
பி.எம்.சுதிர்
தென் ஆப்பிரிக்க மக்களால் மறக்க முடியாத நாள் 11-02-1990. அந்நாட்டு மக்களுக்காகவும், நிறவெறிக்கு எதிராகவும் 27 ஆண்டுகாலம் கொடுஞ்சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா, விடுதலையாகி மக்கள் முன் மீண்டும் தோன்றிய நாள் அது. மண்டேலாவுக்குக் கிடைத்ததைப் போல் தங்களுக்கும் விரைவில் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை தென் ஆப்பிரிக்காவின் கறுப்பின மக்களுக்கு ஏற்பட்ட நாள் என்றும் அதைச் சொல்லலாம்.
மண்டேலா சிறையில் அடைபட்டிருந்த காலகட்டத்தில் அந்நாட்டின் ஒரு தலைமுறையே அவரை நேரில் பார்க்கவில்லை. தங்களுக்காக ஒரு தலைவன் சிறையில் இருந்தபடியே போராடிக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடன் அவரது வரவுக்காக அவர்கள் காத்திருந்தனர். சிறைச்சாலையின் கடுமையான விதிகளால், மண்டேலாவின் புகைப்படங்கள்கூட அவ்வளவாக வெளிவராமல் இருந்த நிலையில், அவர் விடுதலையாவதைக் கேள்விப்பட்டதும் ஆயிரக்கணக்கானோர் அவரைப் பார்க்க குவிந்தனர். பொதுமக்கள் மட்டுமின்றி பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரைப் படமெடுக்கும் ஆசையில் சர்வதேச பத்திரிகையாளர்களும் தென் ஆப்பிரிக்காவில் குவிந்தனர். அப்படி வந்து சேர்ந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஏலன் டன்னென்பாம் எடுத்த புகைப்படத்தைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.
பெருந்திரளான மக்கள் அளித்த இத்தகைய வரவேற்புக்கு மண்டேலா பொருத்தமானவர் என்பது அவரது வரலாற்றைப் பார்த்தாலே புரியும்.