
பி.எம்.சுதிர்
ஜப்பானிய பத்திரிகையான மைனிசி ஷிம்பனில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவர் யசுஷி நாகோ. துடிப்பான புகைப்படக்காரரான இவருக்குப் போராட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றைப் படம்பிடிக்க மிகவும் பிடிக்கும். அதே நேரத்தில், இவருக்குப் பிடிக்காத வேலைகளில் ஒன்று பொதுக்கூட்டங்களைப் படமெடுப்பது. ஒரு புகைப்படத்தை எடுப்பதற்காக தலைவர்களின் நீண்ட நேர உரையைக் கேட்டு நேரத்தை வீணடிப்பதில் இவருக்கு விருப்பம் இருந்ததில்லை. “இந்த வேலையில் என்ன சவால் இருக்கிறது?” என்பதே இவரது கேள்வியாக இருந்தது.
ஆனால் 1960-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி இவருக்கு அரசியல் கூட்டம் ஒன்றை படம் எடுக்கும் பணி வழங்கப்பட்டது. “டோக்கியோ நகரில் இன்று ஜப்பான் சோஷலிஸ கட்சித் தலைவர் இனிரோ அசானுமாவின் பொதுக்கூட்டம் நடக்கிறது. நீங்கள் அதைப் படம் பிடிக்க வேண்டும்” என்று ஆசிரியர் சொன்னதும் வேண்டா வெறுப்பாக அந்த நிகழ்ச்சிக்கு சென்றார் யசுஷி நாகோ. ஆனால், அந்த நிகழ்ச்சி தனது வாழ்க்கையையே புரட்டிப் போடப்போகிறது என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.
யசுஷி நாகோ படமெடுக்கச் சென்ற தலைவரான இனிரோ அசானுமா, அப்போது புகழ்பெற்ற ஜப்பானிய அரசியல் கட்சித் தலைவர். 1930-களில் வலதுசாரி ஆதரவாளராக இருந்த அவர், 2-ம் உலகப் போருக்குப் பிறகு பொதுவுடைமைவாதியாக மாறினார். ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார்.