பேசும் படம்: உலகம் கொண்டாடிய திருமணம்

பேசும் படம்: உலகம் கொண்டாடிய திருமணம்

பி.எம்.சுதிர்

உலகில் இதுவரை நடந்ததிலேயே பிரம்மாண்டமான, பிரபலமான, அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திருமணம் என்றால் அது இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - இளவரசி டயானாவின் திருமணம்தான். இந்தத் திருமணத்தின்போது, காதல் ஜோடிகள் ஒருவரையொருவர் முத்தமிட்டுக்கொண்ட இந்தப் புகைப்படம் கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த புகைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

1961-ல், இங்கிலாந்தில் உள்ள நார்ஃபோக்கில் (Norfolk) சாண்டிரிங்கம் எஸ்டேட் (Sandringham estate) என்ற இடத்தில் பிறந்தவர் டயானா. ஸ்பென்சர்ஸ் என்று அழைக்கப்பட்ட இவரது குடும்பத்தினர், பல தலைமுறைகளாக அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்தனர். டயானாவின் மூத்த சகோதரியான சாராவைத்தான் முதலில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் காதலித்து வந்தார். ஆனால், நாளடையில் இவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் டயானாவின் அழகாலும், துடிப்பான செயல்பாடுகளாலும், ஏழைகளுக்கு உதவும் அவரது கருணை உள்ளத்தாலும் ஈர்க்கப்பட்ட இளவரசர் சார்லஸ், அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். டயானாவுக்கும் சார்லஸைப் பிடித்துப்போக, விஷயம் அரச குடும்பத்தின் காதுகளை எட்டியது. அவர்களும் இந்தக் காதலை ஏற்றுக்கொள்ள, மிக பிரம்மாண்டமான திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

1981-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி லண்டனில் உள்ள புனித பால் தேவாலயத்தில் நடந்த சார்லஸ் - டயானா ஜோடியின் திருமணம், இதுவரை உலகில் நடந்த திருமணங்களிலேயே அதிக பிரம்மாண்டமான, அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திருமணமாகவரலாற்றில் இடம் பிடித்தது. புதுமணத் தம்பதிகளை நேரில்காண்பதற்காகவும், அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காகவும்6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், திருமணம் நடந்த தேவாலயத்தைச் சூழ்ந்திருந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக 4 ஆயிரம் போலீஸாரும், 2,200 ராணுவ வீரர்களும் தேவாலயத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். உலக அளவில் 74 நாடுகளைச் சேர்ந்த 75 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தொலைக்காட்சியில் நேரலையில் இந்தத் திருமணத்தைப் பார்த்து ரசித்தனர். கடந்த நூற்றாண்டில் மிக அதிகம் பேரால் நேரலையில் கண்டுகளிக்கப்பட்ட நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது. அக்காலகட்டத்தில் தொலைக்காட்சி அதிக அளவில் பிரபலமாக இல்லாத நிலையில் கோடிக்கணக்கானோர் இத்திருமணம் தொடர்பான நேரடி வர்ணனையைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in