பேசும் படம் - 28: அமைதிப் பூங்காவை அலறவிட்ட இரவு!

பேசும் படம் - 28: அமைதிப் பூங்காவை அலறவிட்ட இரவு!

தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவின் அமைதியையும் ஒரே இரவில் கிழித்துப்போட்ட சம்பவம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை. தன்னை நம்பி வந்தவரை வாழவைத்தே பழக்கப்பட்ட தமிழகம், முதல் முறையாக தனக்கு ஆதரவு தேடி வந்த தலைவரின் உயிர், மனித வெடிகுண்டுக்கு இரையாவதைப் பார்த்து துடித்த நாள் 21-05-1991. அன்று இரவுதான் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.

இந்தத் துயர சம்பவத்தின் சாட்சியாய் இருக்கும் படத்தைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனந்த விகடன் பத்திரிகையில் அப்போது புகைப்படக்காரராய் இருந்த எம்.ஏ.பார்த்தசாரதி (மேப்ஸ்) எடுத்த படம் இது. ராஜீவ் காந்தி படுகொலையின்போது இவர் எடுத்த பல படங்கள், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பல பத்திரிகைகளில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்தக் கொடூரசம்பவத்தைப்  படம்பிடித்த அனுபவத்தைப் பற்றி மேப்ஸ் இப்படி விவரிக்கிறார்:

“குண்டுவெடிப்பு நிகழ்ந்த நாளில் முதலில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜீவ் காந்தி, அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் புறப்பட்டார். சென்னையைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்கள் அவரைப் பின்தொடர்ந்து வாகனங்களில் சென்றோம். அவர் சென்ற காருக்கு நான்கைந்து கார்கள் பின்னால் இருந்த காரில் நான், எங்கள் பத்திரிகை சார்பாக செய்தி திரட்ட வந்திருந்த ஜாசன் மற்றும் சில பத்திரிகையாளர்கள் இருந்தோம்.

ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் நடக்கும் இடத்தில் ராஜீவ் காந்தியை வரவேற்கும் விதமாக காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்துக்கொண்டிருந்தார்கள். இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, சற்றுத் தொலைவில் இருந்த மேடையை நோக்கி ராஜீவ் காந்தி நடக்கத் தொடங்கியதும் அவரைத் தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர். தொண்டர்கள் சூழ மேடையை நோக்கி ராஜீவ் காந்தி சென்றுகொண்டு இருந்தார். அப்போது திடீரென தீபாவளிக்கு ஆட்டம்பாம் வெடிப்பதைப் போன்ற ஒரு பெரும் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தபோது ராஜீவ் காந்தியையும், அவரைச் சுற்றி நின்றிருந்த பெரும் கூட்டத்தையும் காணவில்லை. ஒருசில வினாடிகள் என்ன நடந்ததென்றே யாருக்கும் தெரியவில்லை.

சில வினாடிகள் கழித்த பிறகுதான், ராஜீவைச் சுற்றி நின்ற பலரும் தரையில் சிதறிக் கிடப்பது தெரியவந்தது. “ஐயோ... அம்மா... போச்சே” என்று சிலர் கதறுவதையும் கேட்க முடிந்தது. ராஜீவ் காந்தியைக் காணவில்லை. அவருக்கு என்ன ஆனது என்றே முதலில் யாருக்கும் தெரியவில்லை. போலீஸ் அதிகாரிகள் உட்பட பலரும் பெரும் பதற்றத்துடன் ராஜீவ் காந்தியைத் தேடிக்கொண்டிருந்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு சற்று தூரத்தில் நின்றிருந்த ஜி.கே.மூப்பனர், விரைந்து வந்து ராஜீவ் காந்தியைத் தேடினார். அப்போது சிதறிக்கிடந்த உடல்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட ‘பிராண்ட்’ ஷூக்கள் அணிந்திருந்த உடலும் இருந்தது. அதைப் பார்த்தவுடனேயே அடையாளம் கண்டு கலங்கிப் போனார் ஜி.கே.மூப்பனார்.

இப்படி என்னைச் சுற்றி பல சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க, கனத்த இதயத்துடன் ஒரு இயந்திரம்போல் நான் அடுத்தடுத்து படங்களை எடுத்துக்கொண்டிருந்தேன். பெல்ட் வெடிகுண்டைப் பற்றியெல்லாம் தமிழகம் அறியாத காலம் அது. அதனால் எப்படி அந்த குண்டு வெடித்தது என்றே தெரியாமல் இருந்தது. ஒருவேளை அங்கிருந்த கார்ப்பெட்டுகளுக்கு அடியில் கண்ணிவெடிகள் இருக்கலாமோ என்ற அச்சத்தில் பார்த்துப் பார்த்து கால்களை வைத்து நடந்தேன். அதே நேரத்தில் என்ன நடந்தாலும் என் பணியில் இருந்து பின்வாங்குவதில்லை என்ற உறுதியை எடுத்துக்கொண்டிருந்தேன்.

 ராஜீவ் காந்தியின் உடலை ஒரு வேனில் ஏற்றி சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கும் பின்தொடர்ந்து சென்று படம் எடுத்தேன். அன்றிரவே ஆசிரியர் குழுவினருடன் சேர்ந்து படங்களை அச்சுக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பினேன். நான் மட்டும்தான் அன்றைக்கு வண்ணப் புகைப்படம் எடுத்திருக்கிறேன் என்பது அடுத்த நாள் மற்ற பத்திரிகைகளைப் பார்த்தபோதுதான் எனக்குத் தெரிந்தது. அதைத்தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு பத்திரிகைகள் இந்தப் படங்களை விகடன் நிறுவனத்திடமிருந்து பெற்று வெளியிட்டன. படுகொலைச் சதி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட புலனாய்வுக் குழுவுக்கும் நான் எடுத்த படங்கள் உதவியாக இருந்தன. இந்திய சரித்திரத்தை உலுக்கிய ஒரு முக்கியப் படுகொலையின் சாட்சியாக என் படங்கள் இருந்த அந்த நாளை என்னால் மறக்க முடியாது” என்கிறார் மேப்ஸ் எனும் எம்.ஏ.பார்த்தசாரதி.

அன்றைய தினம் மட்டும் மேப்ஸ், கலரில் படம் எடுக்காமல் இருந்திருந்தால் அச்சம்பவத்தைப் பற்றிய சரியான விஸ்தரிப்பு கிடைக்காமல் போயிருக்கும். இந்தியாவில் கலர் பட தொழில்நுட்பமே இல்லையோ என்ற சந்தேகம்கூட சர்வதேச பத்திரிகைகளுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

எம்.ஏ.பார்த்தசாரதி (மேப்ஸ்)

1962-ம் ஆண்டு சென்னையில் பிறந்த மேப்ஸ், பிளஸ் 2படிக்கும் காலம் தொட்டு புகைப்படத்துறையில் இருக்கிறார். ஆரம்பத்தில் ஃப்ரீலான்ஸ் புகைப்படக்காரராக இருந்தஇவரது படங்கள் பல்வேறுபத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. பின்னர் குங்குமம்,ஆனந்தவிகடன் உள்ளிட்டபத்திரிகைகளில் புகைப்படக்காரராய் பணியாற்றினார். அரசியல் நடப்புகள், தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் புகைப்படங்களாகப் பதிவு செய்துள்ள இவர், ஒருகட்டத்தில் பத்திரிகைத் துறையிலிருந்து விலகி விளம்பரப் படங்களில் ஆர்வம் செலுத்தினார். தற்போது இணைய இதழ் ஒன்றில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in