பேசும் படம் - 27: முகமது அலியின் குத்தும் நீல் லீஃபரின் க்ளிக்கும்!

பேசும் படம் - 27: முகமது அலியின் குத்தும் நீல் லீஃபரின் க்ளிக்கும்!

இருபதாம் நூற்றாண்டில் உலகின் நம்பர் 1 குத்துச்சண்டை வீரர் முகமது அலி. 61 குத்துச்சண்டை போட்டிகளில் 56-ல் வென்ற முகமது அலி, அதில் 37-ல் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை நாக் அவுட் செய்து சாதனை படைத்தவர். குத்துச்சண்டை உலகின் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த முகமது அலியின் ஆக்ரோஷத்தை இந்த ஒரு படத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் நீல் லீபர்.

இப்படத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன்பாக இது எடுக்கப்பட்டதற்கு முன் நடந்த சில சம்பவங்களைத் தெரிந்துகொள்வோம்:

 காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே (Cassius Marcellus Clay) என்ற தனது இயற்பெயருடன் 1960-ம் ஆண்டு ஒலிம்பிக் குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் முகமது அலி. அதன் பிறகு தொழில்முறை குத்துச்சண்டை வீரராகி, அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார். முதல் 19 போட்டிகளில் எளிதாக வெற்றிபெற்ற இவருக்கு, 20-வது போட்டி கடும் சவாலாக அமைந்தது. இப்போட்டியில் இவரை எதிர்த்து நின்றவர் அப்போதைய உலக ஹெவி வெயிட் சாம்பியனான சோனி லிஸ்டன். தன் எதிராளிகளை சில நிமிடங்களிலேயே மண்ணைக் கவ்வ வைக்கும் ஆற்றல் வாய்ந்த லிஸ்டன், க்ளேவையும் (முகமது அலி) எளிதில் வீழ்த்திவிடுவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்திருந்தனர். 1964-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி இருவருக்கும் இடையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடந்த இப்போட்டியின் 7-வது சுற்றில் டெக்னிக்கல் நாக் அவுட் முறையில் வெற்றிபெற்றார் 22 வயதான க்ளே. இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார்.

இது நடந்த சில நாட்களில் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய காசியஸ் மார்க்கெல்லஸ் க்ளே, தனது பெயரை முகமது அலி என்று மாற்றிக்கொண்டார். 64-ல் நடந்த போட்டியில் முகமது அலியிடம் தான் தோற்றதை இன்னும் ஏற்க முடியாமல் இருந்த லிஸ்டன், அவருடன் அடுத்த மோதலுக்குத் தயாரானார்.

இந்தச் சூழலில்தான் 1965-ம் ஆண்டு மே 25-ம் தேதி இருவருக்கும் இடையிலான 2-வது மோதலுக்கு நாள் குறிக்கப்பட்டது. க்ளே, முகமது அலியாக மாறிய பிறகு கலந்துகொண்ட முதல் போட்டி இது. இடையில் குடலிறக்கத்தால் ஒரு அறுவைசிகிச்சையையும் முகமது அலி மேற்கொண்டிருந்தார்.

இந்தக் குத்துச்சண்டை போட்டியைப் படம்பிடிக்க அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேட்டட், 2 புகைப்படக்காரர்களை அனுப்பியிருந்தது. ஒருவர் அப்பத்திரிகையின் மூத்த புகைப்படக்காரரான ஹெர்ப் ஸ்கார்ஃப்மேன் (Herb Scharfman) மற்றொருவர் அதில் சமீபத்தில் சேர்ந்த புகைப்படக்காரரான நீல் லீஃபர் (Neil Leifer). மூத்தவர் என்பதால் தெளிவாகப் படம் எடுக்கத் தோதான இடமாக பார்த்து அமர்ந்துகொண்டார் ஸ்கார்ஃப்மேன். அவருக்கு எதிர்பக்கம், வெளிச்சம் குறைவாக இருந்த பகுதியில் நீல் லீஃபருக்கு இடம் கிடைத்தது.

பத்திரிகையில் தனது எதிர்காலத்தை அன்றைய தினம் எடுக்கும் படம் தீர்மானிக்கும் என்பதால், எப்படியாவது ஸ்கார்ஃப்மேனைவிட சிறப்பாக படம் பிடிக்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார் லீஃபர். 2 வீரர்களும் விடும் ஒவ்வொரு குத்துகளையும் தீவிரமாகக் கண்காணித்துக்கொண்டிருந்தார்.

போட்டி தொடங்கி 1 நிமிடம் 44 வினாடிகளே ஆகியிருந்த சமயத்தில் லிஸ்டனுக்கு ஓங்கி ஒரு குத்துவிட்டார் முகமது அலி. அடுத்த கணத்திலேயே சுருண்டு விழுந்தார் லிஸ்டன். எழ முடியாமல் திணறிக்கொண்டிருந்த லிஸ்டனைப் பார்த்து கர்ஜித்த முகமது அலி, “எழுந்து நின்று சண்டைபோடு” என்று உரக்கக் கத்தினார். இந்தத் தொடர் சம்பவங்களைச் சரசரவென்று படம் பிடித்தார் லீஃபர்.

சுருண்டு விழுந்து கிடக்கும் லிஸ்டன், கர்ஜிக்கும் முகமது அலி என்று அந்தக் குத்துச்சண்டை போட்டியில் நடந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் அந்த ஒரு படம் சொன்னதால், அது ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேட்டட் பத்திரிகையில் வெளியானது. அந்தப் புகைப்படத்தின் மூலம் லீஃபர் உலகப் புகழ் பெற்றதுடன், கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த விளையாட்டுக்கள புகைப்படமாகவும் இது தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தப் படத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய நபர் ஹெர்ப் ஸ்கார்ஃப்மேன். இப்படத்தில் முகமது அலியின் கால்களுக்கு நடுவில் கண்ணாடி அணிந்த வழுக்கை தலையுடன் கூடிய ஒரு நபரைப் பார்க்கிறீர்கள் அல்லவா? அவர்தான் இப்போட்டியைப் படம்பிடிக்க சிறந்த இடத்தை முதலில் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஸ்கார்ஃப்மேன்.

நீல் லீஃபர்

1942-ம் ஆண்டு நியூயார்க் நகரில் ஏழ்மை நிறைந்த ஒரு பகுதியில் பிறந்தவர் நீல் லீஃபர் (Neil Leifer). இவருக்கு 13 வயது இருந்தபோது ‘ஹென்றி ஸ்டிரீட் செட்டில்மென்ட் ஹவுஸ்’ என்ற அமைப்பு இவரைத் தத்தெடுத்துக் கொண்டது. கைத்தொழில்களைக் கற்றுக்கொடுக்கும் விதமாகப் புகைப்படம் எடுக்கும் கலையை அந்த அமைப்பு இவருக்குக் கற்றுக்கொடுத்தது. இயற்கையிலேயே கலைகளின்மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நீல் லீஃபர், இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

துல்லியமாகப் படமெடுக்கும் வித்தையைக் கற்றுக்கொண்ட இவர், நியூயார்க் நகரில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளைப் படம்பிடித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேட்டட் பத்திரிகைக்கு விற்றார். பின்னர் அப்பத்திரிகைக்காகப் படமெடுக்கத் தொடங்கிய லீஃபர், தொடர்ந்து அப்சர்வர் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளிலும் பணியாற்றி உள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in