மண்... மனம்... மனிதர்கள்! - 8

கல்லுளி மங்கன்!   (தொடர்ச்சி)
மண்... மனம்... மனிதர்கள்! - 8

‘புதையல்’ என்னும் வார்த்தைக்கு வசமிழக்காதவர் யார் ?

பொதுவாக காணாப் பொருளைக் காணப் போகிறோம் என்றவுடன் பரவசமாகி விடுகிறார்கள் மனிதர்கள். அந்தப் பொல்லாத பரவசத்தால் ஹார்மோன் பேலன்ஸ் தவறிப்போக படபடப்புக்கு ஆளாகிறார்கள்.

படபடப்புக்கு ஆட்பட்ட மனிதர்கள் அவசரப்படுகி றார்கள். ஆசை வயப்படுகிறார்கள். அந்த ஆசையின் உச்சம் உடோஃபிய உலகம். அதன்பின் அந்த மாய உலகிலிருந்து மீள்வது கடினம்.



அவ்வளவு ஏன்... சம்மர் லீவில் வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் சொந்தக்காரர்களிடம் “சாயந்தரம், பீச்சுக்குப் போவோம்...” என்று சொல்லிவிட்டால் போதும், தேன் குடித்த நரிபோல சுற்றிச்சுற்றி வருவார்கள்.

லேடி வெலிங்டன் ஸ்கூலைக் கடக்கும்போதே தூரத்தில் கேட்கும் அலையோசை சுண்டியிழுக்க வயது வித்தியாசமே இல்லாமல் முகம் மாறிக் குதூகலிப்பார்கள்.

சற்றே சரிந்த கடற்கரையில் உறவுகளின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு நிற்கும் அவர்களது முழங்காலுக்கு மேல் பேரோசையோடு அலை மோதி எழும் அந்த நேரம்...பெருங்கூச்சலோடு அவர்களின் உடோஃபியன் உலகம் நொறுங்கிப் போகும்.

காணக் கிடைக்கும் ஒரு கடற்கரைக்கே கூச்செரி கிறது என்றால், நான்காயிரம் வருடத்துக்கு ஒருமுறை வெளிப்படும் நாக மாணிக்கக் கல்லை கண்டடைந்து விட என்ன பாடுபடும் மனித மனம்? பட்டது !

மூக்கில் ரத்தம் சொட்டச்சொட்ட சேரில் சாய்ந்திருந்த ஜார்ஜை நோக்கி பதற்றமாக ஓடிவந்த அந்தப் பெரிய மீசைக்காரர் ரகசியக் குரலில் கடிந்து கொண்டார்.

“படிச்சுப் படிச்சு சொன்னேனே... கேட்டியா..?”

சடங்கு சுத்துவதுபோல பணப் பையோடு ஜார்ஜை சூழ்ந்துகொண்ட பெரிய மனிதர்கள் எல்லோரும் நெற்றி வியர்வையோடு மெல்ல விசாரித்தார்கள்.

“என்ன ஆச்சுண்ணே..?”

“இப்பம்தான் அது பிடிபட்டிருக்கு. இன்னும் வீரியம் குறையல. சத்தம் போடாம பாத்துட்டுப் போயிடுடான்னு இவன்கிட்ட பல தடவை சொல்லியிருக்கோம். உங்களுக்கும் சொன்னோமா இல்லையா..?”

“ஆமாங்கண்ணே...”

“ஐயரு வந்து சாந்தி பூசை முடிச்ச பொறவுதான் நாம அதைக் கண்ணால பாக்க முடியும். ஏட்டுல அப்படித்தான் சொல்லி வெச்சிருக்கு. பாருங்க, ஒரு வாய் டீ குடிக்க திரும்பக்கொள்ள இவன் பாட்டுக்கு நடுச் செங்கல்ல லேசா அகட்டி எட்டிப் பாத்துட்டான்... அடிச்சிருச்சு..!”

“ஸாரி, காளியண்ணே...” முனகினான் ஜார்ஜ்.

ஐயப்பன் என்னைப் பார்க்க நான் ஜார்ஜைப் பார்த்தேன்.

மூக்கில் இருந்து வழிந்த ரத்தத்தைத் தொட்டு இரண்டு விரலில் நசுக்கிப் பார்த்துக்கொண்டிருந்த ஜார்ஜைப் பார்க்கப்பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

“கிளம்பு ஜார்ஜ்... எங்கயாவது ஃபர்ஸ்ட் எய்டு முடிச்சுக்கிட்டு ஊருக்குப் போயிடலாம்...” என்றேன்.

காளியண்ணன் சன்னக்குரலில் கத்தினார்.

“அயீய்யே... நீங்க ஒண்ணு...கொஞ்சம் பொறுங்க...” என்றவரின் கையில் மஞ்சள் நிற நீர் அடங்கியதொரு சொம்பு இருந்தது.
மேலே கொஞ்சம் வேப்பிலைகள் மிதந்து கொண்டிருக்க...அதை அப்படியே ஜார்ஜின் தலையில் மளமளவென ஏதோ உச்சரித்துக்கொண்டே சரித்தார். வழிந்து வந்த மஞ்ச தண்ணீரோடு ஜார்ஜின் மூக்கைப் பற்றிப் பிழிந்து எடுத்தார்.

“தூங்கி எழுந்திருங்க தம்பி சரியாயிரும்...அது சாமி மாதிரிங்க.... லேசா கண்டிக்கும். அவ்வளவுதான்...”

இப்போது ஜார்ஜ் முகத்தில் மெல்ல சிரிப்பு வந்துவிட எல்லோருக்கும் நிம்மதியானது..

“நாளைக்கு அதிகாலையே ஐயரு வந்துருவாரு... 

கரெக்ட்டா ஒருமணி நேரம் பூஜை... முடிஞ்ச கையோடு அதைப் பாத்துறலாம்...”

“ஆவட்டும்ணே...” என்றபடி திருப்தி கொண்டவர்களாய் அந்தப் பெரிய மனிதர்கள் கிளம்ப யத்தனிக்க...

அவர்களை அருகே அழைத்தார் காளியண்ணன்.

“தங்கப்போற ஹோட்டல்ல கேட்டா, சும்மா நிலம் கிரயம் பண்ண வந்திருக்கோம்னு மட்டும் சொல்லிக்குங்க...மேட்டர் லீக் ஆயிறக் கூடாது. பொறவு அங்கக்கிங்க கூட்டம் சேர பிரச்சினை ஆகிரும்... புரிஞ்சுக்குங்க...”

“அதெல்லாம் இருந்துக்குறோம்ணே... நீங்க உள்ளாற போய் பாத்துக்குங்க. இப்பம் காசு ஏதும் குடுத்துட்டுப் போணுமாண்ணே..?”

“எதுக்கு? பொருளைப் பாத்துட்டு முடிவு பண்ணிக்கிரலாம். சீக்கிரம் படுத்து எழுந்திருச்சு, வந்திருங்க...”
காரில் வந்து ஏறும்போது சலித்துக்கொண்டேன்.

“கிளம்பிடலாம்ப்பா...நாளைக்கு ஸ்ருதிலயா கம்போஸிங். இன்னும் பல்லவியே தரல. அரவிந்த் சார் மூஞ்ச காட்டுவார்ப்பா...” என்று முறையிட்டுக்கொண்ட என்னை இருவரும் முறைத்தார்கள்.

“சும்மா வந்துருமாடா ரெண்டு கோடி? கடை பிசினஸை விட்டுட்டு நானே சைலன்ட்டா உக்காந்திருக்கேன்...ஒரு நைட்டு தங்குனா என்ன சீரழிஞ்சு போயிடுவியோ...” மினுமினுத்த ஐயப்பனின் கண்களை ஆச்சரியமாக பார்த்தேன்.

ஏதோ ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம்.

வெளிர் நீல பெயின்ட் அடித்த கண்றாவி லாட்ஜ் ஒன்றில் இடம் கிடைக்க, மனம் பிரட்டும் ஊதுபத்தி வாசனையோடு ராவெல்லாம் விழித்து என்னென்னத்தையோ பேசிக்கொண்டிருந்தோம்.

அதிகாலை நான்கு மணிக்கே குளித்து ரெடியாகி சண்முகத்தை எழுப்பிக்கொண்டு ஷெட்டுக்கு விரைந்தோம்.
சென்று சேர்ந்தபோது அந்த ஷெட்டில் யாரையும் காணோம் !

நடு ரோட்டில் அலங்கமலங்க விழித்துக் கொண்டிருந்த எங்களை தூரத்து மரத்துக்குப் பின்னால் இருந்த காளியண்ணன் அழைத்தார்.

“எப்படி லீக்காச்சுன்னே தெரியலப்பா...நடுராவுல ஜனம் சேர ஆரம்பிச்சிருச்சு... ஷெட்டோட எல்லாரும் செண்டாங்காட்டுக்குப் போயாச்சு. உங்களுக்காகத்தான் காத்திருந்தேன். கிளம்புங்க...”

“செண்டாங்காடா... அது எங்கருக்கு?”

“சும்மா இங்கனக்குள்ளதான்...”

சுமார் இரண்டு மணி நேர பயணத்துக்குப் பின் செண்டாங்காடு .

“ஐயையோ...போலீஸ் ரெய்டாம்...சிவன் கோயில் பக்கம் வரச் சொல்லியிருக்காங்க.”

“நாளைக்குதான் அமாவாசை... பூசைக்கு சரியான நாளாம். இருக்கச் சொல்லியிருக்காங்க. வந்துட்டீங்கல்ல பொறுங்க...”

ஒரு கட்டத்தில் எனக்குக் கோபம் வந்து காளியண்ண னோடு அடிதடியாகிவிட, “சும்மார்றா... காரியத்த கெடுக்காதே” என்று என்னைத் தடுத்து தள்ளிவிட்டான் ஐயப்பன்.

இப்படியே பெட்ரோல் அடிப்பதும், தின்பதும், கண் விழிப்பதுமாக மூன்று நாள் ஓடிவிட்டது. மொத்தமும் ஐயப்பன் செலவு !
ஒருகட்டத்தில் இது சரிப்படாது என்ற முடிவுக்கு வந்த ஐயப்பன், என்னை அடித்துப் பார்த்தான்.

“உன்னை நம்பித்தானே வந்தேன்...”

“செருப்பால் அடிப்பேன்...”

“வுட்றா, ஊருக்குத் திரும்பலாம்...”

அப்போது நாங்கள் திருச்சியில் ஒரு லாட்ஜில் இருந்தோம். ஜார்ஜ் அமைதியாக இருந்ததும் அவனை ஐயப்பன் கோபித்துக்கொள்ளாமல் இருந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சென்னை வந்து சேர்ந்து வீட்டில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஒருவழியாக செட்டிலானோம்.

அன்றாடம் பேசிக்கொள்ளும் நானும் ஐயப்பனும் ஒருவரை ஒருவர் கூசிக்கொண்டிருந்தோம்.

அன்று, சென்னை மவுன்ட்ரோட்டின் மத்தியில் எல்லீஸ் ரோடு கார்னரில் குஷ்பு பார் என்று ஒன்று இருந்தது. அதன் எதிரே தள்ளு வண்டியில் சுண்டலும் சமோசாவும் அட்டகாசமாக இருக்கும்.

அங்கே என் வெண்ணிலா நண்பர்களோடு அரட்டை அடித்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரம் குஷ்பு பாரிலிருந்து ஜார்ஜும் காளியண்ணனும் வெளிப்பட்ட தைக் கண்டுவிட்டேன்.

ஜார்ஜை நண்பர்களிடம் விட்டுவிட்டு காளியண்ணனை மட்டும் மவுன்ட்ரோடு முனைக்கு தனியே கழற்றிக் கொண்டு போய் பிட்டு போட்டேன்.

“என்ன காளியண்ணே... மேட்டர் இன்னும் வரலையே..?”

“வந்து சேரலையாண்ணே... விடுங்கண்ணே.  இனிமே நீங்கதான் பூஸ்ட்டு..! ”

“பூஸ்ட்டுன்னா..?”

“ஜார்ஜ் சொல்லலையா..? ஷெட்டுக்கு வந்தீங்கல்ல... அங்க லோக்கல் பணக்காரங்க முட்டாத்தனமா காத்திருந்தாங்கல்ல... அவங்ககிட்ட உங்களைக் காட்டு வோம். பாத்தீங்களா சென்னை வரைக்கும் டிமாண்ட் எகிறுதுன்னு சொல்லி அவங்கள உசுப்பேத்தி ரேட்டை ஏத்துவோம். அப்படி ஒரு பூஸ்ட்டுதாண்ணே ஜார்ஜ்...”

“தப்பில்லையா காளியண்ணே..?”

“எல்லாம் ஜென்ம வினைண்ணே! பேராசை பிடிச்சவன் ஓடி வரான். விவரமான நாம சம்பாதிக்கிறோம். அவ்வளவுதாண்ணே...”
“.............”
“சொல்லுங்க. உங்களையும் பூஸ்டாக்கிக் காட்டுறேன்...”

“ஐயப்பன் எவ்வளவு செலவழிச்சாரு தெரியுமா ?”

“ஏன் செலவழிச்சாரு...?

“உங்களை நம்பித்தான்...”

“என்னை நம்பியவரு,  உங்களை நம்பலையேண்ணே...நீங்க என்னை அடிக்க வந்தீங்களே. அப்போ விட்டிருக்கணும் இல்லையா. ஏன் குறுக்க நின்னு தடுத்தாரு...?

“புரியல...ஏன் ?”

“அதுதான் ஜென்ம வினைங்குறேன்... என் மேல கோவிக்காதீங்க...”

“சரி, நீங்க கிளம்புங்க...”

“ஏண்ணே.... உங்க தோரணைக்கு சூப்பர் பூஸ்டா வரலாம்ணே...”

“போய்யா இங்கிருந்து... அப்புறம் வேற மாறி சொல்லிடுவேன்...”

“ஒண்ணு சொல்லட்டுமா..?”

“ம்ம்ம்..”

“உங்ககிட்ட பணம் சேர்றது கஷ்டம்ணே...”

“அப்படியாப்பட்ட பணம் எனக்குத் தேவையில்ல.”

“நீங்க பேசலைண்ணே... அது உங்க ஜென்ம வினை”

“இருந்துட்டுப் போகட்டும்... கிளம்பு.”

“ஜார்ஜை என்கூட அனுப்புங்க...”

“எதுக்கு..?”

“என்னைப் போகவிட்டு அவனை அடிப்பீங்க...அடிக்கிறதுன்னா ரெண்டு பேரையும் சேத்து அடிங்க. நான் நிக்குறேன்..!”

காளியண்ணனின் அந்த நேர்மை அசிங்கமாயிருந்தது.

“அப்படில்லாம் செய்யறதில்ல. சரி, கொஞ்சம் தள்ளி நில்லு... ஜார்ஜ் வருவான்.”

நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த ஜார்ஜை நெருங்கித் தனியே கழற்றிக்கொண்டு போய் அங்கிருந்த ஒரு எஸ்டிடி பூத்துக்கருகே நிற்கவைத்துக் கேட்டேன்.

“என்ன ஜார்ஜ்... சொல்லவேயில்ல.”

“சொல்லுங்க ஜி... என்ன சொன்னான் அந்தக் கிறுக்கன். பூஸ்டு கீஸ்டுன்னு உளறியிருப்பானே..?”

“ம்ம்ம்...”

“ஜி... அவன் சைக்காலஜியில எம்ஏ படிக்கும்போது மூளை கசங்கி லூஸாயிட்டான் ஜி. அவனுக்கு நாப்பது வயசாயிடுச்சு.

எப்படியாவது அவனை ஆளாக்கி கல்யாணம் செஞ்சி வெச்சிருங்க போதும்ன்னு அவங்க அப்பா என்கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்காரு ஜி...”

“ஜார்ஜ்..?”

“ஆமாம் ஜி...அவங்கப்பா புலிக்குடி ஜமீன்தார். குறையக் குறைய 1000 ஏக்கர் சொத்திருக்கு ஜி. அவனை சினிமாவுல நடிக்க வெச்சிட்டா மொத்த சொத்தையும் நம்ம பேர்ல எழுதி வெச்சுடறேன்னு சத்தியம் குடுத்திருக்காரு ஜி. கொஞ்சம் பொறுங்க. மொத்தமும் நமக்குத்தான் ஜி !”

ஜார்ஜை எட்ட இருக்கச் சொல்லிவிட்டு எஸ்டிடி பூத்தில் புகுந்து ஐயப்பனை லேண்ட்லைனில் மெல்லிய குரலில் அழைத்தேன்.
“சொல்லு...”

“ஜார்ஜும் காளியண்ணனும் இங்க இருக்காங்க. உடனே வா...”

“வேணாம் விட்றா...பகவான் பாத்துப்பான். நீ கிளம்பி வா, ஐயப்பன் ஆல்பம் பத்தி உன்கிட்ட பேசணும்னார் அப்பா...”

வெளிவந்த என்னிடம் சிரித்துக்கொண்டே கேட்டான் ஜார்ஜ்.

“என்ன ஜி, ஐயப்பன் இங்கே வரேன்னிருக்காரா..?”

“நீ திருந்தவே மாட்டியா ஜார்ஜ்..?”

“திருந்த வேண்டியது காளிதான் ஜி. அவன் லூஸு ஜி. அவனை ஆளாக்கிட்டா அப்புறம் 1000 ஏக்கர் நமக்குத்தான். நம்பலையா. வேணும்னா உங்க பசங்களை விட்டு என்னை அடிச்சுக்குங்க ஜி...”

“சீச்சீ...இனிமே என் மூஞ்சில முழிக்காதே ஜார்ஜ். ப்ளீஸ்...”

“அப்புறம் உங்க இஷ்டம் ஜி...”

தள்ளாட்டமாக நடந்தோடிய ஜார்ஜ் பீடி இழுத்துக் கொண்டிருந்த காளியண்ணனை தோளோடு அணைத்து இழுத்தபடி மவுன்ட் ரோட்டை கிராஸ் பண்ணக் காத்திருந்தான்.

மனம் வெறுத்துத் திரும்பிய நான் சமோசா சுண்டலுக்கு செட்டில் செய்துவிட்டு நண்பர்களோடு திருவல்லிக்கேணியை நோக்கித் திரும்பிய நேரம்...

பின்னால் தடதடவென சத்தம் !

மவுன்ட்ரோட்டின் மத்தியிலிருந்து களேபரமான அலறல்...

“ஐயோ...யார் பெத்த புள்ளைங்களோ...”

ஜென்ம வினை!?

(சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in