி அவரது நாஜி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும், பதிப்பாளராகவும் ஹென்ரிச் ஹாப்மேன் இருந்தார். மேலும், ஹிட்லரின் மிக நெருங்கிய நண்பராகவும் இருந்த ஹாப்மேன், இதைப் பயன்படுத்தி அவரது முக்கியமான தனிப்பட்ட படங்கள் பலவற்றை  எடுத்தார்.

1924-ல், ஹிட்லரின் நாஜிக் கட்சி, ஜெர்மனி அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு, தோல்வி கண்டது. அதைத்தொடர்ந்து ஹிட்லரும், அவரது  நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். இந்தக் குற்றத்துக்காக முதலில் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், பின்னர் 9 மாதங்களில் ஹிட்லர் விடுவிக்கப்பட்டார். 1925-ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியில் வந்த ஹிட்லர், தனது கட்சிக்கு மக்களிடையே ஆதரவு திரட்ட விரும்பினார். பேச்சாற்றல் மூலமாகத்தான் இந்த ஆதரவைத் திரட்ட முடியும் என்று உறுதியாக நம்பியவர், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டார்.

பேசுவது மட்டுமின்றி,  பேசும்போது தான் எப்படித் தோற்றமளிக்கிறேன் என்பதைப் பார்க்கவும் விரும்பிய ஹிட்லர், ஹென்ரிச் ஹாப்மேனை அழைத்து, தான் பேசுவதைப் படம்பிடித்துத் தருமாறு கூறினார். அப்படி ஹாப்மேன் கொடுத்த படங்களைப் பார்த்த பிறகு, பேசும் முறையிலும், தனது உடல் மொழிகளிலும் சில மாற்றங்களைச் செய்தார். பின்னர் அந்தப் படங்களையும் அதன் நெகடிவ்களையும்  அழிக்குமாறு ஹாப்மேனிடம் ஹிட்லர் கூறினார்.

ஆனால், ஹாப்மேன் அந்தப் படங்களை அழிக்காமல் பத்திரமாகப் பாதுகாத்து வைத்தார். ஹிட்லர் இறந்த பிறகு, தான் எழுதி வெளியிட்ட  ‘ஹிட்லர் வாஸ் மை ஃப்ரெண்ட்’ என்ற புத்தகத்தில் ஹாப்மேன் இந்தப் படங்களை வெளியிட்டார். இந்தப் படங்கள் உலகளாவிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றன.

பிரபல வரலாற்று ஆசிரியரான ரோஜர் மூர்ஹவுஸ் இப்படங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், “ஹிட்லரை ஒரு கொடுங்கோலனாகவும் கோமாளியாகவும்தான் உலகம் பார்க்கிறது. ஆனால் மக்கள் மத்தியில் தன்னைப் பற்றிய நல்ல பிம்பத்தை உருவாக்க அவர் எந்த அளவுக்குக் கடினமாக உழைத்துள்ளார் என்பதை இந்தப் படங்கள் நமக்கு உணர்த்துகின்றன. உலகப் புகழ்பெற்ற தனது உரைகளுக்காக ஹிட்லர் எப்படித் தயாரானார் என்பதை இப்படங்கள் எடுத்துக் காட்டுகின்றன”  என்கிறர்.

ஹென்ரிச் ஹாப்மேன்

1885-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஃபர்த் என்ற நகரில் பிறந்தவர் ஹென்ரிச் ஹாப்மேன் (Heinrich Hoffmann). ஆரம்பக் கல்வியைப் படித்து முடித்த பிறகு 1901-ம் ஆண்டு முதல் 1903-ம் ஆண்டுவரை புகைப்படத்துறையில் பயிற்சி பெற்றார்.  பல்வேறு நாடுகளில் பணியாற்றிய பிறகு 1909-ல், மியூனிச் நகரில் சொந்தமாக ஒரு ஸ்டுடியோவைத் தொடங்கினார். ஹிட்லருடனான நட்பு கிடைத்த பிறகு அவரது அதிகாரபூர்வ புகைப்படக் கலைஞராகவும், நாஜி கட்சியில் ஒரு முக்கியத் தலைவராகவும் இவர் விளங்கினார். ஹிட்லரின் காலத்துக்குப் பிறகு, அவரைப் பற்றி பல்வேறு  புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ள இவர், 1957-ல் மியூனிச் நகரில் காலமானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in