பேசும் படம் - 26: பீட்டில்ஸ் குழுவின் குழந்தைத்தனம்

பேசும் படம் - 26: பீட்டில்ஸ் குழுவின் குழந்தைத்தனம்

டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் புகைப்படக் காரரான ஹாரி பென்ஸனுக்கு சீரியஸான விஷயங்களைப் படம் பிடிப்பதில்தான் விருப்பம் அதிகம். இசை, விளையாட்டு, சினிமா போன்ற விஷயங்களைத் தொட்டுக்கூட பார்க்கமாட்டார். 1964-ம் ஆண்டில் ஒருநாள், உகாண்டாவில் ஒரு முக்கியப் பிரச்சினையைப் படம் பிடிப்பதற்காக கிளம்பிக்கொண்டிருந்தார் பென்ஸன். அந்த நேரத்தில் அவருக்குப் பத்திரிகையின் ஆசிரியரிடம் இருந்து அழைப்பு வந்தது.

“பீட்டில்ஸ் இசைக்குழுவினர் பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளனர். அவர்கள் அங்கிருக்கும் நாட்களில் உடன் இருந்து படங்களை எடுக்க வேண்டும்” என்று பென்ஸனிடம் கூறினார் ஆசிரியர். ஆனால், பென்ஸனுக்கு அதில் விருப்பமில்லை. அவரது  மனமெல்லாம் உகாண்டாவில் இருந்தது. பீட்டில்ஸ் குழுவைப் படம் பிடிக்க வேறு யாரையாவது அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால், ஆசிரியர் அதை ஏற்கவில்லை. உலகின் மிகச்சிறந்த இசைக்குழுவான பீட்டில்ஸை, பத்திரிகையின் முதன்மை புகைப்படக்காரரான பென்ஸனால்தான் சிறப்பாகப் படம் பிடிக்க முடியும் என்று அவர் நம்பினார். அதனால் அவர்தான் இந்த வேலையைச் செய்தாக வேண்டும் என்று உத்தரவு போட்டார். அதனால் வேறு வழியின்றி பீட்டில்ஸ் குழுவைப் படம் பிடிக்க கிளம்பினார் பென்ஸன்.

ஜான் லெனன், பவுல் மெக்கார்டினி, ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் ரிங்கோ ஸ்டார் ஆகிய கலைஞர்களைக் கொண்ட ராக் இசைக்குழுவான பீட்டில்ஸ், இங்கிலாந்தின் லிவர்பூல் மாகாணத்தில் உருவாகி உலகம் முழுக்க இசைப் புயலாய் சுழன்று அடித்துக்கொண்டிருந்த காலம் அது. பீட்டில்மேனியா என்று ஒரு வார்த்தையே உருவாகும் அளவுக்கு உலகமெங்கும் அவர்களுக்கு ரசிகர் பட்டாளம் இருந்தது. பாடல்கள் மட்டுமின்றி தோற்றம், கச்சேரி செய்யும் ஸ்டைல் ஆகியவற்றால் இசையுலகையே இவர்கள் கட்டி வைத்திருந்தார்கள்.

இந்த அளவுக்குப் புகழ்பெற்றவர்களாக பீட்டில்ஸ் குழுவினர் இருந்தபோதிலும், அரை மனதுடன் அவர்களைப் படமெடுக்கச் சென்றார் பென்ஸன். அவர் சென்ற நேரத்தில் பாரிஸ் இசை நிகழ்ச்சிக்காக ஃபோண்டேயின்புளூ என்ற இடத்தில் அவர்கள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தனர். காரில் அங்கு சென்ற பென்ஸன், கொஞ்சமும் சுவாரசியமில்லாமல் தன் கேமராவோடு ஃபிளாஷைப் பொருத்திக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடலை பீட்டில்ஸ் குழு இசைக்க, அதில் மயங்கிப்போய் நின்றார் பென்ஸன். அடுத்த பாடல், அதற்கு அடுத்த பாடல் என்று ஒவ்வொரு பாடல்களாக பீட்டில்ஸ் குழு பாடிக்கொண்டே போக, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பென்ஸனின் மனதுக்குள் ‘கம்’ போட்டு ஒட்டிக்கொண்டனர். ஒரு சில நிமிடங்களிலேயே பீட்டில்ஸ் குழுவின் அடிமையாகிவிட்ட பென்ஸன், “இனி இவர்களை விடக்கூடாது. எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து செல்லவேண்டும். இவர்களின் இசைமழையில் நனைந்துகொண்டே படங்களை எடுக்கவேண்டும்” என்று தீர்மானித்துக்கொண்டார்.

அதே நேரத்தில் அன்றைய தினம் பென்ஸன் எடுத்த படங்கள், பீட்டில்ஸ் இசைக்குழுவினருக்கும் பிடித்துப் போக இரு தரப்புக்கும் இடையே ஆழமான நட்பு உருவானது. பீட்டில்ஸ் குழுவினரின் ஹோட்டல் அறைக்குள் எந்த நேரமும் செல்லும் அதிகாரத்தை அந்த நட்பு கொடுத்தது.

ஒருநாள் பீட்டில்ஸ் குழுவினருடன் பென்ஸன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அக்குழுவில் உள்ள ஒருவர், “நேற்று இரவு நாங்கள் அறைக்குள் தலையணையால் சண்டை போட்டுக்கொண்டோம். மிகவும் வேடிக்கையாக இருந்தது” என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் பென்ஸனின் மூளைக்குள் ஒரு யோசனை எழுந்தது. பிரபலங்களாக உள்ள பீட்டில்ஸ் குழுவினர் தலையணைச் சண்டை போடுவதைப் படமெடுத்து பத்திரிகையில் வெளியிட்டால் நன்றாக இருக்குமே என்பதுதான் அந்த யோசனை. அதை பீட்டில்ஸ் குழுவினரிடம் சொல்ல, அவர்கள் முதலில் மறுத்தனர். மிகவும் குழந்தைத்தனமாக இருக்கும் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், பென்ஸன் விடவில்லை. தனது நட்பை பயன்படுத்தி அதற்குச் சம்மதிக்கச் செய்தார். இதைத்தொடர்ந்து பென்ஸனுக்காக அவர்கள் மீண்டும் செல்லச் சண்டை போட உற்சாகத்துடன் பல்வேறு கோணங்களிலும் அவற்றை க்ளிக்கினார் பென்ஸன். பீட்டில்ஸ் குழுவினர் இடையிலான நட்பை ஆழமாக வெளிப்படுத்திய இப்படம் புகழ்பெற்ற டைம் பத்திரிகையின் மிகச்சிறந்த 100 படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது.

ஹாரி பென்ஸன்

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் 1929-ம் ஆண்டு பிறந்தவர் ஹாரி பென்ஸன் (harry benson). துடிப்பான புகைப்படக்காரரான ஹாரி பென்ஸன், டெய்லி எக்ஸ்பிரஸ், லைஃப், வானிட்டி ஃபேர், பீப்பிள் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளுக்காகப் படங்களை  எடுத்துள்ளார். பீட்டில்ஸ் குழுவினருடன் நெருக்கமாக இருந்த பென்ஸன், அவர்களின் சுற்றுப்பயணங்களைப் படம் பிடிப்பதற்காக அமெரிக்கா சென்றார். பின்னர் அங்கேயே தங்கியிருந்து பல்வேறு பிரபலங்களைப் படம் பிடித்தார். ரீகன் முதல் ஒபாமா வரை பல்வேறு அமெரிக்க அதிபர்களையும், மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்களையும் தனிப்பட்ட முறையில் பல படங்களை இவர் எடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in