30,000 சிறுமிகள் கர்ப்பம்... கொரோனா காலகட்டத்தில் நடந்த கொடூரம்!

30,000 சிறுமிகள் கர்ப்பம்... கொரோனா காலகட்டத்தில் நடந்த கொடூரம்!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் 2020 முதல் 2022 வரை மூன்று ஆண்டுகளில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருப்பது குறித்த அதிர்ச்சி தரும் தகவல்  தற்போது தெரியவந்துள்ளது.

2020 காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு திருமணங்கள் எளிமையாகவும் சில இடங்களில் ரகசியமாகவும் நடைபெற்றன. அந்த நேரத்தில் கிராமப்புறங்களில் இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்றதாக  புகார் எழுந்தது. அந்த சமயத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளும் அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையெல்லாம் உண்மை என நிரூபிக்கும் விதமாக தற்போது அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. 

தமிழ்நாட்டில்  சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி 2020 முதல் 2022 வரையான காலகட்டங்களில் மூன்று ஆண்டுகளில் 18 வயதுக்கு உட்பட்ட  சுமார் 30,000 சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைகளும் இதனை உறுதிப்படுத்துகிறது.  

முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பமடைந்தற்கு காதல் விவகாரங்கள் தான் அதிகபட்ச காரணமாக இருக்கிறது. அத்துடன்  இளம் வயது திருமணம்,  இளம் வயதில் ஈர்ப்பு காரணமாக உடலுறவு, அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற காரணங்களும் உள்ளன. குழந்தைத் திருமணம் அல்லது பாலியல் அத்துமீறல் ஆகியவற்றின் மீது போக்சோ சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால் முப்பதாயிரம் சிறுமிகள் கர்ப்பம் அடைந்த நிலையில் வெறும் 13,000 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

மீதமுள்ள 17,000 குழந்தை திருமணங்கள் அல்லது பாலியல் பலாத்கார சம்பவங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது. இது சுகாதாரத் துறையினருக்கு போக்சோ வழக்கு குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது. மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் சட்ட விழிப்புணர்வு இல்லாததால் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

மருத்துவமனைக்கு வரும் இதுபோன்ற விவகாரங்களை அவர்கள் உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் அளித்திருந்தால் மீதமுள்ள இளம் வயது கர்ப்பம் விவகாரங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கலாம். இளம் வயது திருமணங்கள் அதிகரிக்கும் நிலையில் வீட்டிலேயே சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை. தனியாக இருக்கும் சிறுமிகளுக்கு அவர்களின் உறவினர்கள் அல்லது காதல் ஆசை காட்டி அறிமுகமானவர்கள் மூலமாகவே பெரும்பாலான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுகின்றன. இதனைத் தவிர்க்க பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in